Friday, February 29, 2008

ஷாருக் கான் - சில அரிய புகைப்படங்கள்!

ஷாருக்கானின் பெற்றோருடன் அவரது அக்கா. பெற்றோர் மறைவால் மனரீதியாக பாதிப்படைந்த ஷாருக்கின் சகோதரி திருமணமே செய்துகொள்ளாமல் ஷாருக் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் என்று ஒரு பேட்டியில் ஷாருக் சொல்லியிருந்தார்.


ஷாருக்கின் அப்பா. அப்படியே ஷாருக் மாதிரியே இருக்கிறார் இல்லையா?
(ஷாருக்கை விட அழகாகவும் தெரிகிறார்). அழகான ஒரு ஹீரோவை
திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.மாணவனாக ஷாருக் கான்!


சினிமாவில் மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்களிலுமே கான் ‘கிங்' தான்!


கிரிக்கெட் வீரர் ஷாருக்!


நண்பர்களோடு ஷாருக். இன்று முழுநேரமும் சினிமா விளக்குகளின் வெளிச்சத்தில் வாழ்பவர், அன்று கேமிராவின் ப்ளாஷுக்கு கண்ணை மூடியிருக்கிறார்.
கையில் தம்மு!காதல் மனைவி கவுரியோடு ஷாருக்!

Thursday, February 28, 2008

சின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை!


பொழுதுபோக்குத் துறையில் உலக அளவில் மிக வேகமாக வளர்ந்துவரும் இந்திய நிறுவனம் பிரமிட் சாய்மீரா. பிரமிட் சாய்மீரா குழும நிறுவனங்களின் ஒரு அங்கமான பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் பல்வேறு உலக மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து வருகிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பிலும் கால்பதித்து, வெற்றிகரமாக இயங்கிவருகிறது.


தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் சிம்ரனை சின்னத்திரைக்கு அழைத்து வருகிறது பிரமிட் சாய்மீரா. நிகழ்ச்சியின் பெயர் “சிம்ரன் திரை”. சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரமிட் சாய்மீரா வழங்கப்போகும் ‘ஸ்பெஷல் ட்ரீட்' இது.

இதுபற்றி பிரமிட் சாய்மீரா குழுமத்தின் நிர்வாக இயக்குனரான திரு பி.எஸ்.சாமிநாதன் கூறியதாவது : “தொலைக்காட்சிகளில் அரதப்பழசான நிகழ்ச்சி வடிவங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இன்று இருக்கிறது. இல்லையேல் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் பார்வையாளரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். ஏற்கனவே பெண்களை வில்லிகளாக சித்தரித்து, எந்தப் புதுமையும் இல்லாமல் கதைகளை மட்டும் வளர்த்துக் கொண்டே செல்லும் போக்கு மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த வழக்கமான போக்கினை மாற்றும் தொடராக எங்கள் தொடர் அமையும். நல்ல கதைகளை புதுமையான சிந்தனையில், தரமான தொழில் நேர்த்தியில் வழங்கப் போகிறோம். இதன் மூலமாக இன்னமும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகிறோம். தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே இனி தொலைக்காட்சிகளில் இடம்பிடிக்க எங்களது ‘சிம்ரன் திரை' முன்னோடி நிகழ்ச்சியாக விளங்கும்”

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் லிமிடெட்டின் இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான திரு. கே.எஸ்.சீனிவாசன் கூறியதாவது: “சிம்ரனோடு பணிபுரிந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிம்ரன் கதாநாயகியாக வரவேண்டுமென்று மக்களே எஸ்.எம்.எஸ். மூலமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சிலகாலம் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிம்ரன் ஒதுங்கியிருந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை சினிமாத்துறையினராலும், ரசிகர்களாலும் நன்கு உணரமுடிந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், இப்போது எங்களோடு இந்த தொடரில் பணியாற்றிட சிம்ரன் ஒப்புக்கொண்டது பெருமகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்த தொடர் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, ரசிக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்”

தொடர்பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனத்தின் ‘கிரியேட்டிவ் ஹெட்' திருமதி. சுபா வெங்கட், “மாதந்தோறும் ஒரு புதிய கதையை இந்நிகழ்ச்சியில் காணமுடியும். மொத்தம் பண்ணிரெண்டு வித்தியாசமான கதைகள் ஓராண்டில் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை ஜெயா டிவியில் மார்ச் மூன்றாம் தேதி முதல் தினமும் இரவு 8.30 மணியிலிருந்து 9.00 மணி வரை காணலாம். சிம்ரன் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் இன்றைய நவீனப்பெண்களின் வெவ்வேறு பரிமாணங்களை பிரதிபலிப்பதாக அமையும். சிம்ரன் திரையின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இயக்குநரால், வெவ்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்படும். சினிமாவுக்குரிய பிரம்மாண்டத்தை சின்னத்திரையிலேயே இத்தொடர் மூலமாக ரசிகர்களால் உணரமுடியும். ஒவ்வொரு மொழியிலும் தினமும் இரண்டுமணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் இலக்கை பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.”

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘வண்ணத்துப்பூச்சி' கதை முதல் மாத தொடராக எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை இயக்குபவர் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா. ஏ.ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.குமரேசன் திரைக்கதை அமைத்திருக்கிறார். பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனத்தின் ‘கிரியேட்டிவ் ஹெட்' சுபா வெங்கட் வசனம் எழுதியிருக்கிறார்.

திரையுலகிலும், சின்னத்திரையிலும் பிரபலமான கதாசிரியர்கள், இயக்குனர்கள், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை சிம்ரன் திரைக்கு பயன்படுத்த பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த வித்தியாசத் தொடருக்கான இரண்டாவது கதை ஸ்ரீப்ரியாவால் எழுதப்படுகிறது. இயக்கப் போகிறவர் வெள்ளித்திரைக்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன்.

ரமேஷ் வினாயகம் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழில் சின்மயி குரலில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்தொடரின் டைட்டில் பாடல் பெரிதும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடலுக்கு நடன இயக்குனர் தினேஷ் நடனம் அமைத்திருக்கிறார். இதுவரை மெகாசீரியல் டைட்டில் மரபுகளை உடைத்து, நிகழ்ச்சியை காணும் ஒவ்வொரு பார்வையாளரையும் வசீகரிக்கும் வகையில் டைட்டில் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான பிரத்யேக விளம்பரங்கள் ஏற்கனவே ஜெயா டிவியில் ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருவதால் நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் ஆவலாக இருக்கின்றனர்.

சிம்ரன் திரை சிலீர் ஸ்டில்களை இங்கே காணலாம்!

'வண்ணத்துப்பூச்சி' பறந்தது!


கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கன்னித்தீவு போன்ற கதையமைப்புகளை கொண்ட மெகாத்தொடர்கள் மக்களுக்கு தரும் அயர்வு யாவரும் உணர்ந்ததே. வித்தியாசமான கதைகளோடும், மாறுபட்ட வடிவமைப்போடும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தரமான தயாரிப்பில் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டபோது, முதலில் படமாக்க எடுத்துக் கொண்ட கதை அமரர் சுஜாதாவின் “வண்ணத்துப் பூச்சி”. மாறுபட்ட கோணம், அள்ள அள்ள குறையாத சுவாரஸ்யம் என்றாலே அது சுஜாதா தான் என்பது நம் எல்லோரின் ஜீனுக்குள்ளும் பதிந்துவிட்ட ஒரு செய்தி.

அவரது கதையை தொடராக்கி நேற்றைய தினம் (27-2-08) சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில காட்சிகளை ஒளிபரப்பி, எங்கள் குழுமம் அறிவித்த ஒரு மணி நேரத்திலேயே செய்தி வருகிறது “வண்ணத்துப்பூச்சி கூட்டை விட்டு பறந்துவிட்டது”

இனி, வண்ணங்கள் மட்டுமே இங்கே மிச்சமிருக்கும்!

கலைத்துறை, எழுத்துத்துறை, அவர் பங்கேற்ற ஏனைய எல்லாத் துறைகளிலும் முடிசூடா மன்னராக விளங்கிய சுஜாதா அவர்களுக்கு பிரமிட் சாய்மீரா குழுமத்தின் அஞ்சலிகள்!!

Wednesday, February 27, 2008

ஏகன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா!


ராஜூசுந்தரம் கதை, திரைக்கதை இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் தலைப்பு, கதாநாயகி யாரென்று தெரியாமலேயே முதல்கட்ட படப்பிடிப்பு ஹாங்காங்கில் நடந்து முடிந்தது. சுமார் பதினைந்து நாட்கள் அங்கே நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருந்ததாம். அஜித்குமாரோடு சண்டையிட்டவர் ஜாக்கிசான் படங்களில் இடம்பெறும் ஒரு கலைஞர். ஜாக்கிசான் படங்களில் பணியாற்றிய “ஸ்டண்ட்” சிவா இந்த அனல்பறக்கும் சண்டைக்காட்சியை அமைத்திருக்கிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்த படக்குழுவினர் முதல் வேலையாக படத்துக்கு “ஏகன்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கதாநாயகியாக ஸ்ரேயா, பிபாஷா பாசு, கேத்ரினா கைப் என்று ஏகப்பட்டவர்களை பரிசீலித்தவர்கள் கடைசியாக எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் அஜித்தின் முந்தைய வெற்றிப்பட ஜோடியான நயன்தாராவையே கதாநாயகி ஆக்கியிருக்கிறார்கள். கோலிவுட்டில் நயன் காட்டில் தான் இப்பொது செம மழை!

மிக விரைவில் பாடல்காட்சிகளை படமாக்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு பறக்கப் போகிறது ஏகன் குழு!

Tuesday, February 26, 2008

அமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது!!


ஹாலிவுட்டுக்கு எப்படி ஆஸ்கர் விருதோ அதுபோல பாலிவுட், டோலிவுட், கோலிவுட்டுக்கெல்லாம் பிலிம்பேர் விருது. இந்தியாவின் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்ததாக பிலிம்பேர் விருதுக்கு கவுரவம் அதிகம்.

சென்ற வருட இந்திப் படங்களுக்கான பிலிம்பேர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கான் நடித்த “சக் தே இந்தியா” சிறந்தபடமாகவும், அப்படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும் ”சக் தே இந்தியா” தட்டிச் சென்றிருக்கிறது.

அமீர்கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்” திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய விருதுகளை அள்ளியிருக்கிறது. இப்படம் சர்வதேச அளவில் பேசப்பட்டிருப்பதால் சர்வதேச விருதுகள் சிலவற்றையும் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

”ஜாப் வே மெட்” திரைப்படத்தில் நடித்ததற்காக கரீனாகபூருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டிருக்கிறது. சாவரியா படத்தில் அறிமுகமான ரன்பீர் கபூர், ”ஓம் சாந்தி ஓம்” படத்தில் அறிமுகமான தீபிகா படுகோனே சிறந்த அறிமுகங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

”சீனி கம்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது தபுவுக்கு வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்த முறை ரிஷிகபூர் கைப்பற்றியிருக்கிறார். “குரு” திரைப்படத்துக்கு இசையமைத்தற்காக சென்ற ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Monday, February 25, 2008

ஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்!!


பலமொழிகளில் படங்கள் இயக்கும் இயக்குனர்களில் எந்த மொழிக்கு போனாலும் சொல்லிக் கொள்கிற வெற்றி பெற்றவர்கள் மிகக்குறைவே. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் தான் செல்லும் மொழிகளிலெல்லாம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அவர் இயக்கும் படங்கள் அனைத்துமே தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே பல கோடிகளுக்கு விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கை.

கேப்டன் விஜயகாந்த் படங்களிலேயே வித்தியாசமானதாகவும், வசூலில் சக்கை போடு போட்டதும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ”ரமணா”. அதுபோலவே தெலுங்கில் சிரஞ்சீவியை முருகதாஸ் இயக்கிய “ஸ்டாலின்” படைத்த சாதனை எந்த தெலுங்குப்படமும் எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறது. “ஸ்டாலின்” படத்தின் முதல் மூன்று நாள் வசூல் இன்றுவரை பெரிய சாதனை.

சூர்யாவுக்காக தமிழில் முருகதாஸ் இயக்கிய “கஜினி” பெரும் விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்றுத் தீர்ந்தது மட்டுமன்றி, வெளியான பின்பு ரசிகர்களின் பேராதரவோடு எல்லாத் தரப்புக்கும் நல்ல லாபத்தை தந்த படம். அதே படம் இந்தியில் ஆமிர்கான் தயாரிப்பில், அவரே நடிக்க முருகதாஸால் இயக்கப்பட்டு வருகிறது.

இன்னமும் படப்பிடிப்பு முடியாத நிலையில் இந்தி “கஜினி” 90 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தர்களிடம் விற்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்திய சினிமாவிலேயே இது ஒரு மகத்தான சாதனை. சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஷாருக்கின் “ஓம் சாந்தி ஓம்” திரைப்படம் 73 கோடிக்கு விற்றதே பெரியசாதனையாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் “கஜினி” 90 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படங்களுக்கு இருக்கும் இதுபோன்ற மிகப்பெரிய வணிக சாத்தியம், எதிர்காலத்தில் அவர் அமிதாப், ரஜினி போன்றவர்களை இயக்க ஏதுவாக இருக்கும் என்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் மிக அருமையான மிமிக்ரி கலைஞர் என்பது பலருக்கு தெரியாது. கிருபானந்த வாரியாரின் குரலை அச்சு அசலாக மிமிக்ரி செய்வாராம். கல்லூரிக் காலத்தில் மேடைகளில் தோன்றி மிமிக்ரி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். ரமணா படத்தில் இடம்பெறும் கல்லூரி மாணவர்களின் கதாபாத்திரங்களுக்கு தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் பெயரை சூட்டி தனது கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, February 23, 2008

சென்னையில் மகளிர் திரைப்பட விழா!

இந்தோ - கொரியன் கலாச்சார மற்றும் தகவல் நிறுவனம், தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் (NFDC), NFAI, இந்திய திரைப்பட விழா இயக்ககம் மற்றும் சத்யம் சினிமாஸ் ஆகியவை இணைந்து மகளிர் திரைப்பட விழா ஒன்றினை நடத்த திட்டமிட்டிருக்கின்றன.

தொடக்க விழா மார்ச் 1 அன்று சென்னை சத்யம் சினிமாஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. பிரபல திரைப்பட நடிகை நந்திதா தாஸ் துவக்கி வைக்கிறார். இந்தியா, கொரியா, நார்வே, ஈரான் ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட 84 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இவற்றில் 83 படங்கள் மகளிரால் இயக்கப்பட்டவை. 'மேகதேக தாரா' என்ற ஒரு திரைப்படம் மட்டும் வங்காள மொழி ஆண் இயக்குனரான ரித்விக் கடாக் என்பரால் இயக்கப்பட்டது.

இந்த 84 திரைப்படங்களில் சுஹாசினி மணிரத்தினம் இயக்கிய இந்திரா, சாரதா ராமநாதன் இயக்கிய ‘சிருங்காரம்', ஜானகி விஸ்வநாதன் இயக்கிய ‘கனவு மெய்ப்பட வேண்டும்' ஆகிய தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களை காண விரும்புபவர்கள் பிப்ரவரி 27 முதல் சத்யம் சினிமா வளாகத்தில் விற்கப்படும் அனுமதிச்சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். சத்யம் காம்ப்ளக்ஸ் மற்றும் பிலிம்சேம்பர் தியேட்டரில் இப்படங்கள் திரையிடப்படும்.

குறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை

சிறுநகரங்களில் வசிக்கும், திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு திரைப்படம் குறித்த தொழில்நுட்ப அறிவினை உருவாக்குவதற்காக குறும்பட பயிற்சிப் பட்டறை ஒன்றினை நிழல் திரைப்பட இயக்கமும், பதியம் திரைப்பட இயக்கமும் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் போன்ற துறைகளின் நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும். மார்ச் 10 முதல் 16 வரை ராமநாதபுரத்தில் இந்த பட்டறை நடக்கும். யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

நாடறிந்த இயக்குனர்களான அமீர், ஜெகன்னாதன், பாலாஜிசக்திவேல் போன்றவர்கள் இப்பட்டறையில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரபல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு இப்பட்டறையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Friday, February 22, 2008

பாஞ்சாலி சேரன்!

பத்து வேடத்தில் கமல் தசாவதாரத்தில் சாதனை புரிந்துகொண்டிருக்கிறார் என்றால் சத்தமில்லாமல் சேரனும் ஒரு புறத்தில் சாதனை புரிந்துகொண்டிருக்கிறார். சேரன் நடிக்கும் ‘ராமன் தேடிய சீதை' திரைப்படத்தில் அவருக்கு ஐந்து கதாநாயகிகளாம். இதற்கு முன்பாக ஜீவன் நடித்த நான் அவனில்லை திரைப்படத்தில் ஜீவன் நான்கு ஜோடிகளை சமாளித்ததே உச்சபட்ச சாதனையாக இருந்தது.

'ராமன் தேடிய சீதை' நகைச்சுவை ததும்பும் ஜனரஞ்சகப் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜெகன்ஜி. இதற்கு முன்பாக விஜய் நடித்த புதியகீதை, கோடம்பாக்கம் ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.

விமலாராமன், ரம்யா (குத்து ரம்யா அல்ல), கார்த்திகா, நவ்யா நாயர் ஆகியவர்களோடு கஜாலாவும் இப்படத்தில் நடிக்கிறார். ஏழுமலை, ராம் ஆகிய படங்களில் நடித்த கஜாலா அதற்குப் பின் தெலுங்குப் பக்கமாக ஒதுங்கிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

”ஒரு ஹீரோயினையே சமாளிக்க முடியாது, சேரன் எப்படித்தான் ஐந்து ஹீரோயின்களோடு சமாளிக்கப் போகிறாரோ?” என்று நகைச்சுவையாக குறிப்பிடுகிறார் ஒரு இளம் ஹீரோ!

விமலாராமன்


ரம்யா


நவ்யா


கார்த்திகா


கஜாலா

Thursday, February 21, 2008

அமீர்கானுக்கு மொட்டை!


வட இந்தியாவின் கமல்ஹாசன் என்று மும்பை மீடியாக்களால் புகழப்படும் அமீர்கான் வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் தயாரித்து நடித்த லகான் ஆஸ்கர் விருதுவரை சென்றதால் இனி வித்தியாச முயற்சிகளை மட்டுமே மேற்கொள்வேன் என்று அறிவித்திருந்தார்.

கடைசியாக அமீர் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளிவந்த 'தாரே ஜமீன் பர்' சர்வதேச அளவில் அமீருக்கு நல்ல பெயரை தந்திருக்கிறது. ஹிந்தி சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்தும் கூட ஒரு சிறுவனுக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இருந்தும், இமேஜ் பற்றி கவலைப்படாமல் 'கதை தான் முக்கியம்' என்று கூறி நடித்திருந்தார். எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ, அதே கதாபாத்திரமாக வாழ்வது என்பதை தன் கொள்கையாக வைத்திருக்கிறார் அமீர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்த “மொமெண்டோ” திரைப்படத்தை தழுவி தமிழில் கஜினியை எடுத்தார் இயக்குனர் முருகதாஸ். வசூல்ரீதியாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற கஜினி சூர்யாவுக்கு தமிழில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படத்தை பார்த்து பெரிதும் கவரப்பட்ட அமீர், அப்படத்தை ஹிந்தியில் தயாரித்து தானே நடித்து வருகிறார்.

தமிழில் இயக்கிய முருகதாஸே ஹிந்திப்படத்தையும் இயக்கிவருகிறார். கதாநாயகியாகவும் அதே அசின். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதாநாயகன் மொட்டைத்தலை கெட்டப்புடன் வரவேண்டி இருந்தது. இதற்காக சூர்யா தமிழில் மொட்டையெல்லாம் போடவில்லை. ஒப்பனை மூலமாக சமாளித்தார்.

ஆனால் கதாபாத்திரத்தோடு ஒன்றிவிடவேண்டும் என்று நினைக்கும் அமீர்கானோ கட்டாயம் மொட்டைப் போட்டே நடிப்பேன் என்று அறிவித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்த ஷெட்யூலில் அமீர்கான் மொட்டைத்தலையுடன் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு அமீர் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரமிட் சாய்மீராவின் “தாய்”


பிரமிட் சாய்மீரா மியூசிக் நிறுவனம் பெருமையோடு வழங்கும் முதல் பக்தி ஆல்பம் “தாய்”. இந்த ஆல்பத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் அரவிந்தர் ஆசிரம அன்னையின் புகழ்பாடும்.

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை அமைத்து எழுதிய பத்து பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. சித்ரா, அனுராதாஸ்ரீராம், சுஜாதா, திப்பு, விஜய் யேசுதாஸ் ஆகிய பிரபல பாடகர்கள் இந்த பாடல்களை பாடியிருக்கிறார்கள்.

அன்னையின் பிறந்தநாளான இன்று (21-02-2008) ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம், புதுச்சேரியில் நடைபெறும் ஒரு எளிய விழாவில் வெளியிடப்படுகிறது.

தசாவதாரம் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!!


தசாவதாரம் படத்தை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் கோலிவுட்டில். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்படுகிறது.

> அதிரடியாக பத்து வேடங்களில் கமல்ஹாசன்

> அசின் இரட்டை வேடத்தில்

> அமெரிக்க உளவாளியாக மல்லிகா ஷெராவத்

> தமிழில் முதன்முறையாக ஹிமேஷ் ரேஷ்மையா இசை

> நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறப்புத் தோற்றத்தில் ஜெயப்பிரதா

இதுபோன்ற எண்ணற்ற அம்சங்கள் ரசிகர்களை தசாவதாரம் பக்கமாக ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. ஆயிரம் பிரிண்டுகளுக்கு மேல் வெளியாகி இப்படம் சாதனை படைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

படத்தின் இசைவெளியீடு அடுத்தமாதம் சென்னையில் நடக்கிறது. தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஜாக்கிசானின் நெருங்கிய நண்பர் என்பதால் ஜாக்கிசான் இப்படத்தின் இசையை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் ஜாக்கிசான் இசைத்தட்டை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்காகவே ஜாக்கிசான் பிரத்யேகமாக சென்னைக்கு வருகிறார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை உலகளவில் பெரிய நிறுவனமான சோனி பிஎம்ஜி பெற்றிருக்கிறது. இந்நிறுவனம் உலகளாவிய அளவில் பெரிய திரைப்படங்களின் வர்த்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. சமீபகாலமாக பெரிய இந்தித்திரைப்படங்களின் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறது.


இதற்கிடையே தசாவதாரம் திரைப்படத்தில் ‘தலேர் மெஹந்தி' போன்ற தோற்றத்தில் கமல்ஹாசன் ரசிகர்களிடையே ஆடிப்பாடும் ஸ்டில் ஒன்று வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தசாவதாரத்தில் ஒரு அவதாரம் பாடகர் என்று தெரிந்ததுமே ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். கலைஞன் படத்துக்குப் பிறகு நீண்ட காலம் கழித்து மீண்டும் மைக் பிடித்து கமல் ஆடிப்பாட போகிறார்.

Wednesday, February 20, 2008

சிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்!

ஜெயா டிவி மூலமாக உங்கள் இல்ல வரவேற்பரைக்கு தினமும் வருகை தரப்போகும் 'சிம்ரன் சின்னத்திரைக்கு' ஒரு திரைப்படத்துக்கு இருக்கும் அளவிலான எதிர்ப்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையிலேயே ஒரு திரைப்படத்துக்குண்டான செலவு, தரத்தோடு 'சிம்ரன் சின்னத்திரை' பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சாம்பிளுக்கு சில பிரத்யேக ஸ்டில்ஸ் உங்களுக்காக.சந்தோஷ் சுப்ரமணியம்! - காதலும், காதல் சார்ந்ததும்!!


காதல் மலர்வதே அழகு. அழகாக மலர்ந்த காதலை யாருக்கும் வலியில்லாமல் சரமாய் தொடுப்பது ஒரு கலை. அந்த கலையில் சந்தோஷ் சுப்ரமணியம் தேறுகிறாரா என்று பார்க்க இன்னமும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ஜெயம் ரவி - ஜெனிலீயா ஜோடி என்றாலே புரிந்துகொள்ளலாம், இது ஒரு இளமைத் திருவிழா. சொந்த அண்ணனான ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு இது நான்காவது படம். வழக்கம்போல ரவி-ராஜா காம்பினேஷனில் மீண்டும் ஒரு ரீமேக். தெலுங்கில் சக்கைபோடு போட்ட ‘பொம்மரிலு' தமிழில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்' ஆகிறது.

ஜெயம் ரவிக்கு தந்தையாக பிரகாஷ்ராஜ். அப்பா-மகன் பாசப்பிணைப்பான காட்சிகள் நிறைய இருக்கலாம், கர்ச்சீப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான். சாயாஜி ஷிண்டேவும் இருக்கிறார், வில்லனா? இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய சடகோபன் ரமேஷ் இந்தப் படம் மூலமாக தனது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் நா.முத்துக்குமார், யுகபாரதி, பா.விஜய் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ‘திருட்டுப்பயலே' படத்தை தயாரித்த கல்பாத்தி எஸ்.அகோரம், ஏஜிஎஸ் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்துக்காக இப்படத்தை தயாரிக்கிறார்.

Tuesday, February 19, 2008

சுப்பிரமணியபுரம்!


கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில் யாருக்கு தான் ஆர்வம் இருக்காது? 1970களின் இந்தி சினிமாவை திரும்பிப் பார்த்த ஓம் சாந்தி ஓமை உலகமே பார்த்து ரசித்து கொண்டாடியது. இப்போது தமிழ் சினிமாவின் முறை. ஒரு தலைராகம் பார்த்திருப்பீர்களே? அதே காலக்கட்டத்துக்கு உங்களை கால இயந்திரம் மூலமாக அழைத்துச் சென்றால் மகிழ்வீர்கள் தானே? நம்மிடம் கால இயந்திரம் இல்லை. ஆனால் சினிமா இருக்கிறது.

1980களின் ஆரம்பத்தில் நடப்பது போன்ற கதை ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. பெல்ஸ் பேண்டோடு ஹீரோ, தாவணியில் ஹீரோயின் என்பதை கற்பனை செய்துப் பார்க்கவே இனிக்கிறது அல்லவா? அதுதான் “சுப்பிரமணியபுரம்”

புதுமுக இயக்குனர் சசிக்குமார் தானே தயாரித்து, இயக்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடக்கிறார். கதைக்களம் மதுரை. சசிக்குமார் இயக்குனர் பாலாவிடமும், பின்னர் அமீரிடமும் பணிபுரிந்தவர். தான் விரும்பிய வகையில் படத்தை இயக்க தானே தயாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறாராம்.

சென்னை-600028 படத்தில் ‘விஜயை' இமிடேட் செய்து நடித்த ஜெய் தான் கதாநாயகன். தெலுங்குப் படங்களில் சக்கை போடு போடும் ஸ்வாதி தான் கதாநாயகி. கஞ்சா கருப்பு நகைச்சுவைக்கு.

Saturday, February 16, 2008

முத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டாபெயர் : வீட்டில் வைத்தது ப்ரியா, மக்கள் அழைப்பது முத்தழகு!

பிறந்த இடம் : பாலக்காடு

வயசு : 23 (ஜூன் 4, 1984)

ரொம்ப பிடிச்சது : டேன்ஸ்

சுமாரா பிடிச்சது : ம்யூசிக்

கொஞ்சமா பிடிச்சது : சாட்டிங்

சாதனை : பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்தடுத்து பாலுமகேந்திரா, வினயன், அமீர் என்று பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தது.

திருப்பம் : பருத்திவீரன்

விருப்பம் : மம்முட்டி, மோகன்லால், திலீப் போன்றவர்களுடன் நடிக்க வேண்டும்.

மறக்கமுடியாதது : கோவா சர்வதேச படவிழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தது

சினிமாவுக்கு முன் : மாடலிங் - காஞ்சிபுரம் சில்க்ஸ், ஈரோடு சில்க்ஸ், லஷ்மி சில்க்ஸ் என்று எல்லாமே பட்டுப்புடவை கடைகள் - கவர்ச்சிக்கு வாய்ப்பேயில்லை.

நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் : தோட்டா, சிவாவின் மனதில் சந்தியா, பயணிகள் கவனத்திற்கு மற்றும் சத்யமேவஜயதே (தெலுங்கு)