Monday, March 31, 2008

அமீரகத்தில் தமிழோசை!


அமீரகத் தமிழ் மன்றம் மாபெரும் கலைவிழா ஒன்றினை வரும் மே மாதம் அமீரகத்தில் நடத்த உத்தேசித்திருக்கிறது. இந்த விழாவில் தமிழ் தொலைக்காட்சிகளின் சிறப்பான நிகழ்ச்சிகளை மேடையில் நடத்திக் காட்ட இந்த மன்றம் முன்வந்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் கண்டு பரவசமடைந்த நிகழ்ச்சிகளை நேரில் காண அரிய வாய்ப்பு!!

மேடை நிகழ்ச்சிகளாக இடம்பெறும் சில நிகழ்ச்சிகள் :

தேன்தமிழ் குரலோன் அப்துல் ஹமீது வழங்கும்
பாட்டுக்குப் பாட்டு!”
இனிய தமிழ்த் திரைப்பாடல்களின் அணிவகுப்பு!

சன் தொலைக்காட்சியின்
சிறப்பு நிகழ்ச்சியான
“அசத்தப் போவது யாரு?”
சாதாரணர்களை அசாதரணர்களாக்கும் திறன் வெளிகாட்டும் முயற்சி!

கலைஞர் தொலைக்காட்சியின்
நெம்பர் ஒன் நிகழ்ச்சியான
“மானாட மயிலாட”
ஆட்டமும், பாட்டமும் மாந்தர்க்கு மகிழ்ச்சி!

நிகழ்ச்சி நடைபெறும் நாள் மற்றும் நேரம் : மே மாதம் ஒன்பதாம் திகதி, வெள்ளிக்கிழமை, மாலை நான்கு முப்பது மணிக்கு.

விழா நடைபெறும் இடம் : ஷேக்ராஷித் கலையரங்கம், இந்தியன் உயர்நிலைப் பள்ளி வளாகம், துபாய்.

இருக்கைகளை முன்பதிவு செய்ய, மற்ற விபரங்களுக்கு : 04 2976214 (காலை ஒன்பது மணி முதல் பண்ணிரெண்டு மணி வரை / மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை) 050 6550245 & 050 6514825

Saturday, March 29, 2008

ரஜினியோடு எப்போது நடிக்கப் போகிறேன்? - கமல் பேட்டி!


கடந்த இரு ஆண்டுகளாக பத்திரிகையாளர்களிடமிருந்து விரும்பி வனவாசம் பெற்றிருந்த உலகநாயகன் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். ‘தசாவதாரம்' படம் கில்லி மாதிரி வந்திருப்பதாக சொல்லி மகிழ்பவர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியும் தந்திருக்கிறார். உலகநாயகனின் கருணைப்பார்வை எப்போது தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திரும்புமோ தெரியவில்லை. அளந்து அளந்து பேசும் வாடிக்கை கொண்ட கமல் இந்தப் பேட்டியிலும் தசாவதாரம் படம் குறித்த பெரியதான எந்த ரகசியத்தையும் வெளியிடாமல், எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயங்களையே பேசியிருக்கிறார்.

“நவராத்திரி திரைப்படத்தில் நடிகர்திலகம் ஒன்பது விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஒரே ஒரு எண்ணை மட்டும் கூட்டி பத்து வேடங்களில் தசாவதாரம் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். திரை உழைப்பாளிகளின் இரண்டு ஆண்டு கடின உழைப்பு இத்திரைப்படம். தமிழ் திரையுலகில் மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது தான். தயாரிப்பாளரும் இருமடங்கு செலவு அதிகமாக செய்திருக்கிறார். படம் ஆரம்பித்த நாளில் இருந்தே தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை தவிர வேறெதையும் நான் கண்டதில்லை.

இப்படம் வாசகனுக்கு காட்டக்கூடிய ஒரு பரிணாமம் இந்தியத் திரைப்படங்களில்.. ஏன் உலகத் திரைப்படங்களில் கூட இதுவரை வந்ததில்லை. பண்ணிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றை கூட எந்தவித குழப்பமும் இல்லாமல், எளிதில் ரசிகன் அணுகக்கூடிய அணுகுமுறையில் படமாக்கியிருக்கிறோம். படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு ஜாக்கிசான் வருகிறார் என்றாலே பார்த்துக் கொள்ளுங்கள், எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து வருகிறோம் என்பதை.

என்னுடைய நண்பர் ரஜினியோடு நான் நடிக்கப் போகிறேன் என்ற அதிரடி வதந்தி அவ்வப்போது எழுந்து எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இருவரும் சேர்ந்து நடிப்பது என்பது செலவுரீதியாக சாத்தியமில்லாதது. மிகப்பிரம்மாண்டமான ஒரு இந்திப் படத்தின் மொத்த பட்ஜெட்டுமே எங்கள் இருவரின் சம்பளத்துக்கு நிகரானதாக இருக்கிறது.

அதற்காக இது நடக்கவே நடக்காது என்று சொல்வதற்கில்லை. எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியப்படும். எங்கள் இருவரையும் இணைத்து மணிரத்னம் இயக்கப்போவதாக ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் இல்லை, ஸ்க்ரிப்ட்டும் அமையவில்லை. ஒருவர் நடிக்க இன்னொருவர் தயாரிப்பதாக தான் பேசினோம்.

நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் அதன்பிறகு தமிழில் படமெடுக்க மிச்சம் என்னமிருக்கும்? தொழிலை பொறுத்தவரைக்கும் இன்றைக்கும் நானும், ரஜினியும் போட்டியாளர்கள் தான். ஆயினும் எங்களது திறமையை, உழைப்பை இருவருமே எவரெஸ்ட் அளவுக்கு மதிக்கிறோம்”

இவ்வாறாக அதிரடியாக பேட்டியளித்திருக்கிறார் உலகநாயகன்.

Friday, March 28, 2008

கண்ணீர் அஞ்சலி!


திரைத்தொழிலில் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டவரும், பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் துணை பொதுமேலாளருமான உழைப்புக்கு அஞ்சா செயல்வீரர் திரு. ஜே.ஜி.எஸ்.குமார் அவர்கள் தனது முப்பத்தெட்டாவது வயதில் இன்று காலை (28-03-2008) இயற்கையோடு இணைந்தார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் (டூவிபுரம், 3வது தெரு, பழைய பஸ் ஸ்டேண்டு அருகில்) (29-03-2008) நடைபெற்றது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-நிர்வாகம் மற்றும் ஊழியர்கள்-
பிரமிட் சாய்மீரா குழுமம்,
சென்னை-600 017.

Thursday, March 27, 2008

இயக்குனர் பாரதிராஜா மகள் திருமணம்!



இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகள் ஜனனிக்கும், மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமாருக்கும் திருமணம் செய்ய சென்னையில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்தில் தமிழகத்தின் பெரும்புள்ளிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

ஜனனியின் திருமணம் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் தன்னுடன் நடித்த நந்திதாவை சில ஆண்டுகள் முன்னர் தான் காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலகாலமாக பாரதிராஜா அதிகமான படங்களை இயக்குவதில்லை. அவரது இயக்கத்தில் வெளிவந்த கடைசி படம் கண்களால் கைது செய். இயக்குனர் மணிரத்னத்தின் நட்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பாரதிராஜா. இப்போது அர்ஜூன், நானாபடேகர் நடிக்கும் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைஞர் தொலைக்காட்சிக்காக தெக்கத்திப் பொண்ணு என்ற கிராம நெடுந்தொடரையும் இயக்கிவருகிறார்.

அதிரடியாக வருகிறது கேப்டனின் அரசாங்கம்!


கிட்டத்தட்ட தனது முப்பது ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை எட்டவிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அடுத்ததாக வரவிருக்கும் அரசாங்கம் அவர் நடித்து வெளிவரும் 150வது திரைப்படம். தமிழில் மட்டுமே நடித்து இந்த சாதனையை செய்யப்போகும் முதல் நடிகர் கேப்டனாக மட்டுமே இருக்கமுடியும்.


நூறாவது திரைப்படத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றவர்களில் முதலிடத்தில் இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். அவர் நடித்த நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் வெளியாகி கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு அவரது நூற்றி ஐம்பதாவது திரைப்படமாக அரசாங்கம் வெளிவருகிறது.


கேப்டனின் படங்களில் அடிதடிக்கும், அதிரடிக்கும் முக்கியத்துவம் தரும் வகையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கும். அவ்வாறில்லாமல் இப்படத்தில் காதல், மசாலா, கவர்ச்சி என்று இதர அம்சங்களையும் கலந்து கட்டி அடித்திருக்கிறாராம் கேப்டன். ஒரு அரசியல் கட்சித் தலைவராக அவர் உயர்ந்தபின் வரும் திரைப்படம் என்பதால் பஞ்ச் டயலாக், கட்சி கொள்கை சார்பான வசனங்கள் இப்படத்தில் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தானாம். ஒரு காட்சியில் கூட கட்சிக் கொடியையோ, கட்சி சார்பான வசனங்களையோ பேசாமல் நடித்திருக்கிறாராம் கேப்டன்.


எல்.கே.சுதீஷ் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார். நவ்நீத், செரில் ப்ரிண்டோ என்ற இரட்டை கதாநாயகிகள் கவர்ச்சியிலும், காதலிலும் கலக்கியிருக்கிறார்களாம். சண்டைக்காட்சிகளில் ஹாலிவுட் கலைஞர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் கேப்டன் காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் பயிற்சியாளர் வேடம் ஏற்றிருக்கிறார். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார்.


மார்ச் 28 அன்று படத்தின் இசைத்தட்டு வெளியீடு நடைபெறவிருக்கிறது. முதல் நாளிலேயே ஒரு லட்சம் இசைத்தட்டினை விற்று சாதனை புரியவிருக்கிறது அரசாங்கம். அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்தும் கூட நூற்றுக்கணக்கான இசைத்தட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். கேப்டன் ரசிகர்களை குஷிப்படுத்த படம் அனேகமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெள்ளித்திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.










Wednesday, March 26, 2008

1980க்கு போகலாமா?

கடந்து போன பாதைக்கு திரும்ப செல்லமுடியும். கடந்த காலத்துக்கு போக முடியுமா? லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர், இரட்டை ஜடையோடு தாவணி, பெல்பாட்டம் பேண்ட், ஒரு தலை ராகம் சினிமா, அட்லாஸ் சைக்கிள், ஹார்ன் கட்டி ஒளிபரப்பபடும் திருவிளையாடல் பட வசனங்கள், எக்ஸ்போ சலூன் - ஸ்டெப் கட்டிங் இந்த விஷயங்களெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்டது. நாற்பதை கடந்தவர்களுக்கு இனம்புரியாத ஏக்கத்தையும், இருபதுகளில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு குறுகுறுப்பையும், பழசை அறியக்கூடிய ஆவலையும் தரக்கூடியது.

சாலையில் பயணிக்க வாகனத்தை பயன்படுத்துவது போல, காலத்தில் பயணிக்க கால இயந்திரம் இருந்தால் மட்டுமே இவற்றை நேரில் கண்டுகளிக்க இயலும். கால இயந்திரம் எதற்கு? சினிமாவே போதுமே!

1980களின் முற்பகுதியில் நடப்பது போன்ற கதையமைப்போடு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் சுப்பிரமணியபுரம். மதுரைக்கு அருகிலிருக்கும் பகுதியான சுப்பிரமணியபுரத்தை சுற்றி கதை நடப்பது போல இருப்பதால் இந்த டைட்டில். நண்பர்களுக்குள்ளான மோதலும், கூடலும், காதலும், சாதலும், பிரிதலும், இன்னும் நிறைய ‘லும்'ஐ திரையில் காட்டுவது தான் இயக்குனரின் நோக்கமாம். 1980களில் நடக்கும் கதை என்பதால் உடைகளில் மட்டுமல்லாமல் லொக்கேஷனிலும், ஆர்ட் டைரக்சனிலும் ரொம்பவும் கவனம் செலுத்தி செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை-600028 படத்தில் நடித்த ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு படங்களில் நடித்த ஸ்வாதி கதாநாயகி. கஞ்சாகருப்பு, சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். பாலா, அமீர் ஆகியோரிடம் பணிபுரிந்த சசிகுமார் தயாரித்து, இயக்கி, நடித்துமிருக்கிறார். இசை : ஜேம்ஸ் வசந்தன்


























ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை!


ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடர்களுக்கு அடுத்ததாக உலகில் மிகப்பிரபலமான திரைத்தொடராக ஜேம்ஸ்பாண்டு 007 திரைப்படத் தொடர்களை குறிப்பிடலாம். இயான் பிளெமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1950களில் எழுதிய நாவல்கள் மற்றும் குறுநாவல்களே ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களாக பரிணமித்திருக்கின்றன. 1962ல் தொடங்கிய ஜேம்ஸ்பாண்டி திரைப்பட சகாப்தம் 2006 வரை 21 பிரம்மாண்ட படங்களாக வளர்ந்து நிற்கிறது.

வசூல் ரீதியாக பார்க்கப் போனால் இதுவரை வந்த 21 படங்கள் மூலமாக நான்கு பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஹாரிபாட்டர் திரைப்பட வரிசை மட்டுமே இதைவிட அதிக வருவாயை ஈட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயான் ப்ளெமிங் எழுத ஆரம்பித்து ஜேம்ஸ்பாண்டு பிரபலமான பின்னர் 1954ல் தொலைக்காட்சி வடிவமாக கடைசியாக வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு படமான காசினோ ராயல் வெளியாகியது. அதன் பின்னர் ஜேம்ஸ் பாண்டை திரைக்கு கொண்டுவர பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மெனக்கெட்டு பல தடைகளால் தள்ளிப்போடப்பட்டது. 1962ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் ஜேம்ஸ்பாண்டு திரைப்படமான டாக்டர் நோ வெளியாகி வசூலை வாரி குவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் கோடைவிடுமுறை நேரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுவரை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் ஆறு பேர் நடித்திருக்கிறார்கள். சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் ஆகியோர் அவர்கள்.

ஒலிப்பதிவு மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான அகாடமி விருதுகளை ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் பெற்றதுண்டு.



ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கென பல சிறப்பு அம்சங்கள் உண்டு.

ஜேம்ஸ் பாண்டு கலக்கல் ம்யூசிக்கில் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும். ஒரு சில படங்களில் மட்டும் இந்த பாரம்பரியம் மிஸ்ஸிங்.

கதாநாயகியை முத்தமிடுவது அல்லது காதல்செய்வது :-) எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கடைசி ரீலில் இடம்பெறும். ஆன் ஹெர் மெஜஸ்டி சர்வீஸ் மற்றும் காசினோ ராயல் படங்களின் இறுதியில் மட்டும் இந்த சம்பிரதாயம் இருக்காது. காரணம் இரண்டு படங்களிலும் ஜேம்ஸின் காதலி கடைசி காட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்.

ஜேம்ஸின் பாஸான மிஸ் எம்மின் செக்ரட்டரி மனிபென்னி ஜேம்ஸ்பாண்டை ஒரு தலையாக காதலிப்பது எல்லா படங்களிலும் வரும் காட்சி. ஜேம்ஸ் ஏனோ அவரது காதலை நிராகரித்தே வருவார். முதல் படமான டாக்டர் நோ மற்றும் கடைசியாக வெளிவந்த காசினோ ராயல் இருபடங்களிலும் மனிபென்னி கதாபாத்திரம் இல்லவே இல்லை. மற்ற அனைத்துப் படங்களிலும் அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக ஜேம்ஸை காதலிக்கும்.

ஒவ்வொரு படத்துக்கும் ஜேம்ஸ் பாண்டுக்கு க்யூ பிராஞ்ச் வினோத அழிவு ஆயுதங்கள் உருவாக்கித் தருவது வாடிக்கை. அவற்றை வைத்து தான் தலைவர் க்ளைமேக்ஸில் எதிரிகளை ஒற்றை ஆளாய் அழித்தொழிப்பார்.

இன்று தமிழ்படங்களில் உச்சரிக்கப்படும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் ஜேம்ஸ் படங்கள் தான் முன்னோடி. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பஞ்ச் டயலாக் இருக்கும். தலைவரின் அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்திவிட்டு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பார். ஜேம்ஸ்பாண்டு திரைப்பட வரிசையில் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் இந்த சம்பிரதாயத்துக்கு விதிவிலக்கு.

ஜேம்ஸ்பாண்டு பார்களுக்கு சென்றால் வோட்கா மார்டினி விரும்பி குடிப்பார். பார் டெண்டரிடம் “Shaken, not stirred" என்றும் சொல்வார். கோல்டன் ஐ திரைப்படத்தில் இது கொஞ்சமாக மாற்றப்பட்டு "Shaken, but not stirred" ஆனது. காசினோ ராயல் திரைப்படத்தில் பார்டெண்டர் ஜேம்ஸ்பாண்டை பார்த்து "Shaken or stirred?" என்று கேட்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றாலே பெண்கள் வெகுபிரசித்தம். இவர் காப்பாற்றும் பெண்கள் இவரை காதலிப்பார்கள் அல்லது சக பெண் ஏஜெண்டுகள் இவரை காதலிப்பார்கள். அதுவும் இல்லையென்றால் வில்லனின் ஆசைநாயகிகளுக்கு ஜேம்ஸ் மீது காதல் வந்துவிடும். பெண்களே இல்லாமல் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுப்பது நடக்காத காரியம்.

ஜேம்ஸ் பாண்டு படங்களில் அவருக்கு வழங்கப்படும் கார்கள் வெகுபிரசித்தம். நவீனவசதிகளோடு கூடிய அதிவேக கார்களை ஜேம்ஸ் பயன்படுத்துவார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கார்கள் பல மில்லியன் டாலர்களுக்கு ஏலத்துக்கு விடப்படும்.

இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் :

டாக்டர் நோ (1962)


ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)


கோல்டுஃபிங்கர் (1964)


தண்டர்பால் (1965)


யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)


ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)


டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)


லைவ் அண்ட் லெட் டை (1973)


தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)


தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)


மூன்ரேக்கர் (1979)


ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)


ஆக்டோபுஸ்ஸி (1983)


எ வ்யூ டூ கில் (1985)


தி லிவிங் டேலைட்ஸ் (1987)


லைசென்ஸ் டூ கில் (1989)


கோல்டன் ஐ (1995)


டுமாரோ நெவர் டைஸ் (1997)


தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)


டை அனதர் டே (2002)


கேசினோ ராயல் (2006)


அடுத்து வரவிருப்பது

குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)