Friday, May 30, 2008

மீண்டும் “தர்மயுத்தம்!”

மாதம் ஒரு குறுந்தொடர் என்ற வித்தியாசமான கான்செப்டில் ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையில் அடுத்து ஜூன் 2ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகவிருப்பது “தர்ம யுத்தம்”

செண்டிமெண்டோ, அழுகாச்சிக் காவியமோ இல்லாது இக்குறுந்தொடரின் கதை விஞ்ஞானம், க்ரைம் கலந்து பரபரப்பான அனுபவத்தை தொடர் பார்ப்பவர்களுக்கு தரும். மங்கை என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் சிம்ரன். ஒய்.ஜி.மகேந்திரன், சுலக்சணா, மோகன் ஷர்மா, ஸ்யாம் கணேஷ், அகிலா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் சிம்ரனோடு மின்னப் போகிறார்கள்.

தர்மயுத்தம் தொடருக்கான கதை, திரைக்கதையை செந்தமிழன் எழுதியிருக்கிறார். வெங்கடேஷ் வசனம், ஒளிப்பதிவு ஸ்ரீனிவாஸ், இயக்கம் அஸ்வின் பாஸ்கர், கிரியேட்டிவ் ஹெட் சுபா வெங்கட்.

ஜூன் 2 முதல் உங்கள் ஜெயா டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு சிம்ரன் திரையை காணத் தவறாதீர்கள்!

சிம்ரன் திரை பார்ப்பவர்களுக்கு தினம் தினம் தங்கமும் பரிசாக உண்டு!!




Wednesday, May 28, 2008

சாய்தேவா இசைத்தட்டின் பாடல்களை கேட்கிறீர்களா?


பிரமிட் சாய்மிரா மியூசிக் பெருமையுடன் வழங்கும் ‘சாய்தேவா' இசைத்தகட்டினை நேற்று சாய்பாபா “மஞ்சிதி, மஞ்சிதி” (நல்லது, நல்லது) என்று ஆசிகூறி பெங்களூரில் வெளியிட்டார். ஹிந்தி, தமிழ் இருமொழிகளிலும் இசைத்தகடு வெளியிடப்பட்டிருக்கிறது. இசைத்தகட்டின் விலை ரூ. 75/- மட்டுமே.

இந்த இசைத்தொகுப்பில் இருக்கும் பாடல்களை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்!

விழாவில் எடுக்கப்பட்ட வண்ணப்படங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்!

Monday, May 26, 2008

குசேலன் ஆடியோ ரிலீஸ்!


தமிழில் குசேலனாகவும், தெலுங்கில் குசேலடுவாகவும் ஒரே நேரத்தில் வெளியாகும் சூப்பர்ஸ்டார் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ஜூலை 18ஆம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் தயாரிப்பு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுக்க முடிக்கப்பட்டு விட்டநிலையில் ரஜினி, நயன்தாரா பங்குபெறும் ஒரு டூயட் காட்சிக்காக அடுத்த வாரம் கேரளாவுக்கு படக்குழுவினர் செல்ல இருக்கிறார்கள். அதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிடியில் படமாக்கப்பட இருக்கிறது. இது 200 சதவிகித சூப்பர்ஸ்டார் படம் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் பி.வாசு.

ஜூன் 20ஆம் தேதி படத்தின் இசைத்தட்டு வெளியீடுக்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் காலையில் சென்னையில் தமிழ் இசைத்தட்டும், மாலையில் ஹைதராபாத்தில் தெலுங்கு இசைத்தட்டும் வெளியிடப்படும் எனத்தெரிகிறது. இரண்டு விழாக்களிலும் சூப்பர் ஸ்டார் கலந்துகொள்வாராம்.

ரெடி, ஜூட்.. குசேலன் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்...

Thursday, May 22, 2008

சாய்பாபாவுக்கு இசைமாலை!


பிரமிட் சாய்மீரா மியூசிக் நிறுவனம் பிரமிட் சாய்மீரா குழுமத்தின் ஒரு அங்கம். இந்நிறுவனம் ‘சாய்தேவா' என்ற பெயரிலான இசைத்தட்டு ஒன்றினை திங்கட்கிழமை (26-05-2008) அன்று புட்டபர்த்தியில் வெளியிடுகிறது.

ஆதித்யா போட்வால் இசையமைத்திருக்கும் இந்த இசைத்தட்டில் முன்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளின் பங்கேற்பு இருக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அனுராதா போட்வால் மற்றும் சித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

மொத்தமாக ஒன்பது பாடல்கள் அடங்கிய இந்த இசைத்தட்டினை லலிதாஸ்ரீ கம்பைன்ஸ் தயாரித்திருக்கிறது. ஒரு இசைத்தட்டின் விலை ரூ.75 என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

Tuesday, May 13, 2008

சின்னத்திரை அழகி 2008

சினிமா நடிகைகளில் அழகி யாரென்று போட்டி வைத்தால் வெட்டு குத்தே நடந்துவிடும். போட்டியும் பலமாக இருக்கும். போட்டியை நடத்துபவர்கள் தலையை பிய்த்துக்கொண்டு ஓடவேண்டியதுதான். ஆனால் சின்னத்திரை அழகி போட்டி கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதியான முறையில் நடந்து வருகிறது. சின்னத்திரை நடிகர் விஸ்வா இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

சென்ற ஆண்டு சந்தோஷி சின்னத்திரையின் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டு போட்டி மிகக்கடுமையாக இருந்தது. ஆர்த்தி, மது, ஸ்வேதா, தாரிகா, ரியா, அனுஷா, ஜூலி, தீபா, காவ்யா, அபர்ணா ஆகியோர் போட்டியில் கலந்துகொண்டனர். பல அடுக்கு தேர்வுகளுக்கு பின்னர் மிஸ் சின்னத்திரை 2008 ஆக ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் சிறப்பு விருதுகள் பெற்றவர்கள் :

சிறந்த உடலழகி - மது
மக்களிடையே பிரபலமான அழகி - தாரிகா
சிறந்த கேட்வாக் அழகி - தீபா
சிறந்த கண்ணழகி - ஸ்வேதா
சிறந்த சிரிப்பழகி - காவ்யா
அழகான சரும அழகி - ஜூலி

இப்போட்டிகள் கடந்த இருஆண்டுகளாக பிரபலமடைந்து வருவதாலும், போட்டியில் கலந்துகொண்டவர்கள் உண்மையிலேயே அழகாகவும், திறமையானவர்களாகவும் இருப்பதாலும் இதில் வெற்றி கண்டவர்கள் பலருக்கும் சினிமா என்னும் சந்திரமுகி அறையின் மந்திரக்கதவுகள் திறக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொண்ட அழகி ஒருவர் வருடாவருடம் ஃபிலிம்ஃபேர் விருதுகள் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுவதைப் போல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.




Monday, May 12, 2008

நாட்டு மக்களுக்கு நமீதா அறிவிப்பது என்னவென்றால்...

ஓராண்டுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரு நடிகை பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது தமிழ் திரையுலகில் அபூர்வம். தமிழ் சினிமாவில் நடிகர்களே அதிகம் பேசப்படுவார்கள். நடிகைகள் பெயரெடுப்பது மிகக்கடினம். ஆயினும் இவற்றுக்கு விதிவிலக்காக சில நடிகைகள் உண்டு. சரோஜாதேவியில் ஆரம்பித்து ஸ்ரீதேவி, சில்க், கவுதமி, குஷ்பு என்று பல ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்காக இருந்த நடிகைகளும் உண்டு. இவர்களின் லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் நமீதா.

இன்றைய தேதியில் நமீதா எதை செய்தாலும் அது தமிழ்நாட்டின் பரபரப்பு செய்தியாகிவிடுகிறது. மீடியாக்களின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். பத்திரிகையாளர்களிடம் கொஞ்சும் தமிழில் மனந்திறந்து பேசுகிறார். ரசிகர்கள் மத்தியில் தேவதை போல உலா வருகிறார். கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் கிடைத்த கேரக்டரில் நடித்து நன்கு ஸ்கோர் செய்கிறார்.

கடந்த பத்தாம் தேதி தனது பிறந்தநாளை பெற்றோரை இழந்த குழந்தைகளோடு கொண்டாடினார் நமீதா. எத்தனையாவது பிறந்தநாள் என்று கேட்டால் பண்ணிரண்டிலிருந்து பதிமூன்று என்று சீரியஸாக சொல்கிறார். அவரது பாஸ்போர்ட் தகவல்படி பார்த்தால் அது இருபத்தைந்தாவது பிறந்தநாள். இனிமேல் கவர்ச்சியை மட்டும் நம்பாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.

விஜயசாந்தி நடித்தது மாதிரியான அதிரடி வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். சூப்பர் வுமனாக மாறி வில்லன்களை பறந்து, பறந்து அடிப்பது மாதிரியான கேரக்டர் கிடைத்தால் அல்வா மாதிரி எடுத்துக் கொள்வேன் என்கிறார். இப்போது ஸ்ரீகாந்துடன் இவர் நடித்துவரும் இந்திரவிழா இவரது கேரியரில் முக்கியமான படமாம்.

படத்தில் நமீதா ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிபராக நடிக்கிறாராம். இலக்கை அடைய எதை வேண்டுமானாலும் மூலதனமாக போடலாம், உடலைக்கூட என்று சொல்லும் கேரக்டராம். நடிக்க நிறைய ஸ்கோப் இருப்பதால் இந்த வேடம் வந்ததுமே லபக்கென்று பிடித்துக் கொண்டாராம் நமீதா. மெசேஜ் சொல்லும் கேரக்டர் என்பதால் இந்தப் படம் வெளிவந்த பிறகு நிறைய வித்தியாசமான வேடங்கள் தன்னை தேடிவரும் என்று நம்புகிறார்.

இந்திரவிழா திரைப்படத்தின் சில ஸ்டில்கள் :













காணத்தவறாதீர்கள்!! நமீதா! - குளோஸ் அப் ஷாட்!

Friday, May 9, 2008

தினம் தினம் தங்கம்! உங்களுக்கு வேண்டுமா?


பிரமிட் சாய்மீரா நிறுவனம், சென்னை சில்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தினமும் ஐந்து பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்க உத்தேசித்திருக்கிறது.

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு சிம்ரன் திரை ஒளிபரப்பாகி வருகிறது. மாதம் ஒரு குறுந்தொடர் என்ற அடிப்படையில் இத்தொடர் வெளியாகிவருகிறது. இதுவரை இரு குறுந்தொடர்கள் முடிந்து மூன்றாவதாக நேருக்கு நேர் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.

தினமும் இத்தொடரை கண்டுகளித்து, தொடர் குறித்த விமர்சனத்தை தங்களது புகைப்படத்தோடு எழுதி அனுப்பும் நேயர்களில் ஐந்து பேருக்கு தினமும் ஒரு தங்கநாணயம் பரிசாக வழங்கப்படும். தங்க நாணயம் பெற நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஜெயா டிவியில் தினமும் இரவு சிம்ரன் திரை பார்த்து, விமர்சிக்க வேண்டியது மட்டுமே. கரும்பு தின்ன கூலியும் கொடுக்கிறோம். உங்களுக்கு திகட்டுமா என்ன?

Thursday, May 8, 2008

இது பாலிவுட்டா இல்லை ஹாலிவுட்டா?

சமீபத்தில் தசாவதாரம் இசைவிழாவுக்காக மல்லிகா ஷெராவத் அணிந்து வந்திருந்த உடையும், அதற்கு முன்பாக சிவாஜி படவிழாவுக்கு ஸ்ரேயா அணிந்து வந்த உடையும் இங்கே பரபரப்பான எதிர்ப்பை சம்பாதித்தது. சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு விவாதமாகிப் போனது. வட இந்தியாவில் எப்படி என்கிறீர்களா? சமீபத்தில் நடந்த ஜீ டிவியின் சினிமா விருதுக்கு வந்த நட்சத்திரங்களின் உடையலங்காரங்களை காணுங்கள்.















Wednesday, May 7, 2008

நமீதாவால் கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் சுழன்ற கில்லி!!

ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில் மாலைக்காட்சிகளில் கூட்டம் சேருவதில்லை. தசாவதாரம் படத்தின் வெளியீடு கூட 20-20 போட்டிகளால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

போட்டி நாட்களில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத திரை நட்சத்திரங்கள் தவறாமல் சேப்பாக்கத்தில் ஆஜராகிவிடுகிறார்கள். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களும் தங்கள் அபிமான நட்சத்திரங்களை காண மைதானத்துக்கு வந்துவிடுகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்களும், தள்ளுமுல்லுகளும் நடக்கிறது.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியோடு மோதியது. நேற்று மதியம் போட்டியைக் காண நமீதா வருகிறார் என்ற செய்தி நகரில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட பணியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் பலரும் அவசர அவசரமாக அலுவலங்களில் பொய்க்காரணம் சொல்லி பர்மிஷன் போட்டு சேப்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர். நமீதா ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் சேப்பாக்கம் மைதானத்தின் முகப்பில் கூடி நமீதா வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக நமீதா ரசிகர்கள் பலருக்கும் மைதானத்துக்குள் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. இவர்களில் பலர் விரக்தி அடைந்து போட்டி முடியும் வரை மைதானத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே ஜேம்ஸ்பாண்டு படநாயகி தோற்றத்தில் பெரும் ஆரவாரத்துக்கிடையே போட்டி தொடங்கும் நேரத்துக்கு சற்றுமுன்னர் நமீதா வந்தார். போட்டியை கவர் செய்ய வந்திருந்த கேமிராமேன்கள் சிலரும் நமீதா ரசிகர்கள் போலிருக்கிறது. போட்டியின் முக்கியமான கட்டங்களை கவர் செய்யாமல் அடிக்கடி நமீதாவை கவர் செய்துகொண்டிருந்தார்கள். நமீதாவின் அதிரடி ஆடையை கண்டு பயந்துவிட்டதாலோ என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியும், அவரது குழுவினரும் நேற்று சொதப்பி விட்டார்கள். ரன் குவிக்க திணறிய அணி, பவுலிங் செய்யும்போது வள்ளல்களாக மாறி ரன்களை வாரி இறைத்தார்கள்.

டோனி குழுவினர் சோர்ந்துப்போனதை கண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்லி என்ற கில்கிறிஸ்ட் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய அவர் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசி சென்னை அணியை சேதாரத்துக்குள்ளாக்கினார். சென்னை அணியினர் ஓரிரு பவுண்டரிகள் அடித்தபோதும் கைத்தட்டி உற்சாகப்படுத்திய நமீதா, ஹைதராபாத் அணியினர் சிக்ஸர்கள் விளாசியபோதும் ஆரவாரம் செய்தார். இதனால் நமீதா எந்த அணியை ஆதரித்தார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இருப்பினும் நமீதா கைத்தட்டும் போதெல்லாம் தாங்களும் கைத்தட்டி, விசிலடித்து கொண்டாட்டமாக இருந்தனர். இறுதியில் கம்பீரமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து நான்கு ஆட்டங்கள் வென்று முதலிடத்தில் இருந்த சென்னை அணி, அதன் பின்னர் ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் சென்னை ரசிகர்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். சென்னை அணியின் விளம்பரத் தூதர்களாக இளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நியமிக்கப்பட்டனர். நயன்தாராவை இடையில் அப்பொறுப்பில் இருந்து நீக்கியதால் தான் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்திக்கிறது என்ற புதிய கண்டுபிடிப்பை நேற்று மைதானத்தில் போட்டியைப் பார்த்து தலையில் துண்டு போட்டுக்கொண்ட நயன்தாரா ரசிகர் ஒருவர் கண்டறிந்து எல்லோரிடமும் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்.


இதற்கிடையே ஆரம்பத்தில் தோற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியினர் திடீரென எழுச்சிப்பெற்று தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அந்த அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவே காரணம் என்கிறார்கள். பஞ்சாப் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு அந்த அணியின் சீருடையுடன் செல்லும் ப்ரீத்தி, போட்டி நேரம் முழுவதும் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறாராம்.

தன் அணி போட்டியில் வெற்றி பெற்றால் அணியினரை மேற்கத்திய பாணியில் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. இதனால் உத்வேகம் அடையும் பஞ்சாப் கேப்டன் யுவராஜ் மற்றும் அவரது அணியினர் ஆவேசமாக ஆடி இப்போது வெற்றிகளைத் தொடர்ந்து குவிக்கிறார்கள் என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் சொன்னார்.

இத்தொடரில் தொடர்வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருந்தாலும் மற்ற அணிகளுக்கு இருப்பது போன்ற நட்சத்திர ஆதரவும், சலுகையும் தன் அணிக்கு இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், கேப்டனுமான ஷேன்வார்னே நொந்துப் போய் இருக்கிறாராம்.

Tuesday, May 6, 2008

குசேலன் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் - வண்ணப்படங்கள்!

பொள்ளாச்சிக்கு மீண்டும் பொற்காலம், சூப்பர் ஸ்டார் நடிக்கும் குசேலன் திரைப்படத்தின் இறுதிக்காட்சி பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டு வருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்காத நாளே இல்லை எனலாம். சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பாடல்காட்சிகளும், ஏனையக் காட்சிகளும் படமாக்கும் ட்ரெண்ட் வளர்ந்து வந்ததால், பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் தமிழ் சினிமா இயக்குனர்களின் இதயத்தில் பொள்ளாச்சி இடம்பெற ஆரம்பித்தது.

எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக சூப்பர் ஸ்டாரின் குசேலன் திரைப்படத்தின் பல காட்சிகள் இப்போது பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் சூப்பர்ஸ்டாராகவே விழா ஒன்றினில் கலந்துகொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. முன்பாக சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட பாடல்காட்சிகளும், ஏனைய காட்சிகளும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.

பொதுவாக பொள்ளாச்சிக்கு சூப்பர் ஸ்டார் வந்தால் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்குவார். இப்போது படப்பிடிப்புக்காக வந்திருப்பதால் தனக்கு எந்தவிதமான சிறப்பு ஏற்பாடும் வேண்டாம். படக்குழுவினர் தங்குமிடத்திலேயே தங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை தூக்கியெறிந்துவிட்டு படப்பிடிப்பு நடக்கும் நேரங்களில் ஒரு சினிமாத்தொழிலாளியாகவே வாழ்வது சூப்பர்ஸ்டாரின் வழக்கம். படக்குழுவினர் உண்ணும் உணவையே அவரும் உண்பார். மற்ற சினிமாத்தொழிலாளர்களோடு எந்த பந்தாவும் இல்லாமல் பழகுவார். நிஜத்திலும் அவர் சூப்பர்ஸ்டார் தான்!

இத்திரைப்படத்தின் உலகளாவிய உரிமையை வாங்கியிருக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் வரும் ஜூலைமாதம் இறுதிக்குள்ளாக படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது!





தமிழ்நாட்டின் அர்னால்டு ஸ்வாஷ்நெகர்!!

கீழ்க்கண்ட வண்ணப்படங்கள் இம்சை அரசன் திரைப்படத்தில் வடிவேலு செய்தது போல கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்டவை அல்ல. தான் நடிக்கும் படத்தின் கதாபாத்திரம் பிடித்து, அப்பாத்திரத்துக்காக தன்னையே உருமாற்றிக் கொண்ட நாயகனின் படங்கள்!

வாரணம் ஆயிரம் திரைப்படத்துக்காக கட்டுடல் கொண்ட ஆணழகனாக காட்சியளிக்கும் சூர்யாவின் படங்கள் கீழே :






வாரணம் ஆயிரம் திரைப்படம் குறித்த செய்தியும், படங்களும் இங்கே!