Monday, June 30, 2008

இன்று முதல் குசேலன் இசை!


தமிழ் திரையுலகில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் குசேலன் திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இரண்டேகால் கோடி ரூபாய்க்கு குசேலனின் இசை உரிமையை பிக் மியூசிக் நிறுவனம் பெற்றிருக்கிறது. இப்படத்தின் இசைத்தட்டு நாளை (01-07-08) முதல் கடைகளில் கிடைக்கும். சிடி ரூ.99/-க்கும், கேசட் ரூ.45/-க்கும் விற்கப்படும்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் மூன்று பாடல்களில் ரஜினிகாந்த் இடம்பெறுகிறார். 75 வருட தமிழ் சினிமா வரலாற்றை போற்றும் வகையில் சினிமா சினிமா என்ற பாடல் ஷங்கர் மகாதேவன் குரலில் இடம்பெறுகிறது. இந்தப் பாடலே படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடலாகவும் இருக்கும்.

இன்று நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் விழாவில் ரஜினியோடு பசுபதி, நயன்தாரா, மீனா, வடிவேல், இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் :

1) சினிமா சினிமா
பாடியவர் : ஷங்கர் மகாதேவன்
பாடலாசிரியர் : வாலி

2) சொல்லலாமா
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா, பேபி ரஞ்சனி, பேபி பூஜா
பாடலாசிரியர் : பா.விஜய்

3) ஓம் ஜாரே
பாடியவர்கள் : தலேர் மெஹந்தி, சித்ரா, சாதனா சர்க்கம்
பாடலாசிரியர் : வாலி

4) சாரை
பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் குழுவினர்
பாடலாசிரியர் : டாக்டர் க்ரிதயா

5) பேரின்ப
பாடியவர்கள் : கைலாஷ் கேர், ப்ரசன்னா
பாடலாசிரியர் : யுகபாரதி

Friday, June 27, 2008

14 வேடங்களில் சிம்ரன்!

தசாவதாரத்தில் கூட கமல்ஹாசன் பத்து வேடங்களில் தான் நடித்தார். சிம்ரன் 14 வேடங்களில் சிம்ரன் சின்னத்திரையில் தோன்ற இருக்கிறார்.

மனிதர்களுக்கு தன்னம்பிக்கையையும், பக்தியையும் தரவும், தீயவர்களுக்கு தகுந்த தண்டனையை தரவும் ஆதிபராசக்தி அம்மன் நடத்தும் திருவிளையாடல் தான் இந்தமாத சிம்ரன் திரையில் வர இருக்கும் ‘நவவெள்ளி'. தெய்வரகசியத்தை தெரிந்துகொண்ட ஒரு தீயநோக்கம் கொண்டவனை தனது பக்தை மூலமாக ஆதிபராசக்தி எப்படி வெற்றி காண்கிறாள் என்பதை சின்னத்திரையில் தினமும் காணலாம்.

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டிவியில் இம்மாதம் இத்தொடரை காணலாம்.

பூவிலங்கு மோகன், ஓ.ஏ.கே.சுந்தர், அனுராதாகிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி மற்றும் பல முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் சிம்ரனோடு மின்னப் போகிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் : செல்வபாண்டி. ஒளிப்பதிவு : ஆசாத். இயக்கம் : அர்விந்த்ராஜ். கிரியேட்டிவ் ஹெட் : சுபா வெங்கட்.

Tuesday, June 24, 2008

நயன்தாராவின் பஞ்ச அவதாரம்!

விஷால் கதாநாயகனாக நடிக்கும் சத்யம் திரைப்படத்தில் நயன்தாராவின் வித்தியாச கெட்டப்புகள்!

Saturday, June 21, 2008

கருணாஸும் ஹீரோ ஆயிட்டார்!


காமெடி நடிகர்கள் கதாநாயகர்கள் ஆவது நாகேஷ் காலத்திலேயே நடந்த விஷயம். குறிஞ்சிமலர் பூப்பது போல இது எப்போதாவது அரிதாக நடக்கும் விஷயமாகிவிட்டது. சமீபத்தில் வடிவேலுவும், விவேக்கும் கூட கதாநாயகர்களாக நடித்து விட்டார்கள். இப்போது கருணாஸின் முறை.

மலையாளத்தில் வடக்கு நோக்கி எந்திரம் பெரிய வெற்றி அடைந்த நகைச்சுவை திரைப்படம். சுமாராக இருக்கும் ஒருவனுக்கு அழகான மனைவி அமைகிறாள். அவளுடைய அழகு அவனுக்கு பாதுகாப்பின்மையையும், அதிருப்தியையும் அளிக்கிறது. அழகான ஆண்கள் யாராவது தன் மனைவியை கடந்து போனாலே அவனுக்கு வயிற்றெரிச்சல் வருகிறது. இப்படிப்பட்ட நகைச்சுவையான கதைக்களத்தில் அமைந்த படம் அது.

அப்படம் தமிழில் ‘திண்டுக்கல் சாரதி' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. கருணாஸ் கதாநாயகனாக நடிக்க, நம் நாடு படத்தில் நடித்த கார்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார் சிவசண்முகம் இயக்கி வருகிறார். இப்படத்தை ட்ரீம் டவர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Thursday, June 19, 2008

தசாவதாரம் வசூல் நூறு கோடி!


உலகிலேயே பத்து வேடங்களில் ஒரே நடிகர் நடித்த முதல் படம் என்ற வகையில் தசாவதாரம் ஏற்கனவே உலகசாதனை புரிந்திருக்கிறது. சர்வதேச சினிமா சந்தையில் இப்படத்தின் ஓபனிங் வசூல் மற்றொரு உலகசாதனையை புரிந்திருக்கிறது. இதுவரை தமிழ் சினிமா எதுவும் பெற்றிராத மிகப்பெரிய வரவேற்பு தசாவதாரம் திரைப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. படம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி வசூலித்திருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் ஒருவார வசூல் மூன்று கோடியை எட்டிப் பிடித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக தசாவதாரம் உலக அளவில் முதல் ஒரு வாரத்திலேயே நூறு கோடி ரூபாயை வசூல் ரீதியாக சம்பாதிக்கும் என்றும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னை மாநகரில் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட தசாவதாரம் முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் (சரியாக 97 லட்சத்து ஐம்பது ஐந்து ஆயிரத்து முன்னூற்றி தொண்ணூற்றி ஏழு ரூபாய்) வசூலித்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என்று எல்லாத் தரப்பு சினிமா வட்டாரத்தையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி இப்படத்துக்கு சிறப்பு அனுமதியாக ஒவ்வொரு தியேட்டரிலும் வாரநாட்களிலும் கூட ஐந்து காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி தந்திருக்கிறது. தமிழ் படங்களுக்கு அதிக வசூலை வாரித்தரும் மதுரை, கோவை சினிமா மாவட்டங்களிலும் இதே நிலைமை. இன்னமும் அதிக பிரிண்டுகள் போட்டு அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு யோசித்து வருகிறது.

தெலுங்கில் வெளியிடப்பட்ட தசாவதாரம் திரைப்படம் ஹைதராபாத் நகரில் 25 பெரிய திரையரங்குகளில் 34 திரைகளில் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடி ஓபனிங் வசூலில் சாதனை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவின் நிஜாம் சினிமா ஏரியாவுக்கு மட்டுமே 45 பிரிண்டுகள் போடப்பட்டு வெளியாகியிருக்கிறது. கேரளாவிலும் 50 தியேட்டர்களில் தசாவதாரம் வெளியாகி அரங்குநிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்துக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை விட அயல்நாடுகளில் அபார வரவேற்பு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் ஐம்பது நகரங்களில் வெளியிடப்பட்ட தசாவதாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தென்னிந்தியப் படமும் அங்கே பெறாத வரவேற்பு இது. அமெரிக்காவில் தமிழில் வெளியிடப்பட்டதை விட தெலுங்கில் வெளியிடப்பட்ட தசாவதாரத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ் வேடத்தில் கமலை காண்பதற்காக அமெரிக்கர்களும் தசாவதாரம் திரைப்படத்தை காண ஆவலோடு திரையரங்குக்கு வருகிறார்கள். ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்பட்டு அமெரிக்காவில் பல தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது.

மலேசியாவில் 58 தியேட்டர்களில் வெளியான தசாவதாரம் முதல் வாரத்தில் 6 லட்சம் டாலர்களை வசூலித்திருக்கிறது. பிரிட்டனில் மிகக்குறைவான திரைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும், வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களில் இரண்டரை லட்சம் டாலர் வசூலித்திருக்கிறது. கனடாவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் இப்படத்தை வினியோகித்திருக்கிறது. முதல் தடவையாக தமிழ்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனம் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்காக டைம் ஸ்கொயர் தியேட்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அமெரிக்க பத்திரிகையாளர்களும் படத்தை ஐநா அதிகாரிகளோடு கண்டு ரசித்துப் பாராட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இப்படத்தை வெளியிட்டிருக்கும் நர்மதா டிராவல்ஸ் நிறுவனத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

படம் வெளியிடப்பட்டதுமே நிறைய எதிர்மறை விமர்சனங்களையும் கமல்ஹாசன் சந்தித்தார். இந்தப்படத்தின் வசூல் விமர்சகர்களின் வாயை அடைக்கும், இப்படம் குறித்து இனி எதுவும் பேசமாட்டேன் என்று கமல் அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 18, 2008

குசேலன் - EXCLUSIVE PHOTO GALLERY!கிரிவலம் ஆரம்பம்!


பஞ்ச் டயலாக்குகளுக்கும், அதிரடி காட்சிகளுக்கும் பெயர் போனவர் இயக்குனர் பேரரசு. கமர்ஷியல் பஞ்சாமிர்தம் கலக்கி கொடுத்த பழனி படத்துக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் வர இருக்கிறார் பேரரசு. பேரரசுவின் படங்களின் தலைப்புகள் அனைத்துமே ஊர் பெயரில் தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதாலயாவுக்காக கே.பாலச்சந்தர் தயாரிக்கும் திருவண்ணாமலை அரசியல் அடிதடி படமாம். லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டரான அர்ஜூனுக்கு அரசியல்வாதிகள் தரும் தொல்லையும், அதை அசத்தலாக அர்ஜூன் சமாளிப்பதும் தான் கதையாம். இந்தப் படத்திலும் பேரரசு ஒரு முக்கியப் பாத்திரத்தில் தோன்றி பஞ்ச் டயலாக் அடிப்பார் என்கிறார்கள்.

சாய்குமார் வில்லனாக நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி இயக்குகிறார் பேரரசு. மசாலா படங்களுக்கு மஜாவாக இசையமைக்கும் ஸ்ரீகாந்த் தேவா தான் இப்படத்துக்கும் இசையமைப்பாளர்.

Tuesday, June 17, 2008

குசேலன் ஆடியோ உச்சவிலைக்கு விற்பனை!


ரஜினிகாந்த் நடிக்கும் குசேலன் படத்தின் ஆடியோ உரிமை இரண்டேகால் கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் ஒரு அங்கமான பிக் ம்யூசிக் இப்படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறது.

ரஜினிகாந்தின் முந்தைய படமான சிவாஜியின் ஆடியோ உரிமையை விட இது அதிகம். இப்படத்துக்காக ஐந்து பாடல்கள் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் தயாராகியிருக்கிறது.

பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். உதித் நாராயணன், சாதனா சர்கம், தலேர் மஹேந்தி, சித்ரா மற்றும் சங்கர்மகாதேவன் ஆகியோர் பின்னணி பாடியிருக்கிறார்கள்.

Thursday, June 12, 2008

தசாவதாரம்!! விஐபிக்கள் புகழாரம்!

உலகிலேயே முதன்முறையாக பத்துவேடத்தில் ஒரே நடிகர் தோன்றும் தசாவதாரம் திரைப்படம் ஜூன் 13 அன்று வெளியாகிறது. படவெளியீட்டுக்கு முன்பாக விஐபிக்களுக்கு சிறப்புக்காட்சிகள் போடப்பட்டு வருகிறது.

படத்தை முதலில் பார்த்த தமிழக முதல்வர் கமல்ஹாசன் ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் என்று புகழாரம் சூட்டினார். இந்நிலையில் சினிமா பிரபலங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கு ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் சிறப்புக் காட்சி போட்டு காட்டினார் கமல்ஹாசன்.

தனது முப்பத்தைந்து ஆண்டுகால நண்பரான ரஜினி படம் பார்க்கவந்ததில் கமல்ஹாசன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசனின் குருநாதரான இயக்குனர் கே.பாலச்சந்தரும் ரஜினியோடு படம் பார்த்தார். சரத்குமார், சத்யராஜ், சூர்யா, ஜோதிகா, பிரபு, ராம்குமார், நாகேஷ், மனோரமா, சந்தானபாரதி, கிரேஸி மோகன், ஆர்.சி.சக்தி, சுந்தர் சி. குஷ்பு என்று கமலுக்கு நெருக்கமான சினிமாவுலகத்தினரும் படம் பார்த்தனர்.

படம் முடிந்ததுமே ரஜினிகாந்த் கமல்ஹாசனை கட்டிப்பிடித்து பாராட்டினார். இயக்குனர் பாலச்சந்தர், மனோரமா உள்ளிட்டோர் பேச வார்த்தைகளில்லாமல் கமல்ஹாசனை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

சினிமா பிரபலங்களுக்கு மட்டுமன்றி அரசியல் பிரமுகர்களுக்கு சென்னை வடபழனியில் இருக்கும் பிரசாத் லேப்பில் சிறப்புக் காட்சிகள் போட்டு காட்டப்பட்டு வருகிறது. இதுவரை படம் பார்த்தவர்கள் அனைவருமே கமல்ஹாசனின் நடிப்பாற்றலை சிலாகித்து பேசிவருகிறார்கள்.