Thursday, January 31, 2008
கமலும், ரஜினியும் இணைகிறார்கள்?
தமிழ் சினிமா ரசிகர்களின் கால் நூற்றாண்டு கனவு இது. இணைந்து பல படங்கள் நடித்த நண்பர்களான ரஜினியும், கமலும் தத்தமது முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு 25 ஆண்டுகளுக்கு முன்பாக தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள். இருவரும் கே. பாலச்சந்தர் தயாரிக்கும் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று சென்ற ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. அது இந்த ஆண்டு நடக்கும் என்று தெரிகிறது.
கே.பாலச்சந்தரின் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் குசேலர். அண்ணாமலை, முத்து என்று ரஜினி நடித்த பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் நட்புக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டவை. குசேலர் திரைப்படமும் இவ்வகையிலேயே சேரப்போகிறது. குசேலர் படத்தின் மலையாள மூலமான ‘கத பறயும் போள்' திரைப்படத்தை பார்த்த ரஜினி கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே திரும்பிப் பார்த்தது போல உணர்ந்தாராம். அதனாலேயே ரோபோவுக்கு முன்பாக இத்திரைப்படத்தில் நடித்துவிட அதிக ஆர்வம் காட்டினார்.
சாமனியனாக நண்பர்களோடு வாழ்க்கையை வாழ்ந்த ஒருவர், திரைத்துறையில் வாய்ப்பு பெற்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பின்னரும் பழைய நட்புகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அத்திரைப்படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் நிஜவாழ்க்கைக்கும், உணர்வுகளுக்கும் மிகவும் நெருங்கிய வகையில் இக்கதை யதேச்சையாக அமைந்திருக்கிறது.
நட்புக்கு முக்கியத்துவம் தரும் இக்கதையில் தன்னுடைய நீண்டகால நண்பரும் ஒரு காட்சியிலாவது இடம்பெற்றால் அது தனக்கு திருப்தி தரும் என்று சூப்பர்ஸ்டார் நினைக்கிறார். எனவே படத்திலும் நடிகராக நடிக்கும் ரஜினிக்கு இன்னொரு நடிகர் விருது தருவதைப் போன்ற ஒரு காட்சியில் கமல் இடம்பெறும் வகையில் காட்சிகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. தன்னுடைய திரையுலக குரு தயாரிக்கும் படம், நீண்டகால நண்பர் நடிக்கும் படம் என்பதால் மறுபேச்சில்லாமல் கமலும் சம்மதிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்ளுகிறார்கள்.
ரஜினியும், கமலும் தனித்தனியாக திரையில் வந்தாலே திரையரங்குகளில் ஆரவாரம் விண்ணை முட்டும். இருவரும் ஒரே காட்சியில் இணைந்துவந்தால் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் தானே?
Posted by PYRAMID SAIMIRA at 1/31/2008 11:40:00 AM 0 comments
Tuesday, January 29, 2008
விஷாலுடன் நயன்தாரா இணையும் ‘சத்யம்'
மலைக்கோட்டை படத்தில் போலிஸ்காரர்களை புரட்டி எடுத்த விஷால் அடுத்த படமான சத்யமில் போலிஸாக ரவுடிகளை புரட்டி எடுக்கப் போகிறார். விஷால், நயன்தாரா இருவருமே சமீபத்தில் வென்ற படங்களில் நடித்தவர்கள் என்பதால் சத்யம் படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருப்பதில் ஆச்சரியமில்லை. அச்சு அசலாக ஒரு காவல்துறை அதிகாரியின் தோற்றம், மேனரிசத்துக்கு திடீரென்று விஷால் மாறியிருப்பது தான் ஆச்சரியம்.
வடசென்னையின் பிரபல காவல்துறை அதிகாரி போன்ற கெட்டப்புக்கு விஷால் மாறியிருக்கிறார். முறுக்கிய மீசை, தினவெடுக்கும் தோள்கள் என்ற Rough ஆக இருக்கிறார். ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடமாம் விஷாலுக்கு. ஏப்ரல் 14 அன்று சத்யம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
Posted by PYRAMID SAIMIRA at 1/29/2008 02:40:00 PM 0 comments
மகேஷ், சரண்யா மற்றும் பலர்!
தமிழில் படங்களுக்கு தலைப்பிட்டால் கேளிக்கை வரிச்சலுகை என்று தமிழக அரசு அறிவித்தாலும் அறிவித்தது, இப்போது தமிழில் வரும் படங்களுக்கெல்லாம் வித்தியாசமான தமிழ் பெயர்கள். இவ்வளவு பெயர்கள் இவ்வளவு நாட்கள் எங்குதான் ஒளிந்திருந்ததோ?
இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி (சின்னத்தம்பியில் சின்னப் பையனாக வந்தவர்) நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்!' இயக்குனர் லிங்குசாமியின் உதவியாளர்கள் பலரும் இயக்குனர்களாக மாறும் காலக்கட்டம் இது போலிருக்கிறது. இப்படத்தை இயக்கும் இயக்குனர் ரவியும் லிங்குசாமியிடம் பணியாற்றியவர்.
வித்யாசாகர் இசையமைக்கும் இப்படத்தில் சந்தியா கதாநாயகியாக நடிக்க கீர்த்திசாவ்லா, டேனியல் பாலாஜி போன்றோரும் நடிக்கிறார்கள். ‘பிடிச்சிருக்கு' படத்தை வெளியிட்ட கூல் புரொடக்சன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.
Posted by PYRAMID SAIMIRA at 1/29/2008 12:29:00 PM 2 comments
Monday, January 28, 2008
நேபாளி - ஸ்டில்ஸ்!
வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறேன் என்று எந்தவொரு நடிகரும் மிக சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் வித்தியாசம் என்பது ஏற்கும் வேடத்தில் மட்டுமல்ல தோற்றத்திலும் இருக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர்கள் மிக சில நடிகர்களே. திருவருட்செல்வரில் நடிகர் திலகம் தோன்றிய கதாபாத்திரமாகட்டும், இந்தியனில் கமல்ஹாசன் தோன்றிய கதாபாத்திரமாகட்டும் வேடத்தில் மட்டுமல்லாமல் தோற்றத்திலும் கடும் உழைப்பை செலுத்தி வித்தியாசப்படுத்தினார்கள்.
சேது படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கு நடிகர் விக்ரம் சில காலம் வெறும் ஐஸ் க்யூப்களை மட்டுமே உணவாக உண்டு உடல் மெலிந்தார். நிறம் கருக்க வேண்டுமென்பதற்காக தினமும் சில மணி நேரம் வெய்யிலில் நின்றார். இவர்களைப் போலவே கதாபாத்திரத்தின் தோற்றத்துகாக மிகவும் மெனக்கெடும் நடிகர்களில் ஒருவர் பரத். காதல் படத்திற்காக நிறம் கருத்து சாமானிய மோட்டர் பைக் மெக்கானிக்காக மாறியவர் இப்போது நேபாளி படத்துகாக அச்சு அசலாக கூர்க்காவாகவே தோற்றத்திலும் மாறியிருக்கிறார்.
இந்த ஒப்பனை செய்ய மட்டுமே நான்கு மணி நேரம் தேவைப்படுகிறதாம். முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எனக்குள் ஒருவன் திரைப்படத்தில் கமல்ஹாசன் நேபாளியாக தோன்றினார். தசாவதாரம் படத்தின் சில தோற்றங்களுக்காக எட்டுமணி நேரம் ஒப்பனை மட்டுமே கமலுக்கு தேவைப்பட்டதாம்.
முகவரி, தொட்டிஜெயா படங்களை இயக்கிய துரை நேபாளியை இயக்குகிறார். பரத்துக்கு இணையாக மீராஜாஸ்மின் நடிக்கிறார். நேபாளி படத்திலிருந்து சில காட்சிகளும், பரத்தின் வித்தியாசமான தோற்றமும் கீழே :
Posted by PYRAMID SAIMIRA at 1/28/2008 02:01:00 PM 1 comments