Tuesday, July 1, 2008

குசேலன் படவிழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!


குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் ரஜினியின் பேச்சு பரபரப்பாக அமைந்தது. அவர் பேசியதாவது :

“அம்மா, அப்பா, குரு எல்லாமே எனக்கு கே.பாலசந்தர்சார் தான். இன்று எனக்கு கிடைத்திருக்கும் பெருமை, புகழ் அத்தனையும் அவரைத்தான் சேரும். குசேலன் வெள்ளிவிழா கொண்டாடும் என்கிறார்கள். படத்தின் வெற்றி எந்த அளவுக்கு இருக்கும் என்பதில், படத்தை வாங்கியிருக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை விட, நான் `டென்ஷன்' ஆக இருக்கிறேன். ஆண்டவன் அருளால் நிச்சயம் வெற்றி பெறும்.

'அண்ணாமலை' படத்துக்குப்பின், நான் சொந்த பட நிறுவனம் தொடங்கியபின், 12 வருடங்களாக என்னிடம் பாலசந்தர் சார் `கால்ஷீட்' கேட்கவில்லை. சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களில் நடித்தபின், பெரிய அளவில்தான் படம் செய்ய வேண்டும் என்று அவரிடம் நான் கூறினேன். இடையில் ஒரு சின்ன படமும் பண்ணலாம்ப்பா என்றார்.

மலையை தூக்கி காட்டிவிட்டு, கடப்பாரையை தூக்கி காட்டினால் ஜனங்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்று நான் யோசித்தேன். பாட்ஷா, முத்து, சிவாஜி, சந்திரமுகி ஆகிய படங்களுக்குப்பின், எதிர்பார்ப்பு அதிகம் ஆகிவிட்டது. அதனால்தான் கவிதாலயா நிறுவனத்துடன் செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், தெலுங்கு பட அதிபர் அஸ்வினிதத் ஆகியோரையும் இணைத்து இந்த படத்தை ஆரம்பித்தோம். இரண்டு பேர் இணைந்தாலே சண்டை வரும். அரசியல் வரும். ஆனால் இங்கே மூன்று பேர் இணைந்தாலும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு எந்த குழப்பமும் இல்லாமல், படம் எடுத்தார்கள்.

படப்பிடிப்பின்போது, “ரஜினி சந்தோஷமா இருக்காரா, அவர் சந்தோஷம்தான் முக்கியம்” என்று பாலசந்தர் சார் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருந்தார். என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டார்கள். என் இளமையான தோற்றம் பற்றி குறிப்பிட்டார்கள். அதற்கு அன்புதான் காரணம். படப்பிடிப்பு குழுவினர் காட்டிய அன்புதான் காரணம்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக யாரை போடலாம்? என்று யோசித்தபோது, இளையராஜாதான் என் மனதில் வந்தார். ஒருநாள், `வெயில்' படத்தின் சி.டி.யை கேட்டபோது, பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. ஜீ.வி.பிரகாஷ் எப்படி? என்று டைரக்டர் ஷங்கரிடம் கேட்டேன். அருமையான பையன் என்றார். ரகுமானிடம் உள்ள பிளஸ் பாயிண்ட் அத்தனையும் இவரிடம் இருக்கிறது. மைனஸ் பாயிண்ட் என்னன்னும் தெரியலை. இரவில்தான் வேலை செய்கிறார்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் என் பக்கத்தில் ஒரு பையன் வந்து நின்றான். ரொம்ப நேரமாக என்னையே பார்த்துக்கொண்டு பக்கத்தில் நின்றான். இந்த பையனை அனுப்பாமல், பக்கத்தில் நிற்க வைத்து இருக்கிறார்களே என்று எனக்கு கோபம் வந்தது. அந்த பையனிடம், “போட்டோ எடுக்கணுமா?” என்று கேட்டேன்.

“ஆமாம்” என்றான். பக்கத்தில் நின்றவர்கள், “சார் இவர்தான் ஜீ.வி.பிரகாஷ்” என்றார்கள். பாடல்களை கேட்டு ஆச்சரியப்பட்டேன். இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கலந்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். அதற்கு டைரக்டர் வாசு முக்கிய காரணம். பி.ஆர்.ஓ. வேலை உள்பட எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார். இந்த படத்தில் நான் மிக இளமையாக இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். சிலருக்கு சந்தேகம். இமயமலைக்கு போய் வேர் ஏதாவது சாப்பிடுகிறாரோ என்று. நான், வெள்ளை நிறத்தில் உள்ள உணவுவகைகளை சாப்பிடுவதில்லை. உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி சாதம், பால், தயிர், நெய் இதெல்லாம் சாப்பிடுவதில்லை. 40 வயதுக்கு மேல் உணவு பழக்கவழக்கங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடவேண்டும். 4 வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நான் இப்படி சொன்னதற்காக, ஒரேயடியாக உணவை குறைத்து விடாதீர்கள். மன அழுத்தம் வந்துவிடும். 20 வயதில் இருந்து 40 வயது வரை நல்லாவே சாப்பிடலாம். வெள்ளை நிற உணவுகளை தவிர்த்தாலே உடம்பு நல்லாயிருக்கும். உடம்புக்கு ஆயில் வேண்டும் அல்லவா?

நான் நல்லா இருக்கேன். நல்லாவே இருப்பேன். நல்லதே நடக்கும்.

இவ்வாறாக ரஜினிகாந்த் பேசினார்.

0 comments: