Tuesday, September 25, 2007

சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 4வது வாரம்)

வழக்கம் போல 20-20 கிரிக்கெட் உலக கோப்பையால் சென்றவாரமும் சென்னை திரையரங்குகளில் அவ்வளவு கூட்டமில்லை. உடம்பு எப்படியிருக்கு, நம்நாடு, சிவி ஆகிய படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வார டாப் டென் படங்கள்.

01. மருதமலை
ஆக்சன் கிங் அசத்துகிறார். வடிவேலு + அர்ஜூன் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ரிபீட் ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்கும் பொறுப்பை வடிவேலு பார்த்துக் கொள்கிறார்.

02. நம்நாடு
சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்பு வெளியாகிய படம் என்பதால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் கதையும் அரசியல் சம்பந்தமான கதை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

03. சத்தம் போடாதே!
மல்டிபிளக்ஸ் ரசிகர்களுக்கான படம். யுவன்ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு கூட்டத்தை கூட்டுகிறது. இனிய பாடல்கள்.

04. உடம்பு எப்படியிருக்கு?
படத்தின் டைட்டிலே படத்துக்கு நல்ல பலம். சுமாரான ஓபனிங். டப்பிங் படத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதே பெரிய விஷயம்.

05. சிவாஜி
14 வாரங்களை கடந்திருக்கிறார் சிவாஜி. இன்னமும் கூட வாரத்துக்கு மூன்று லட்சங்களை வசூலிப்பது ஆச்சரியம். சென்னையில் மட்டும் இதுவரை பதினொன்றரை கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கிறது.

06. அம்முவாகிய நான்
25 நாட்களை கடந்த நிலையில் தியேட்டர்களில் கூட்டத்தை கூட்ட அம்மு சிரமப்படுகிறாள். ஆயினும் நான்குவாரங்களில் சென்னையில் மட்டும் அரை கோடி வசூலை வசூலித்ததால் விநியோகம் செய்தவர்களுக்கு பிரச்சினை இல்லை.

07. சிவி
மிகக்குறைந்த தியேட்டர்களிலே மட்டும் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் ஆச்சரியகரமாக பாராட்டும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. சுமாரான ஓபனிங். சூடுபிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

08. திருத்தம்
தூத்துக்குடி போல இல்லை என்ற குறை ரசிகர்களுக்கு. A சென்டரில் சொல்லி கொள்ளும்படியான கூட்டமில்லை. B மற்றும் C சென்டர் ரசிகர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

09. பள்ளிக்கூடம்
ஆறுவாரங்களை கடந்திருந்த நிலையிலும் சொல்லிக்கொள்ளும்படியான கூட்டம் இத்திரைப்படத்துக்கு இருக்கிறது. பள்ளிக்கூடம் அதத வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு புன்னகையை வரவைத்திருக்கிறது.

10. இனிமே நாங்கதான்
குட்டீஸ்களுக்கு பள்ளி அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் ஓரளவுக்கு திரையரங்குகள் நிரம்புகிறது. தமிழில் இதுபோன்ற 3D அனிமேஷன் திரைப்படங்கள் வெளிவர ரசிகர்களின் ஆதரவு அவசியம். இளையராஜாவின் இசை இப்படத்துக்கு பெரும்பலம்.

0 comments: