Saturday, September 8, 2007

மாதர் சங்கத்தினர் - ரா.பார்த்திபன், பாரதி, பத்மாமகன் கலந்துரையாடல்!

அம்முவாகிய பாரதி

சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் செப்டம்பர் 7 அன்று பகல் காட்சி 100 சதவிகிதமும் மகளிருக்காக ஒதுக்கப்பட்டது. 'அம்முவாகிய நான்' படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிக-நடிகையரும் மகளிர் அமைப்புகளுடன் அமர்ந்து படம் பார்த்தார்கள். படம் முடிந்ததுமே படக்குழுவினருடன் மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துரையாடினர்.

திரண்டிருந்த தாய்க்குலங்கள்

படத்தை பாராட்டிப் பேசும் சகோதரி

இச்சந்திப்பில் பேசிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தனலட்சுமி :

"தமிழ் படங்களில் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் சித்தரித்த திரைப்படங்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். கொடி பிடித்து, போஸ்டர் அடித்து, அவ்வளவு ஏன் தியேட்டர்களின் வாசலில் நின்று தக்காளி, முட்டையெல்லாம் கூட அடித்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறோம்.

'அம்முவாகிய நான்' படத்துக்கு எதிராகவும் அதுபோல போராட்டம் நடத்த வேண்டியிருக்குமோ என்று முன்பு நினைத்தேன். ஆனால் படம் பார்த்து முடித்தபின் என்னால் இருக்கையை விட்டு உடனே எழ முடியவில்லை. கண்களில் நாலு சொட்டு நீர் தேங்கியிருந்தது. நல்ல படம் தந்த இக்குழுவுக்கு எனது நன்றிகள்!"

ஆட்டோகிராப் போடும் ரா. பார்த்திபன்

நடிகர் ரா.பார்த்திபன் பேசியபோது,

"இத்திரைப்படத்தின் கதையை முதன்முதலாக இயக்குனர் என்னிடம் சொன்னபோது ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்தது. அம்முவை திருமணம் செய்துகொண்டு வரும் கெளரிசங்கர் முதலிரவில் "நீ தனியாக தூங்கப் போகிற முதல் ராத்திரி இதுதான்!" என்பான். என்னை சிந்திக்க வைத்த காட்சி அது. ஒரு பாலியல் சேவகரின் கல்லறையில் எழுதியிருந்ததாம் 'இங்குதான் இவள் தனியாக தூங்குகிறாள்' என்று. இக்காட்சியை காணும்போது அந்த கல்லறை தான் என் நினைவுக்கு வருகிறது.

படம் பார்த்தவர்கள் நிறைய பேர் படத்தின் முதல் பாதியில் அம்மு 'தாராளமாக' நடித்திருப்பதாக குறிப்பிட்டார்கள். அப்படிப்பட்டவர் இரண்டாம் பாதியில் கண்ணியமான மனைவியாக மாறும்போது, மாற்றத்தின் வித்தியாசத்தை படம் பார்ப்பவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. லட்சுமணன் ராமனாக மாறுவது மாற்றமல்ல. ராவணன் ராமனாக மாறுவதுதான் ஆச்சரியப்படுத்தும் மாற்றம்.

இப்படம் பார்த்த ஒரு பெண் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "சார் கெளரி மாதிரி ஒரு கணவன் கிடைப்பதாக இருந்தால் நான் வேசியாகவும் மாறத் தயார்னு" சொன்னாங்க. தவறு சகோதரி. ஒவ்வொரு அம்முவுக்கு ஒரு கெளரிசங்கர் நிச்சயம் கிடைப்பான்னு நெனைக்கிறது தவறு. அம்முவுக்கு கிடைத்த நல்வாழ்க்கையில் கெளரிசங்கர் வெறும் குறியீடு மட்டுமே. வாழ்க்கையைத் தொலைத்த பெண்களுக்கு தன்னம்பிக்கை பிறக்குமானால், அவர்கள் எல்லோருமே நல்வழியில் வாழ்க்கையை வென்று விருது பெறுவார்கள் என்பதே இப்படம் சொல்லவரும் கருத்து"

பாராட்டு மழையில் நனைந்த இயக்குனர் பத்மாமகன்

இறுதியில் பேசியவர் இயக்குனர் பத்மாமகன்.

"இப்படம் ஆரம்பிக்கும் போதே தெளிவாக இருந்தேன். படத்தின் எந்த காட்சியும் பெண்களை எந்த விதத்திலும் இழிவுபடுத்துவதாகவோ, பெண்ணுரிமைக்கு எதிரானதாகவோ இருந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். இப்போது உங்கள் பாராட்டுக்களை அவதானிக்கும் போது என்னுடைய நோக்கம் சரியாகவே இலக்கை எட்டியிருப்பது தெரிகிறது.

படம் பார்த்த ஒரு பெண் இறுதிக்காட்சியில் நாலு சொட்டு கண்ணீர் விட்டதாக சொன்னார். அவர் சொன்னவுடனேயே நெகிழ்ச்சியில் என் கண்களில் எட்டு சொட்டு கண்ணீர் வழிந்தது. இதை விட மிகச்சிறந்த விருது வேறு எதுவும் எனக்கு கிடைக்காது.

சில குறைகளையும் மகளிர் அமைப்புகள் தெரிவித்திருக்கிறார்கள். விருப்பத்தோடு அவற்றை திருத்திக் கொள்கிறோம். உங்களது பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள் இப்படத்தில் பணிபுரிந்த நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆடியன்சுடன் அம்மு!

0 comments: