திரையுலகுக்கு செப்டம்பர் கடைசி வார இறுதி கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது. 20-20 உலகக்கோப்பை போட்டி முடிந்து விட்டதால் தியேட்டர்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே அலைமோதியது. செப்டம்பர் மாத ஆரம்பம் திரையரங்குகளுக்கு ஏமாற்றமளித்தாலும் முடிவு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
01. மலைக்கோட்டை : புரட்சித் தளபதி என்ற புதியபட்டத்துடன் களமிறங்கியிருக்கிறார் விஷால். மசாலா படமான மலைக்கோட்டை நல்ல வசூலை ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கிறது. பத்திரிகை விமர்சனங்கள் படத்துக்கு அவ்வளவாக சாதகமாக இல்லையென்ற போதிலும் விஷாலின் மாஸ் படத்தை காப்பாற்றியிருக்கிறது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கோலம்.
02. மருதமலை : செப்டம்பர் 2ம் வாரம் வெளியாகி தொடர்ந்து முதலிடத்தில் இருந்த மருதமலை இவ்வாரம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வெளியான மூன்றே வாரங்களில் சென்னையில் ஒன்றேகால் கோடியை வசூலில் நெருங்கியிருக்கிறது.
03. சத்தம் போடாதே : பெரிய எதிர்ப்பார்ப்புடன் வந்த திரைப்படம். பத்திரிகைகள் பாராட்டினாலும் ரசிகர்கள் கைகொடுக்க வேண்டுமே? மல்டிபிளக்ஸ்கள் மட்டும் அரங்கு நிறைகிறது.
04. நம்நாடு : அரசியலுக்கு வந்திருக்கும் சரத்குமார் நடித்த அரசியல் படம். பரபரப்பாக ஏதாவது படத்தில் இருக்கும் என்று நம்பிய ரசிகர்கள் ஏமாந்திருக்கிறார்கள். இதே கதையுடன் வெளியான டப்பிங் படம் ஒன்றினால் இப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
05. உடம்பு எப்படியிருக்கு? : தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்ட படம் ஆச்சரியகரமான வகையில் அரங்கு நிறைந்து ஓடுகிறது. தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாக டாக்டர் ராஜசேகர் நடித்த படம் என்பதால் B மற்றும் C அரங்குகளில் நல்ல வரவேற்பு
06. வேகம் : சென்றவார இறுதியில் வெளியான வேகம் இன்னமும் வேகம் பிடிக்கவில்லை. எஸ்.வி.சேகரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். பிரபு - குஷ்பு நீண்டநாட்களுக்கு பிறகு இணைந்து நடித்திருக்கிறார்கள்.
07. சிவாஜி : நூறு நாட்களை கடந்தும் பல தியேட்டர்களில் வெற்றிநடை போடுகிறார் சூப்பர் ஸ்டார். தமிழ் திரையுலகம் நினைத்துப் பார்க்க முடியாத மெகா வசூல்.
08. சிவி : ஆச்சரியமளிக்கும் வசூல். ஸ்டார் வேல்யூ, அதிக விளம்பரங்கள் இல்லாமல் வெளியாகியிருக்கும் சிவி நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
09. அம்முவாகிய நான் : நான்கு வாரங்களை கடந்த நிலையில் வசூலில் சறுக்கியிருக்கிறாள் அம்மு. ரசிகர்களிடையே நல்ல படம் என்று பெயரெடுத்திருப்பது அம்முவின் சாதனை.
10. பள்ளிக்கூடம் : ஏழுவாரங்களை கடந்த பள்ளிக்கூடம் சென்ற வாரம் ஈயடித்தது.
DCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்
Wednesday, October 3, 2007
சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். இறுதி வாரம்)
Posted by PYRAMID SAIMIRA at 10/03/2007 11:18:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment