Wednesday, November 28, 2007

50 கோடி சம்பளம்! - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம்!!


1982ல் வெளிவந்த சீனமொழித் திரைப்படமான ஷாவோலின் டெம்பிளை அடிதடி சினிமா ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படத்தில் அறிமுகமான ஜெட்லீ 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் சைனா' திரைப்படவரிசைகளால் அடிதடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 1963ல் பிறந்த ஜெட்லீ பாரம்பரிய சீனக்கலைகளில் நன்கு தேறி தேசிய சாம்பியன் பட்டத்தையும் தற்காப்பு கலையில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட்லீ திரைப்படங்களில் நியூட்டனின் புவியீர்ப்பு விதிகளுக்கு எதிரான காட்சிகள் அதிகளவில் இடம்பெறும். இறக்கையில்லாமலேயே பறந்து பறந்து அடிப்பார். அவர் காலால் எட்டி உதைத்தால் இரும்புத்தூண்கள் கூட தூள்தூளாக நொறுங்கிவிடும். அரிவாள் போன்ற ஆயுதங்களோடு ஜெட்லியை வில்லன்கள் தாக்கினாலும் மூங்கில் கழி மூலமாகவே அந்த அரிவாள் வில்லன்களை வெட்டி சாய்ப்பார். உடான்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் அவரது வேகம் அடிதடி ரசிகர்களை வெகுவாக அவர் பக்கம் திருப்பியது.

லெத்தால் வெபன் நான்காவது பாகத்தில் வில்லனாக அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகியபோது உலகெங்கும் பரவலாக கவனிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 'ரோமியோ மஸ்ட் டை' திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உலகப்புகழ் பெற்ற ஆசிய ஆக்ஷன் நடிகர்களான ப்ரூஸ்லீ, ஜாக்கிசான் வரிசையில் இடம்பெற்றார்.

2002ஆம் ஆண்டில் ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ. 35 கோடி சம்பளம் பெற்றபோது எல்லோரும் ஜெட்லீயை ஆச்சரியமாக பார்த்தார்கள். இப்போது பீட்டர் சான் இயக்கும் 'வார் லாட்ஸ்' திரைப்படத்துக்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று அசத்தியிருக்கிறார். தற்போது மம்மி திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில் உயிர்த்தெழும் பண்டைய சீனப்பேரரசராக நடித்துவருகிறார் ஜெட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: