Monday, November 19, 2007

காதல் - Part 2?


நல்ல படங்களை பார்ப்பதோ அல்லது இயக்குவதோ மட்டும் பெரிய விஷயமல்ல. நல்ல படங்களாக தயாரிப்பது அவை எல்லாவற்றையும் விட பெரிய விஷயம். தமிழ் திரையுலகில் நல்ல படங்கள் தயாரித்தவர் என்ற பெயர் அமரர் எஸ்.எஸ்.வாசனுக்கு உண்டு. இப்போது அதுபோன்று பெயர் எடுப்பவர் இயக்குனர் ஷங்கர்.


ஷங்கரின் தயாரிப்பில் வந்த காதல், இம்சை அரசன், வெயில் திரைப்படங்கள் நல்ல படங்கள் என்று பாராட்டப்பட்டது மட்டுமன்றி வணிகரீதியாகவும் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கினருக்கும் வசூல்ரீதியாகவும் மகிழ்ச்சி அளித்தது. தொடர்ந்து அதுபோன்ற திரைப்படங்களை தயாரிப்பேன் என்று சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில், ஷங்கர் தயாரித்த காதல் பெரும் வெற்றி பெற்று நல்ல தாக்கத்தை தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. மீண்டும் அதே ஷங்கர்! அதே பாலாஜி சக்திவேல்! திரைப்படம் - கல்லூரி! படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் காதல் Part-2வோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஒப்பனையற்ற வாழ்க்கையை படம்பிடித்து காதல் வெற்றி பெற்றது. வழக்கமான சினிமா கல்லூரி போலில்லாமல் இந்த கல்லூரிக்கு ஒப்பனை இருக்காது என்று தெரிகிறது. பள்ளிக் காதலை காதலில் காட்டியவர்கள் கல்லூரிக் காதலை கல்லூரியில் காட்டுவார்களா என்று பார்ப்போம்.

அகில் என்ற புதுமுகநாயகன் கதைநாயகனாக நடிக்க, கதைநாயகியாக தமன்னா நடிக்கிறார். என் படத்தில் கதை தான் நாயகன். நாயகன், நாயகி இல்லை என்கிறார் பாலாஜி சக்திவேல். அவர் சொல்லுவதற்கு ஏற்ப படவிளம்பரம் எதிலும் கதைநாயகன், கதைநாயகி படங்கள் இடம்பெறவில்லை. நோட்புக், டிபன்பாக்ஸ் போன்றவற்றின் படங்களே இடம்பெறுகிறது. காதல் திரைப்படத்தில் ஸ்கூட்டி மற்றும் பைக்கினை எப்படி கதாபாத்திரமாக சித்தரித்தாரோ அதுபோலவே டிபன்பாக்ஸையும், நோட்புக்கையும் இப்படத்தில் சித்தரித்திருக்கிறார்.

"வெற்றியை தக்கவைத்துக் கொள்பவனே சிறந்த வெற்றியாளன், என்னுடைய முந்தைய திரைப்படமான காதலின் வெற்றி சினிமா ரசிகர்களிடையே என்மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதால் கல்லூரியில் அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்ய ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கி உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் உழைப்புக்கு தகுந்த வெற்றி அமையும் என நம்புகிறோம்" என்றார் இயக்குனர்.

காதல் படத்துக்கு இசையமைத்த ஜோஷ்வா ஸ்ரீதரே இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். ஆனந்த விகடனில் உலகத் திரைப்படங்கள் குறித்த பார்வையை எழுதிவரும் இலக்கிய விமர்சகர் செழியன் இத்திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. மணிரத்னம் வெளியிட ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.




1 comments:

  1. Anonymous said...

    This movie is based on Dharmapuri bus burning incident. The same scene has also been shot in which chezhiyan got injuries in face. They are keeping this secret as otherwise the particular political party may create touble for release.