Friday, September 5, 2008

சரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்!!


இன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.

சரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியில்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்கள் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.

வெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.

பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Thursday, September 4, 2008

எந்திரமானது ‘ரோபோ!'


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட திரைப்படம் ரோபோ. இப்படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.

ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிறது. சில காலம் முன்பு இந்தி நடிகர் ஷாருக் கான் இப்படத்தை தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்திலிருந்து முற்றிலுமாக ஷாருக்கான் விலகினார்.

அதைத் தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்துக்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென ரோபோ என்ற பெயரில் 9 தலைப்புகளை இந்தியில் ஷாருக்கான் பதிந்து வைத்து ஷங்கருக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து ஷங்கர் இப்போது படத்தின் பெயரை மாற்ற முடிவெடுத்திருக்கிறார். ரோபோ என்பது ஆங்கில பெயராக இருப்பதால் தமிழில் வரிவிலக்கு கிடைக்காது என்ற காரணம் காட்டி படத்தின் பெயரை ‘எந்திரம்' என்று மாற்றியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

எந்திரம் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஒரு மாதகாலம் நடைபெற இருக்கிறது. இதற்காக நாளை ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

Monday, September 1, 2008

தடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா!


அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வரும் 5ம் தேதி வெளிவரும் சரோஜா திரைப்படத்துக்கு தடை என்று சில செய்தித்தாள்களிலும், இணையத் தளங்களிலும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இந்தியன் வங்கியில் சரோஜா திரைப்படத்துக்காக தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்காக திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்தடையை நீதிமன்றம் விதித்திருந்ததாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்செய்தி பொய்யானது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் வந்திருக்கும் விவகாரம் வேறு பழைய விவகாரமென்றும், அந்த விவகாரத்துக்கும் சரோஜா படத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறியிருக்கிறது. மேலும் இவ்விவகாரம் நேற்றே தீர்க்கப்பட்டுவிட்டது. படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை, யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

வருகிற 5ஆம் தேதி 'சரோஜா' வெளிவருகிறாள். சென்னை-600028 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. சென்னை-28 இளைஞர் படையோடு பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகிய முன்னணி மூத்த நடிகர்களும் இணைந்திருப்பதால் திரையுலகிலும் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.