Friday, November 30, 2007

யார்யா ஆர்யா?


யார்யா ஆர்யா? என்று கேட்குமளவுக்கு முகத்துக்கு தாடி என்றில்லாமல் தாடிக்குள் முகமாக கடந்த ஓராண்டாக மாறிப்போனது நடிகர் ஆர்யாவின் முகம். இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என்று பல முன்னணி நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க அடித்தது யோகம் ஆர்யாவுக்கு.

இசைஞானி இளையராஜா இசையில், இயக்குனர் பாலா இயக்கும் நான் கடவுள் கடந்த ஓராண்டாக இப்போ வருமோ? எப்போ வருமோ? என்று ரசிகர்களை ஏங்கவைத்துக் கொண்டிருந்தது. ரசிகர்களின் ஏக்கத்துக்கு முடிவு வந்துவிட்டது. ஜனவரி 26 குடியரசு நாளன்று இரண்டு கடவுள்களும் வெள்ளித்திரைக்கு வருவார்கள் என்பதாக தெரிகிறது. ஒரு கடவுள் 'அறை எண் 305'ல் இருக்கிறார். இன்னொருவர் 'நானே கடவுள்' என்று சொல்லிக் கொள்பவர்.

மாஸ் மீடியாவில் விளம்பர மறுமலர்ச்சி!

எந்த ஒரு தயாரிப்புக்குமே விளம்பரம் செய்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் இன்றியமையாததாக இருக்கிறது. பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது மட்டுமே போதாத இந்த காலக்கட்டத்தில் மாஸ் மீடியா என்றழைக்கப்படும் தொலைக்காட்சி மற்றும் சினிமா திரைகளில் விளம்பரப்படுத்துவது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று.

உலகெங்கும் 703 திரைகளோடு வெற்றிநடை போட்டுவரும் பிரமிட் சாய்மீரா குழுமம் மும்பையைச் சார்ந்த சினிமா விளம்பர நிறுவனமான டிம்பிள்ஸ் சினி அட்வர்டைஸிங் & சினி ஆக்டிவேஷன்ஸ் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்கியிருக்கிறது.

டிம்பிள்ஸ் சினி நிறுவனம் 200 திரைகளில் விளம்பரம் செய்யும் உரிமைகளை ஏற்கனவே பெற்றிருப்பதால், பிரமிட் சாய்மீராவின் 703 திரைகளையும் சேர்த்து இனி கிட்டத்தட்ட ஆயிரம் திரைகளில் விளம்பரம் செய்யக்கூடிய சாத்தியக்கூறு விளம்பரதாரர்களுக்கு கிடைத்திருக்கிறது. உலகளவில் இது ஒரு சாதனையாக விளம்பர வல்லுனர்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரமிட் சாய்மீரா குழுமம் ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புகளிலும் இறங்கியிருப்பதால் விளம்பரதாரர்களுக்கான விளம்பரச் சவால்களை இனி மாஸ் மீடியாவில் பிரமிட் சாய்மீரா குழுமம் சார்பாகவே மிக சுலபமாக தீர்த்துக்கொள்ள முடியும். விளம்பரதாரர்கள் திரைவிளம்பரம் மட்டுமன்றி விளம்பரத்தின் எந்த வடிவத்தினையும் (ஸ்டால், எல்.சி.டி. திரை, டிக்கெட்டுகளின் பின்னால் அச்சடிக்கபடும் விளம்பரம் போன்றவை) இனி பிரமிட் சாய்மீரா தியேட்டர் குழும திரையரங்குகள் வாயிலாக செய்துகொள்ளலாம்.

உதாரணத்துக்கு தமிழகத்தில் Hutch நிறுவனம் Vodafone ஆக மாறியபோது பிரமிட் சாய்மீரா தியேட்டர் குழுமத்தின் திரையரங்குகள் வாயிலாக பெரிய அளவிலான ஹோர்டிங்குகளை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் நகர்ப்புறம் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் வைத்ததை கூறலாம்.

2010ஆம் ஆண்டுவாக்கில் சுமார் 4,000 திரையரங்க திரைகளை டிஜிட்டல்மயமாக்கும் பணிகளில் பிரமிட் சாய்மீரா குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அக்கட்டத்தில் இந்திய விளம்பர உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக பிரமிட் சாய்மீரா நிறுவனம் மாறிவிடும்.

"டிம்பிள் சினி விளம்பர நிறுவனத்தை எடுத்துக் கொண்டிருப்பதன் மூலமாக இந்தியாவின் மிகப்பெரிய ஊடகம் மற்றும் விளம்பரங்களை வெளியிடும் நிறுவனமாக மாறும் எங்கள் கனவு சாத்தியப்பட்டிருக்கிறது" என்று பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.எஸ்.சாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.

மசாலாவுக்கு துரை கேரண்டி!


ரொம்ப நாட்களாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த அர்ஜூன் மருதமலை சூப்பர் ஹிட் ஆனதால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிட்டு மீண்டும் தெம்போடு துரைக்காக ரெடியாகிவிட்டார். ரொம்ப சுமாரான கதையாக இருந்தாலும் சரியான விகிதத்தில் மசாலா தடவி சூப்பர் ஹிட் படங்களை தரும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இந்தமுறை அர்ஜூனோடு கைகோர்க்கிறார். பி.எல். தேனப்பன் தயாரிக்கிறார்.

மருதமலையின் வெற்றிகரமான காமெடி பார்ட்னர்ஷிப் இப்படத்திலும் தொடர்கிறது. மீண்டும் அர்ஜூனோடு மல்லுக்கட்டப் போகிறவர் வடிவேலு. கவர்ச்சி வேடங்களே எனக்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டு வந்த பத்மபிரியாவுக்கு கவர்ச்சி காட்ட இந்தப்படத்தில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

இசையமைப்பாளர் இமான் இசையில் அக்னிநட்சத்திரத்தில் இடம்பெற்ற "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" பாடல் இப்படத்துக்காக ரீமிக்ஸ் (இடையிடையே ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்படும். வேறென்ன?) செய்யப்படுகிறது. இப்பாடலின் படப்பிடிப்போடு தொடங்கப்பட்ட துரை தமிழ்ப்புத்தாண்டுக்கு திரைக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

Thursday, November 29, 2007

30வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ்?


ஜெனிபர் லோபஸை தெரியுமில்லையா உங்களுக்கு? ஜெலோ என்றால் கண்டிப்பாக தெரியும். பிரபல ஹாலிவுட் நடிகை, பாடகி, பாடலாசிரியர், டேன்ஸர், ஆல்பம் தயாரிப்பாளர் என்று பன்முகங்களுக்கு சொந்தக்காரர் ஜெனிபர் லோபஸ்.

உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகமே இவரை மிகுந்த சக்திவாய்ந்த நடிகை என்று பதிவு செய்திருக்கிறது. ஹாலிவுட்டில் அதிகசம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் எப்போதுமே ஜெனிபர் லோபஸ் இருப்பார். இவர் நடித்த 'மான்ஸ்டர் இன் லா', 'மெயிட் இன் மன்ஹாட்டன்', 'ஷல் வீ டேன்ஸ்' திரைப்படங்கள் வசூலில் சக்கைபோடு போட்டது. போர்ப்ஸ் பத்திரிகை உலகின் பணக்கார பெண்களில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறது.

பொதுஇடங்களுக்கு அபாயகரமான ஆடைகளை அணிந்து வந்து ஆடவர்களை அழவைப்பது அம்மணியின் பொழுதுபோக்கு. இவருடைய வசீகர சிரிப்பிலும், கட்டழகிலும் மயங்காதவர்களே ஹாலிவுட்டில் இல்லை. எனவே இவரது காதலர் மற்றும் கணவர் லிஸ்ட் டெலிபோன் டைரக்டரி அளவுக்கு மிகப்பெரியது. லேட்டஸ்ட் காதல் கணவர் பாடகர் மார்க் ஆண்டணி. உலக அழகியான தன்னுடைய முன்னாள் மனைவியை விவாகரத்து செய்து ஜெனிபர் லோபஸை கரம்பிடித்தார் ஆண்டனி.

இந்நிலையில் கடந்த வார அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதாகவும், முதல் குழந்தைக்கு தாயாகப் போவதாகவும் ஜெனிபர் லோபஸின் தாயார் சொன்னதாக ஒரு செய்திவந்தது. இச்செய்தி காட்டுத்தீயாக பரவி அமெரிக்காவில் கையெழுத்துப் பத்திரிகை நடத்துபவர்கள் கூட தலைப்புச் செய்தியாக போடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. இதுவரை இத்தகவலை ஜெனிபர் மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

ஜெலோவுக்கு மிக நெருக்கமான நிருபர் ஒருவர் அவரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இதுவரை ஊடகங்களால் நான் 29 முறை கருத்தரிக்கப்பட்டு விட்டேன். இப்போது வந்திருக்கும் தகவலின் படி பார்த்தால் 30வது தடவை" என்று விரக்தியாக தெரிவித்திருக்கிறார். அவர் கருத்தரித்திருக்கிறாரா இல்லையா என்பது சிதம்பர ரகசியம் போல பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜெனிபர் லோபஸுக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முயற்சிகளை நம்புகிறோம்!

"புதிய முயற்சிகளின் வெற்றி நிச்சயமற்றதாக இருந்தாலும், நாங்கள் யாரும் முயன்றிடாத புதிய முயற்சிகளையே நம்புகிறோம். இதை எங்கள் பங்குதாரர்களுக்கு சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நாங்கள் உலகளவில் உயர்ந்த இடத்தை பெறும் நோக்கத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம்" - பிஸினஸ் லைன் இதழுக்கு பிரமிட் சாய்மீரா தியேட்டர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பி.எஸ்.சுவாமிநாதன் அளித்த பேட்டியில் இவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவரது பேட்டியில் இருந்து :

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எங்கள் நிறுவனத்தின் பங்குகளை பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்தபோது இந்தியா முழுமைக்கும் எங்கள் வசமிருக்கும் தியேட்டர்களின் தரத்தை உயர்த்துவதாகவும், தியேட்டர்களை டிஜிட்டல் மயமாக்குவதாகும் தான் வாக்களித்திருந்தோம். இருப்பினும் அந்த நிலைகளை எல்லாம் தாண்டி இந்தியாவிலேயே அதிக அளவில் திரைப்படங்களை திரையிடும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறோம். உலகளவில் இப்போதைக்கு மூன்றாவது பெரிய தொடர்திரையரங்கு நிறுவனமாக மாறியிருக்கிறோம்.

படவிநியோகம் மட்டுமே என்ற நிலையை நீக்கி படவிநியோகம் மற்றும் திரையிடுதல் என்ற புதிய ஒரு துறையை எங்கள் நிறுவனம் இந்திய திரைப்படத் தொழிலில் உருவாக்கியிருக்கிறது. எங்கள் தொடர்திரையரங்குகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் திரைப்படத் தயாரிப்புகளிலும் இறங்கியிருக்கிறோம்.

இரண்டாம் கட்டமாக இந்திய திரைப்பட தொழில் என்ற நிலையை தாண்டி விரிவடைந்து கொண்டிருக்கிறோம். இப்போது அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் வலுவாக காலூன்றியிருக்கிறோம். புவியியல் ரீதியாக விரிவடைவது தொடர்திரையரங்கு தொழிலுக்கு ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி.

பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் திரைப்படங்களை திரையிடும் தொழிலை செய்து வருகிறது. இதே நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் மற்றும் பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட். எங்களது துணை நிறுவனங்கள் அனைத்துமே பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் என்ற ஒரே குடையின் கீழ் இயங்கும்.

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும். சிங்கப்பூரைச் சார்ந்த பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனமோ இத்துறையின் எந்த ஒரு தொழில்வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிற கலவையான நிறுவனம். உதாரணத்துக்கு ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தை சொல்லலாம். ஈரோஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை வாங்கி வெளிநாடுகளில் விநியோகம் செய்கிறது. பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் திரைப்படங்களை வாங்கி வெளிநாடுகளில் விநியோகம் செய்வது மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் - ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும் வாங்கி ஆசிய-பசிபிக் மண்டல நாடுகளில் விநியோகம் செய்யும்.

நல்லவேளையாக நாங்கள் நிறுவனத்தை தொடங்கும்போதே லாபகரமாக தொடங்கியபடியால் தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஏனைய துறைகளில் அதிவேக முன்னேற்றத்தை அடைய முடிந்திருக்கிறது. புதிய முயற்சிகளின் வெற்றி நிச்சயமற்றதாக இருந்தாலும், நாங்கள் யாரும் முயன்றிடாத புதிய முயற்சிகளையே நம்புகிறோம். இதை எங்கள் பங்குதாரர்களுக்கு சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நாங்கள் உலகளவில் உயர்ந்த இடத்தை பெறும் நோக்கத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய பார்வையில் சொல்வதானால் மற்றவர்களிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்துவது எங்களது வேகம் தான். நாங்கள் திரைப்படத்துறையில் எங்களது திட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டும் வேகமே எங்களை தனியாக காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலகளவில் வளர்ந்த நிறுவனங்களின் வளர்ச்சியைப் பார்த்தோமானால் அவர்கள் வளர்ச்சிக்கு நிறுவனங்களில் கட்டமைப்பு காரணமாக இருக்கவில்லை. இயங்கும் விதத்தில் இருந்த வேகமே அவர்களை வெற்றிபெற வைத்திருக்கிறது. கூகிள், ஜம்ப் டிவி, ரிலையன்ஸ், மிட்டல் க்ரூப் என்று எந்த நிறுவனத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா நிறுவனங்களில் பரிட்சார்த்த முயற்சிகளை எடுத்தவர்களாகவே இருப்பார்கள். இத்தனைக்கும் மிட்டல் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனங்களை கூட எடுத்து லாபகரமாக மாற்றிக் காட்டினார். புதிய முயற்சிகளை முறைப்படுத்த நினைக்கும் யாரும் வெற்றிவாய்ப்பை இழந்ததில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வேகம் நம்பமுடியாத வகையில் இருக்கிறது. நாங்களும் அதுபோன்றே அதிவேகத்தில் செயல்படுவதையே எங்கள் செயல்திட்டமாக கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இப்போது ஒரு பெரிய நிலையை அடைந்திருக்கிறோம். உண்மையில் நாங்கள் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் இரட்டிப்பாக வளர்கிறோம். இன்று எங்கள் திரையரங்குகளில் மட்டும் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சம். ஐந்து நாடுகளில் 703 திரைகளை நிர்வகிக்கிறோம். இந்த ஆண்டு இதுவரை 38 படங்கள் தயாரித்திருக்கிறோம். பாரமவுண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் மட்டுமே ஒரே ஆண்டில் இவ்வளவு திரைப்படங்களை தயாரித்திருக்க முடியும். தொண்ணூறு முதல் நூறு திரைப்படங்கள் வரை விநியோகித்திருக்கிறோம்.

தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் தயாரித்திருக்கிறோம். இந்தியாவின் நெ.1 தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான பாலாஜி டெலிபிலிம்ஸை இன்னும் இரண்டே மாதங்களில் முந்திச்செல்ல திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே எட்டு தொலைக்காட்சி சேனல்களில் அவர்களை விட அதிகநேர நிகழ்ச்சியை தரும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

சரியாக சொல்வதேயானால் எங்களது வளர்ச்சி என்னவென்பதை நாங்கள் இன்னமும் முழுமையாக உலகுக்கு அறிவிக்கவில்லை. இன்றைய நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படமாக இருந்தாலும் தயாரிப்பு நிலையிலோ அல்லது விநியோக நிலையிலோ, திரையிடும் நிலையிலோ எங்கள் கரங்களுக்கு வந்தே ஆகவேண்டும். நாங்கள் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறோம். எனவே எங்களைத் தவிர்த்து எந்த திரைப்படத்தையும் திரையிட இயலாது என்பதே யதார்த்தம்.

இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்த நிலையில் நிர்வாகச் சிக்கல்களை களைய புதிய மேலாண்மை உத்திகளை கையாளுகிறோம். 'நெட்வொர்க் மேனேஜ்மெண்ட்' என்ற புதிய நிர்வாக உத்தியை எங்களது தமிழ்நாடு கிளையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாடு கிளையை நிர்வகித்த உயர்நிர்வாகத்தை நீக்கி, அம்மண்டல அதிகாரிகள் குழுவுக்கே உயரதிகாரம் தந்திருக்கிறோம். இந்த உத்தி நல்லமுறையில் எங்களுக்கு பலன் தந்திருக்கிறது.

இப்போது பார்த்தோமானால், தமிழ்நாடு மண்டலம் மட்டுமே ஆண்டுக்கு நானூறு முதல் ஐநூறு கோடிகளை செலவிட்டு அறுநூறு கோடி ரூபாய் வரையிலான வர்த்தகத்தை செய்கிறது. ஒரு நாளைக்கு ஒன்றரை முதல் இரண்டு கோடி வரை செலவிடுகிறது. தினமும் ஒரு திரையரங்கை தன் எண்ணிக்கையில் இணைத்துக் கொள்கிறது. எங்களது அசுரவளர்ச்சி நிறுவன மேலாண்மைக்கான புதிய உத்திகளை கண்டறியவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாங்கள் சர்வதேச அளவில் ஏன் காலூன்ற வேண்டும்? அங்கு ஏற்கனவே எங்களைப் போன்றவர்கள் இல்லையா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. நிச்சயமாக வெளிநாடுகளில் எங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆயினும் ஆசிய மக்களுக்கு ஏற்ற திட்டங்கள் அவர்களிடம் இல்லை. ஆசிய-பசிபிக் மண்டலத்தின் பிரதிநிதி நிறுவனமாக நாங்கள் வர விரும்புகிறோம். எனவே தான் நாங்கள் காலூன்றிய வெளிநாடுகளில் இந்தியத் திரைப்படங்கள் என்றில்லாமல் அந்தந்த மண்டல மொழியிலான திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். உதாரணமாக மலேசியாவில் மலாய், சைனீஸ் மற்றும் ஆங்கில திரைப்படங்களை வெளியிடுவதிலும், தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறோம்.

அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளில் வாழும் ஆசியர்களை கவரும் பொருட்டு இந்தியத் திரைப்படங்களை அவர்கள் பார்வைக்கு வைக்கிறோம். வேறெந்த நிறுவனமும் இப்பணியை செய்யாததால் நாங்கள் செய்யவேண்டியிருக்கிறது. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியத் திரைப்படங்களை வினியோகம் செய்யமட்டுமே முன்வரும். நாங்கள் அப்படியில்லாமல் விநியோகம் மற்றும் திரையிடுதல் ஆகிய இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்துவதால், இந்தியத் திரைப்படங்கள் பெறவேண்டிய கவனஈர்ப்பினை சரியாக செய்கிறோம்.

திரையரங்குகளை டிஜிட்டல்மயமாக்கும் பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறோம். இதுவரை இருநூறு முதல் இருநூற்றி ஐம்பது திரையரங்குகள் வரை டிஜிட்டல்மயமாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த திரையரங்குகளை கணக்கிடும் போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான். டிஜிட்டல்மயமாக்கும் முறைகளிலேயே மிகவும் உயர்ந்த, தரமான, அதிக பொருள்செலவு ஏற்படுத்தக்கூடிய முறையையே நாங்கள் செய்துவருகிறோம். வங்கிகள் Core banking செய்வது வங்கிகளுக்கு எவ்வளவு அவசியமோ அதுபோலவே திரையரங்குகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதும் அவசியம். மிகச்சிறந்த திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தரவல்ல தொழில்நுட்பத் தீர்வு டிஜிட்டல் சினிமா. 2009-10ஆம் ஆண்டுகளில் எங்கள் வசம் இருக்கும் பெரும்பான்மை திரையரங்குகளை டிஜிட்டல்மயமாக்கி விடுவோம். ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளை தான் தென்னிந்தியாவில் கையகப்படுத்தும் திட்டம் எங்களுக்கு இருக்கிறது. அதன் பிறகு கையகப்படுத்திய திரையரங்குகளை நவீனமாக்கும்போது கண்டிப்பாக டிஜிட்டல்மயமாக்குவோம்.

மற்ற மல்டிபிளக்ஸ் குழுமங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசமே விலை தான். எங்களது நிறுவனம் திரையரங்கு அனுமதி டிக்கெட்டுகளை மிக குறைந்த விலைக்கு வழங்கிவருகிறது. திரையரங்கு அனுமதி கட்டணத்தை உயர்த்தி தான் திரையரங்குகளின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று நாங்கள் இதுவரை நினைக்கவில்லை. திரையரங்குகளின் தரத்தை உயர்த்தும் எங்களின் திட்டம் 2009ல் நடைமுறைப்படுத்தப்படும். நாங்கள் இன்னமும் குறைந்த லாபத்துக்கு பெரிய வணிகத்தை செய்யவே விரும்புகிறோம். ஆனால் அதற்காக F&B எனப்படும் எங்களது திரையரங்கு கேண்டீன்களில் லாபத்தையும், தரத்தையும் குறைத்துக் கொள்கிறோம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. F&B என்பது எங்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.

மக்களை ஏமாற்றமடைய வைக்காத அளவில் நூறு முதல் இருநூற்று ஐம்பது சதவிகிதம் வரையிலான லாபத்தை நாங்கள் F&Bயில் பெறமுடியும். ஒரு திரையரங்குக்கு சென்றால் காபி அல்லது பாப்கார்னை நீங்கள் பத்து ரூபாய்க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அது வெளியே ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும். எனவே திரையரங்கு கேண்டீன்களில் விலை அதிகம் என்று உணர்வீர்கள். அதையே எங்களது F&B உங்களுக்கு ரூ.7.50க்கு கொடுத்தால் மற்ற திரையரங்குகளை விட எங்களது திரையரங்கு கேண்டீன்களில் மலிவாக இருப்பதாக உணர்வீர்கள். நாங்கள் நிறைய உணவகங்களை எங்களது F&B மூலமாக உருவாக்க விரும்புகிறோம். நிச்சயமாக மற்ற தியேட்டர்களை விட எங்களது தியேட்டர்களில் இருக்கும் உணவகங்களில் விலை இருபது சதவிகிதமாவது குறைவாகவே இருக்கும்.

இந்த வருடம் தென்னிந்திய திரைப்படங்களுக்கு நல்ல வருடமா என்று கேட்டால், இல்லையென்றே சொல்வேன். படம் நன்றாக இருந்தாலோ அல்லது நன்றாக இல்லையோ, அது எங்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்த தீபாவளிக்கு பிரமிட் வசமிருக்கும் எல்லா திரையரங்குகளிலும் புதிய படம் எங்களால் வெளியிட முடிந்திருக்கிறது. காரணம் எல்லா திரைப்படங்களையும் நாங்களே வெளியிட்டிருப்பதால். திரைத்துறையில் நல்ல ஆரோக்கியமான போட்டியை எப்போதுமே நாங்கள் வரவேற்கிறோம்.

குஷ்பூ - அடுத்த சர்ச்சை ரெடி!


பெண்குழந்தைகளுக்கு பள்ளியில் முறையான பாலியல் அறிவுக்கல்வி வழங்கவேண்டும் என்று முன்பு குஷ்பு கூறி அது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது குஷ்புவை தேடி அடுத்த சர்ச்சை கச்சை கட்டி வந்திருக்கிறது.

கடந்த வாரம் இரா.பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' படப்பூஜைக்கு குஷ்பு வந்திருந்தார். பூஜையின் போது முப்பெரும் தேவியர் கடவுளர் சிலைக்கு அருகில் குஷ்பு அமர்ந்திருந்தார். அப்போது அவரது காலில் செருப்பு இருந்தது. இந்தப் படம் ஒரு வாரப்பத்திரிகையில் வெளியிடப்பட, அதைப்பார்த்து டென்ஷனான ஒருவர் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

திரையுலகப் பிரமுகர் ஒருவரிடம் இதுகுறித்து கருத்து கேட்டபோது, "இப்படியெல்லாம் பார்த்தா நாங்க வேலையே செய்யமுடியாது சார். குஷ்பு என்னா கோயில் கருவறைக்குள்ளா செருப்பு மாட்டிக்கிட்டு வந்தார்? இந்த சிலைகள் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டதல்ல. ஆர்ட் டைரக்டரால் பூஜைக்காக செட்டப் செய்யப்பட்டது. சினிமாவுக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆலயம் போலெல்லாம் செட்டிங் போடுகிறோம். அப்போது செருப்பு காலில்லாமல் வேலை செய்யமுடியுமா? வேலை செய்வதும் சாத்தியம் தானா? அதே நேரத்தில் மதவழிப்பாட்டுத் தலங்களில் படப்பிடிப்பு நடத்தும்போது மதநெறிகளுக்கு உட்பட்டு சினிமா தொழிலாளர்கள் நடந்துகொள்கிறோம்" என்றார்.

Wednesday, November 28, 2007

50 கோடி சம்பளம்! - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம்!!


1982ல் வெளிவந்த சீனமொழித் திரைப்படமான ஷாவோலின் டெம்பிளை அடிதடி சினிமா ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படத்தில் அறிமுகமான ஜெட்லீ 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் சைனா' திரைப்படவரிசைகளால் அடிதடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 1963ல் பிறந்த ஜெட்லீ பாரம்பரிய சீனக்கலைகளில் நன்கு தேறி தேசிய சாம்பியன் பட்டத்தையும் தற்காப்பு கலையில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட்லீ திரைப்படங்களில் நியூட்டனின் புவியீர்ப்பு விதிகளுக்கு எதிரான காட்சிகள் அதிகளவில் இடம்பெறும். இறக்கையில்லாமலேயே பறந்து பறந்து அடிப்பார். அவர் காலால் எட்டி உதைத்தால் இரும்புத்தூண்கள் கூட தூள்தூளாக நொறுங்கிவிடும். அரிவாள் போன்ற ஆயுதங்களோடு ஜெட்லியை வில்லன்கள் தாக்கினாலும் மூங்கில் கழி மூலமாகவே அந்த அரிவாள் வில்லன்களை வெட்டி சாய்ப்பார். உடான்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் அவரது வேகம் அடிதடி ரசிகர்களை வெகுவாக அவர் பக்கம் திருப்பியது.

லெத்தால் வெபன் நான்காவது பாகத்தில் வில்லனாக அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகியபோது உலகெங்கும் பரவலாக கவனிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 'ரோமியோ மஸ்ட் டை' திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உலகப்புகழ் பெற்ற ஆசிய ஆக்ஷன் நடிகர்களான ப்ரூஸ்லீ, ஜாக்கிசான் வரிசையில் இடம்பெற்றார்.

2002ஆம் ஆண்டில் ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ. 35 கோடி சம்பளம் பெற்றபோது எல்லோரும் ஜெட்லீயை ஆச்சரியமாக பார்த்தார்கள். இப்போது பீட்டர் சான் இயக்கும் 'வார் லாட்ஸ்' திரைப்படத்துக்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று அசத்தியிருக்கிறார். தற்போது மம்மி திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில் உயிர்த்தெழும் பண்டைய சீனப்பேரரசராக நடித்துவருகிறார் ஜெட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லா 2007 - பாடல் வரிகள்!


சூப்பர்ஸ்டாரால் வெளியிடப்பட்ட 'பில்லா 2007' பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகள் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இளைஞர்கள் பலருடைய செல்போன் ரிங்டோனாக "மை நேம் ஈஸ் பில்லா" இடம்பெற்று வருகிறது.

பழைய பில்லாவின் "மை நேம் ஈஸ் பில்லா" "வெத்தலையைப் போட்டேண்டி" இருபாடல்களும் கலக்கலாக ரீமிக்ஸ் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடல்களின் வரிகளை Karoke முறையில் நீங்கள் பாட வசதியாக தருகிறோம்.

பாடல் : மை நேம் ஈஸ் பில்லா
பாடியவர்கள் : நவீன், கே.கே.
இசை : யுவன்ஷங்கர் ராஜா

மை நேம் ஈஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்
மை நேம் ஈஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லை
போகாத ஊர் இல்லை அய்யா
நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா... ஹோ.. ஹோ... ஹா...

ஹே... யாருக்கும் யார் சொந்தம் இல்லை
நட்பின் மேல் நம்பிக்கை எல்லை
நேரங்கள் வேடங்கள் கூட
தேவைகள் இருந்தாலே போட
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நான் செல்லும் பாதை
சரியென்ன தவறென்ன எவருக்கு எதுவேண்டும் செய்வோம்

மை நேம் ஈஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்
மை நேம் ஈஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லை
போகாத ஊர் இல்லை அய்யா
நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா... ஹோ.. ஹோ... ஹா...

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீயென்ன நானென்ன பந்தம்
உறவில்லா உறவில் தான் இன்பம்
மனசுக்கும், அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை
இங்குள்ள எவனுக்கும் இடமில்லை இதுதானே உண்மை?

மை நேம் ஈஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்
மை நேம் ஈஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லை
போகாத ஊர் இல்லை அய்யா
நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா... ஹோ.. ஹோ... ஹா...


பாடல் : வெத்தலையப் போட்டேண்டி
பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன்
இசை : யுவன்ஷங்கர் ராஜா

வெத்தலையப் போட்டேண்டி.. டி... டி.. டி..
புத்தி கொஞ்சம் மாறுதடி.. டி.. டி.. டி..
புத்தி கொஞ்சம் மாறையிலே சக்தி கொஞ்சம் ஏறுதடி...

ஏய் ஊசிப்பொட்டு தெரிக்க.. உள்ளே வெடி வெடிக்க
ஆத்திக்கிட்டு போச்சி, விடு மனம் துடிக்க
ரத்தம் ரத்தம் சொடுக்கும், பித்தம் பித்தம் தெளிறும்
சித்தம் சித்தம் தடுமாறுமே...

வெத்தலையப் போட்டேண்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி..
புத்தி கொஞ்சம் மாறையிலே சக்தி கொஞ்சம் ஏறுதடி...

வெத்தலையப் போட்டேண்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி..
புத்தி கொஞ்சம் மாறையிலே சக்தி கொஞ்சம் ஏறுதடி...

ஏய் ரெண்டே ரெண்டு குருவி,
குருவி கொத்த வருது என்ன, என்ன?
குடைபிடிச்ச குத்தாலமே வா..
ஏய் நான் அடிச்ச மத்தாளமே வா..
ஏய் ஒண்ணே ஒண்ணு நழுவி, நழுவி..
சுத்தி வருதே என்ன, என்ன?
குடைபிடிச்ச குத்தாலமே வா..
ஏய் நான் அடிச்ச மத்தாளமே வா..
ஆடி அடங்காத என் நெஞ்சை
அடக்க அடக்க அடக்கத்தான்...

வெத்தலையப் போட்டேண்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி..
புத்தி கொஞ்சம் மாறையிலே சக்தி கொஞ்சம் ஏறுதடி...

வெத்தலையப் போட்டேண்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி..
புத்தி கொஞ்சம் மாறையிலே சக்தி கொஞ்சம் ஏறுதடி...

முக்காவாசி நனைஞ்சேன், நனைஞ்சேன்..
முழுசா நனைய நான் எப்போ துணிஞ்சேன்?
நானா தான் நானும் இருந்தேன்,
மீனா தான் வந்து விழுந்தேன்!
ஓடிப்போனா தொரத்தி வருதே
தொரத்தி பாத்தா ஓடிவிடுதே
புலிவாலை நான் தான் பிடிச்சேன்
அய்யய்யோ சிக்கித் தவிச்சேன்
அடி பழசெல்லாம் மறக்காத
புதுசு புதுசு இப்போ நான்..

வெத்தலையப் போட்டேண்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி..
புத்தி கொஞ்சம் மாறையிலே சக்தி கொஞ்சம் ஏறுதடி...

ஏய் ஊசிப்பொட்டு தெரிக்க.. உள்ளே வெடி வெடிக்க
ஆத்திக்கிட்டு போச்சி, விடு மனம் துடிக்க
ரத்தம் ரத்தம் சொடுக்கும், பித்தம் பித்தம் தெளிறும்
சித்தம் சித்தம் தடுமாறுமே...

வெத்தலையப் போட்டேண்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி..
புத்தி கொஞ்சம் மாறையிலே சக்தி கொஞ்சம் ஏறுதடி...

அடி சும்மா, சும்மா அசத்தும்...
அது சுத்தி, சுத்தி மெரட்டும்..
அடி சும்மா, சும்மா அசத்தும்...
அது சுத்தி, சுத்தி மெரட்டும்..
விக்குதடி, விக்குதடி.. எனக்கு இப்போ விக்குதடி..
சுத்துதடி, சுத்துதடி.. பூமி எனக்கு சுத்துதடி..
விக்குதடி, விக்குதடி.. எனக்கு இப்போ விக்குதடி..
சுத்துதடி, சுத்துதடி.. பூமி எனக்கு சுத்துதடி..

Tuesday, November 27, 2007

மிருகம்! - சர்ச்சைகள் வெற்றி தருமா?

இயக்குனர் சாமிக்கும், சர்ச்சைகளுக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. அவரது முந்தையத் திரைப்படமான "உயிர்" திரைப்படத்தை வடிவேலு ஒரு விழாவில் காரசாரமாக விமர்சிக்க, சாமி பதிலடி கொடுக்க.. அந்த சர்ச்சையே படத்துக்கு பெரிய விளம்பரமாக மாறி படம் வெற்றிகரமாக ஓடியது.

இப்போது இயக்குனர் சாமி இரண்டாவது படத்தை முடித்திருக்கிறார். மிருகம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. படத்தின் பூஜையின் போது ஒட்டப்பட்ட வித்தியாசமான ஸ்டில்கள் திரையுலகை சாமி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. படப்பிடிப்பு முடியும் வேளையில் மீண்டும் சர்ச்சை சாமியை நோக்கி கச்சை கட்டிக்கொண்டது.

இயக்குனர் சாமி கதாநாயகி பத்மபிரியாவை படக்குழுவினர் முன்பாக அறைந்ததாகவும், பத்மபிரியா படப்பிடிப்புக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லையென்று இயக்குனர் சாமியும் மாறி, மாறி குற்றம் சாட்டிக் கொண்டார்கள். விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்துக்கு செல்ல, இயக்குனர் சாமி ஒரு வருடத்துக்கு படம் இயக்க தடைவிதிக்கப்பட்டார்.

சர்ச்சைகள் ஒருபுறமிருக்க படம் அசத்தலாக வந்திருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேசிக்கொள்கிறார்கள். இந்தப் படத்தை தவறவிட்டுவிட்டேனே என்று "உயிர்" நாயகி சங்கீதா அங்கலாய்க்கிறார். இந்தப் படத்துக்கு டப்பிங் பேசும் வாய்ப்பை இழந்துவிட்டதாக நாயகி பத்மபிரியா வருந்துகிறார். நிச்சயமாக அவார்டுகளை குவிக்கும் படமிது என்கிறார்கள். "எடுக்கும் படத்துக்கு அவார்டு கிடைத்தால் மகிழ்ச்சி. அவார்டுக்காக படமெடுக்க மாட்டேன்" என்கிறார் சாமி.

அப்படி என்னதான் சப்ஜெக்ட் என்று விசாரித்துப் பார்த்ததில் மனிதநேயத்தை வலியுறுத்தும் படமாம் மிருகம். சிறைக்கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துவது, எய்ட்ஸ் நோயாளிகளிடம் அன்பு பாராட்டுவது என்று படம் முழுக்க மேசேஜை அள்ளித் தெளித்திருக்கிறாராம் சாமி. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது பலரும் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள் சாமியின் உழைப்பை பார்த்து. கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதியின் நடிப்பு பருத்திவீரன் கார்த்தி போல பேசப்படும் என்கிறார்கள்.

படம் இயக்க சாமிக்கு தடைவிதித்த தயாரிப்பாளர் சங்க தலைவரான இராம.நாராயணனே படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சாமியை கூப்பிட்டு பாராட்டினாராம். பாராட்டு மட்டுமல்லாது படத்தின் என்.எஸ்.சி. ஏரியா விநியோக உரிமையையும் இராம.நாராயணனே கேட்டு வாங்கிக் கொண்டாராம். சாமி இதனால் ரொம்பவும் நெகிழ்ந்துப் போயிருக்கிறார்.

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படம்! - வீடியோ ட்ரைலர்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் 2008ல் வெளிவரும் என்று தெரிகிறது. இத்திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற சூப்பர் ஸ்டார் திரைப்படங்களுக்கும், இதற்கும் ஒரே வித்தியாசம் இதில் நடிக்கப்போவது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட சூப்பர்ஸ்டாரின் 3டி மாடல்.

ஒரிஜினல் சூப்பர்ஸ்டாரே தன் மாடலுக்கு குரல்கொடுக்கப்போவது தனிச்சிறப்பு. சூப்பர்ஸ்டார் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களான ஸ்டைல், பஞ்ச் டயலாக், ஓபனிங் சாங், கலக்கல் டூயட் எல்லாமே இதில் உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்களை எழுதிகொடுத்திருக்கிறார்.

இப்படத்துக்கான அரங்கங்களை தோட்டா தரணி அமைத்துக் கொடுத்திருக்கிறார். சில காட்சிகள் எடுக்கப்பட ரெபரென்ஸாக சூப்பர்ஸ்டாரே நடித்தும் கொடுத்திருக்கிறார். ஆட்லேப்ஸ் நிறுவனம், ஆக்கர் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். ஹாலிவுட் கலைஞர்கள் பலர் இரவுபகலாக சுல்தானை செதுக்கி வருகிறார்கள்.

பில்லா 2007 - Synopsis & Exclusive Gallery!


சூப்பர் ஸ்டார் நடித்து 1981ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம் எந்த காலக்கட்டத்திலும் ரீமேக் செய்ய ஏற்ற திரைப்படம். வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டிய சூப்பர் ஸ்டார் மீண்டும் வில்லத்தன கதாபாத்திரத்தில் பில்லாவாக நடித்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் பில்லா அஜித்குமாராக மறுஅவதாரம் எடுக்கிறார். சூப்பர்ஸ்டார் ஏற்ற பில்லா மற்றும் ராஜா இருவேடத்தில் அசத்தலாக உருமாறியிருக்கிறார் அஜித்குமார். ஸ்ரீப்ரியா நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவும், ப்ரவீணா நடித்த கதாபாத்திரத்தில் கனவுதேவதை நமீதாவும் தோன்றுகிறார்கள். இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் (பாலாஜி கதாபாத்திரம்) புதுப்பொலிவான தோற்றத்தில் இடம்பெறுகிறார். மேஜர் சுந்தரராஜன் ஏற்ற கதாபாத்திரத்துக்கு யாரென்று யூகிக்க முடிகிறதா? வேறு யார்? பிரகாஷ்ராஜே தான்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை அறிந்தும் அறியாமலும், பட்டியல் வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இத்திரைப்படத்தை சூப்பர் ஸ்டாருக்கு அர்ப்பணிப்பதாக அஜித்குமாரும், விஷ்ணுவர்த்தனும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். சுரேஷ்பாலாஜி தயாரிப்பில் உருவான திரைப்படத்தை நாடெங்கும் பிரமிட் சாய்மீரா சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று பெருமையுடன் திரையிடுகிறது. உச்சநட்சத்திரங்களான விஜய், அஜித் இருவரின் திரைப்படத்தையும் அடுத்தடுத்து பிரமிட் சாய்மீரா வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.


பில்லா ஒலித்தகடினை சூப்பர்ஸ்டார் வெளியிடுகிறார்.

பில்லா 2007 பற்றிய நமது முந்தைய பதிவுகள் :
அஜித் as பில்லா - கலர்புல் சீன்ஸ்!
மீண்டும் பில்லா!