Monday, November 26, 2007

செந்திலின் "ஆதிவாசியும், அதிசயப்பேசியும்!" - ஸ்டில்ஸ்!

வில்லன்கள் கதாநாயகர்களாக நடித்த காலம் போக காமெடி நடிகர்கள் கதாநாயக அரிதாரம் பூசும் காலமிது. கவுண்டமணி கதாநாயகனாக நடித்த படம் வெற்றி பெறாததால் மீண்டும் காமெடிக்கே வந்தார். அதுபோல விவேக் கதாநாயகனாக இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டுமே வெளிவரவில்லை. இவர்களுக்கெல்லாம் விதிவிலக்காக வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்றார்.

ஆயினும் தொடர்ந்து கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் புத்திசாலித்தனமாக தன் வழக்கமான வேடங்களில் நடித்து தன்னுடைய இடத்தை பலமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. 'கஞ்சா' கருப்புவும், 'லொள்ளுசபா' சந்தானமும் கூட கதாநாயகர்களாக 'அறை எண் 305ல் கடவுள்' திரைப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.

இப்போது நடிகர் செந்திலின் முறை. 1980களில் கவுண்டமணியுடன் இணைந்து இவர் அடித்த லூட்டியை யாராலும் மறக்க இயலாது. இன்றும் தமிழக கிராமப்புறங்களில் பெருசுகள் யாரிடம் 'ரெண்டு வாழைப்பழம் வாங்கியாடா!' என்று சொல்வதில்லை. தாங்களே கடைக்குப் போய் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதற்கு காரணம் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கவுண்டமணிக்கு செந்தில் வாங்கிவந்த ரெண்டு வாழைப்பழங்களே!

ஒரு கட்டத்தில் செந்தில் இல்லாத சூப்பர் ஸ்டார் படங்களே இல்லையென்ற நிலையும் இருந்தது. தனக்கு இணையான அறிமுகக்காட்சியை செந்திலுக்கும் பெருந்தன்மையாக வழங்கிவந்தார் சூப்பர் ஸ்டார். குறிப்பாக அருணாச்சலம் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக செந்தில் அடிக்கும் லூட்டியை யாராலும் மறக்க முடியாது. மனிதன், முத்து, வீரா என்று சூப்பர்ஸ்டாரின் சூப்பர்ஹிட் திரைப்படங்களில் செந்திலுக்கு நல்ல முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

தமிழ் திரைப்படவுலகில் நகைச்சுவையில் சகாப்தமாக விளங்கிய கவுண்டமணி - செந்தில் ஜோடிக்கு பல காரணங்களால் வாய்ப்புகள் குறைந்தது. கவுண்டமணியின் உடலநலக்குறைவும், ரசிகர்களிடையே ஏற்பட்ட ரசனைமாற்றங்களும் இதற்கு காரணம். இடையில் செந்தில் அரசியல் களத்துக்கு சென்றுவிட்டதால் தனக்கு வந்த பல வாய்ப்புகளையும் கூட குமரிமுத்து போன்ற சகநடிகர்களுக்கு திருப்பி விட்டதாக செய்திகள் வந்தது.

செந்திலின் ஜூனியர் காமெடி நடிகர்களெல்லாம் கதாநாயகர்களாகி விட்ட நிலையில் நீண்டகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் செந்தில் கதாநாயகனாக 'ஆதிவாசியும், அதிசயப்பேசியும்!' படத்தில் அறிமுகமாகிறார். படத்துக்காக வெளியிடப்பட்டிருக்கும் ஸ்டில்கள் நிஜமாகவே பயமுறுத்துகிறது. நாகரிகமற்ற ஆதிவாசியிடம் கிடைக்கும் செல்போன் ஒன்றினால் விளையும் விளைவுகளை நகைச்சுவையாக சித்தரித்திருக்கிறார்களாம். அரசியல்வாதியாகவும் புகழ்பெற்று விட்ட செந்தில் 'பஞ்ச் டயலாக்' எல்லாம் அடிப்பாரா என்று தெரியவில்லை. செந்திலை உதைக்கவும், அடுக்குமொழியில் விதம் விதமாக 'செல்போன் தலையா', 'மெசேஜ் வாயா' என்றெல்லாம் திட்டவும் கவுண்டமணி இப்படத்தில் இல்லை என்பதே ஒரே குறை.


போன்லகூட ஒரு பழம் இங்கிருக்கு
இன்னொரு பழம் எங்கேன்னு கேட்குறாரே இந்த மனுஷன்?


ஹீரோவானதுமே நமீதாவெல்லாம் எனக்கு மெசேஜ் அனுப்புறாங்க. பாருங்களேன்...

"ஹலோ அண்ணே! ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா அண்ணே?"

5 comments:

  1. Anonymous said...

    படங்களும், கமெண்டுகளும் சூப்பர்.

  2. said...

    நன்றி! நீங்களும் படங்களுக்கு கமெண்டு கொடுக்கலாமே?

  3. Anonymous said...

    இந்தப் படத்தின் விளம்பரத்துல மாலன் பெயரைப் பார்த்தேனே? அவர் என்ன பண்றார் இந்தப் படத்துல?

  4. said...

    பிரகாஷ்!

    மாலன் என்பவர் இப்படத்தின் இயக்குனர். நீங்கள் நினைக்கும் மாலன் அல்ல.

  5. Anonymous said...

    நல்ல வேளை. ' ஏன் சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை' என்று ஒரு மின்னஞ்சல் எழுதிக் கேட்கலாம் என்று நினைத்தேன். தப்பித்தேன்....