Tuesday, November 27, 2007

மிருகம்! - சர்ச்சைகள் வெற்றி தருமா?

இயக்குனர் சாமிக்கும், சர்ச்சைகளுக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. அவரது முந்தையத் திரைப்படமான "உயிர்" திரைப்படத்தை வடிவேலு ஒரு விழாவில் காரசாரமாக விமர்சிக்க, சாமி பதிலடி கொடுக்க.. அந்த சர்ச்சையே படத்துக்கு பெரிய விளம்பரமாக மாறி படம் வெற்றிகரமாக ஓடியது.

இப்போது இயக்குனர் சாமி இரண்டாவது படத்தை முடித்திருக்கிறார். மிருகம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. படத்தின் பூஜையின் போது ஒட்டப்பட்ட வித்தியாசமான ஸ்டில்கள் திரையுலகை சாமி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. படப்பிடிப்பு முடியும் வேளையில் மீண்டும் சர்ச்சை சாமியை நோக்கி கச்சை கட்டிக்கொண்டது.

இயக்குனர் சாமி கதாநாயகி பத்மபிரியாவை படக்குழுவினர் முன்பாக அறைந்ததாகவும், பத்மபிரியா படப்பிடிப்புக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லையென்று இயக்குனர் சாமியும் மாறி, மாறி குற்றம் சாட்டிக் கொண்டார்கள். விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்துக்கு செல்ல, இயக்குனர் சாமி ஒரு வருடத்துக்கு படம் இயக்க தடைவிதிக்கப்பட்டார்.

சர்ச்சைகள் ஒருபுறமிருக்க படம் அசத்தலாக வந்திருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேசிக்கொள்கிறார்கள். இந்தப் படத்தை தவறவிட்டுவிட்டேனே என்று "உயிர்" நாயகி சங்கீதா அங்கலாய்க்கிறார். இந்தப் படத்துக்கு டப்பிங் பேசும் வாய்ப்பை இழந்துவிட்டதாக நாயகி பத்மபிரியா வருந்துகிறார். நிச்சயமாக அவார்டுகளை குவிக்கும் படமிது என்கிறார்கள். "எடுக்கும் படத்துக்கு அவார்டு கிடைத்தால் மகிழ்ச்சி. அவார்டுக்காக படமெடுக்க மாட்டேன்" என்கிறார் சாமி.

அப்படி என்னதான் சப்ஜெக்ட் என்று விசாரித்துப் பார்த்ததில் மனிதநேயத்தை வலியுறுத்தும் படமாம் மிருகம். சிறைக்கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துவது, எய்ட்ஸ் நோயாளிகளிடம் அன்பு பாராட்டுவது என்று படம் முழுக்க மேசேஜை அள்ளித் தெளித்திருக்கிறாராம் சாமி. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது பலரும் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள் சாமியின் உழைப்பை பார்த்து. கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதியின் நடிப்பு பருத்திவீரன் கார்த்தி போல பேசப்படும் என்கிறார்கள்.

படம் இயக்க சாமிக்கு தடைவிதித்த தயாரிப்பாளர் சங்க தலைவரான இராம.நாராயணனே படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சாமியை கூப்பிட்டு பாராட்டினாராம். பாராட்டு மட்டுமல்லாது படத்தின் என்.எஸ்.சி. ஏரியா விநியோக உரிமையையும் இராம.நாராயணனே கேட்டு வாங்கிக் கொண்டாராம். சாமி இதனால் ரொம்பவும் நெகிழ்ந்துப் போயிருக்கிறார்.

























0 comments: