Thursday, November 29, 2007

புதிய முயற்சிகளை நம்புகிறோம்!

"புதிய முயற்சிகளின் வெற்றி நிச்சயமற்றதாக இருந்தாலும், நாங்கள் யாரும் முயன்றிடாத புதிய முயற்சிகளையே நம்புகிறோம். இதை எங்கள் பங்குதாரர்களுக்கு சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நாங்கள் உலகளவில் உயர்ந்த இடத்தை பெறும் நோக்கத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம்" - பிஸினஸ் லைன் இதழுக்கு பிரமிட் சாய்மீரா தியேட்டர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பி.எஸ்.சுவாமிநாதன் அளித்த பேட்டியில் இவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவரது பேட்டியில் இருந்து :

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எங்கள் நிறுவனத்தின் பங்குகளை பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்தபோது இந்தியா முழுமைக்கும் எங்கள் வசமிருக்கும் தியேட்டர்களின் தரத்தை உயர்த்துவதாகவும், தியேட்டர்களை டிஜிட்டல் மயமாக்குவதாகும் தான் வாக்களித்திருந்தோம். இருப்பினும் அந்த நிலைகளை எல்லாம் தாண்டி இந்தியாவிலேயே அதிக அளவில் திரைப்படங்களை திரையிடும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறோம். உலகளவில் இப்போதைக்கு மூன்றாவது பெரிய தொடர்திரையரங்கு நிறுவனமாக மாறியிருக்கிறோம்.

படவிநியோகம் மட்டுமே என்ற நிலையை நீக்கி படவிநியோகம் மற்றும் திரையிடுதல் என்ற புதிய ஒரு துறையை எங்கள் நிறுவனம் இந்திய திரைப்படத் தொழிலில் உருவாக்கியிருக்கிறது. எங்கள் தொடர்திரையரங்குகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் திரைப்படத் தயாரிப்புகளிலும் இறங்கியிருக்கிறோம்.

இரண்டாம் கட்டமாக இந்திய திரைப்பட தொழில் என்ற நிலையை தாண்டி விரிவடைந்து கொண்டிருக்கிறோம். இப்போது அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் வலுவாக காலூன்றியிருக்கிறோம். புவியியல் ரீதியாக விரிவடைவது தொடர்திரையரங்கு தொழிலுக்கு ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி.

பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் திரைப்படங்களை திரையிடும் தொழிலை செய்து வருகிறது. இதே நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் மற்றும் பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட். எங்களது துணை நிறுவனங்கள் அனைத்துமே பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் என்ற ஒரே குடையின் கீழ் இயங்கும்.

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும். சிங்கப்பூரைச் சார்ந்த பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனமோ இத்துறையின் எந்த ஒரு தொழில்வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிற கலவையான நிறுவனம். உதாரணத்துக்கு ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தை சொல்லலாம். ஈரோஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை வாங்கி வெளிநாடுகளில் விநியோகம் செய்கிறது. பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் திரைப்படங்களை வாங்கி வெளிநாடுகளில் விநியோகம் செய்வது மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் - ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும் வாங்கி ஆசிய-பசிபிக் மண்டல நாடுகளில் விநியோகம் செய்யும்.

நல்லவேளையாக நாங்கள் நிறுவனத்தை தொடங்கும்போதே லாபகரமாக தொடங்கியபடியால் தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஏனைய துறைகளில் அதிவேக முன்னேற்றத்தை அடைய முடிந்திருக்கிறது. புதிய முயற்சிகளின் வெற்றி நிச்சயமற்றதாக இருந்தாலும், நாங்கள் யாரும் முயன்றிடாத புதிய முயற்சிகளையே நம்புகிறோம். இதை எங்கள் பங்குதாரர்களுக்கு சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நாங்கள் உலகளவில் உயர்ந்த இடத்தை பெறும் நோக்கத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய பார்வையில் சொல்வதானால் மற்றவர்களிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்துவது எங்களது வேகம் தான். நாங்கள் திரைப்படத்துறையில் எங்களது திட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டும் வேகமே எங்களை தனியாக காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலகளவில் வளர்ந்த நிறுவனங்களின் வளர்ச்சியைப் பார்த்தோமானால் அவர்கள் வளர்ச்சிக்கு நிறுவனங்களில் கட்டமைப்பு காரணமாக இருக்கவில்லை. இயங்கும் விதத்தில் இருந்த வேகமே அவர்களை வெற்றிபெற வைத்திருக்கிறது. கூகிள், ஜம்ப் டிவி, ரிலையன்ஸ், மிட்டல் க்ரூப் என்று எந்த நிறுவனத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா நிறுவனங்களில் பரிட்சார்த்த முயற்சிகளை எடுத்தவர்களாகவே இருப்பார்கள். இத்தனைக்கும் மிட்டல் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனங்களை கூட எடுத்து லாபகரமாக மாற்றிக் காட்டினார். புதிய முயற்சிகளை முறைப்படுத்த நினைக்கும் யாரும் வெற்றிவாய்ப்பை இழந்ததில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வேகம் நம்பமுடியாத வகையில் இருக்கிறது. நாங்களும் அதுபோன்றே அதிவேகத்தில் செயல்படுவதையே எங்கள் செயல்திட்டமாக கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இப்போது ஒரு பெரிய நிலையை அடைந்திருக்கிறோம். உண்மையில் நாங்கள் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் இரட்டிப்பாக வளர்கிறோம். இன்று எங்கள் திரையரங்குகளில் மட்டும் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சம். ஐந்து நாடுகளில் 703 திரைகளை நிர்வகிக்கிறோம். இந்த ஆண்டு இதுவரை 38 படங்கள் தயாரித்திருக்கிறோம். பாரமவுண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் மட்டுமே ஒரே ஆண்டில் இவ்வளவு திரைப்படங்களை தயாரித்திருக்க முடியும். தொண்ணூறு முதல் நூறு திரைப்படங்கள் வரை விநியோகித்திருக்கிறோம்.

தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் தயாரித்திருக்கிறோம். இந்தியாவின் நெ.1 தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான பாலாஜி டெலிபிலிம்ஸை இன்னும் இரண்டே மாதங்களில் முந்திச்செல்ல திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே எட்டு தொலைக்காட்சி சேனல்களில் அவர்களை விட அதிகநேர நிகழ்ச்சியை தரும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

சரியாக சொல்வதேயானால் எங்களது வளர்ச்சி என்னவென்பதை நாங்கள் இன்னமும் முழுமையாக உலகுக்கு அறிவிக்கவில்லை. இன்றைய நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படமாக இருந்தாலும் தயாரிப்பு நிலையிலோ அல்லது விநியோக நிலையிலோ, திரையிடும் நிலையிலோ எங்கள் கரங்களுக்கு வந்தே ஆகவேண்டும். நாங்கள் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறோம். எனவே எங்களைத் தவிர்த்து எந்த திரைப்படத்தையும் திரையிட இயலாது என்பதே யதார்த்தம்.

இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்த நிலையில் நிர்வாகச் சிக்கல்களை களைய புதிய மேலாண்மை உத்திகளை கையாளுகிறோம். 'நெட்வொர்க் மேனேஜ்மெண்ட்' என்ற புதிய நிர்வாக உத்தியை எங்களது தமிழ்நாடு கிளையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாடு கிளையை நிர்வகித்த உயர்நிர்வாகத்தை நீக்கி, அம்மண்டல அதிகாரிகள் குழுவுக்கே உயரதிகாரம் தந்திருக்கிறோம். இந்த உத்தி நல்லமுறையில் எங்களுக்கு பலன் தந்திருக்கிறது.

இப்போது பார்த்தோமானால், தமிழ்நாடு மண்டலம் மட்டுமே ஆண்டுக்கு நானூறு முதல் ஐநூறு கோடிகளை செலவிட்டு அறுநூறு கோடி ரூபாய் வரையிலான வர்த்தகத்தை செய்கிறது. ஒரு நாளைக்கு ஒன்றரை முதல் இரண்டு கோடி வரை செலவிடுகிறது. தினமும் ஒரு திரையரங்கை தன் எண்ணிக்கையில் இணைத்துக் கொள்கிறது. எங்களது அசுரவளர்ச்சி நிறுவன மேலாண்மைக்கான புதிய உத்திகளை கண்டறியவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாங்கள் சர்வதேச அளவில் ஏன் காலூன்ற வேண்டும்? அங்கு ஏற்கனவே எங்களைப் போன்றவர்கள் இல்லையா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. நிச்சயமாக வெளிநாடுகளில் எங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆயினும் ஆசிய மக்களுக்கு ஏற்ற திட்டங்கள் அவர்களிடம் இல்லை. ஆசிய-பசிபிக் மண்டலத்தின் பிரதிநிதி நிறுவனமாக நாங்கள் வர விரும்புகிறோம். எனவே தான் நாங்கள் காலூன்றிய வெளிநாடுகளில் இந்தியத் திரைப்படங்கள் என்றில்லாமல் அந்தந்த மண்டல மொழியிலான திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். உதாரணமாக மலேசியாவில் மலாய், சைனீஸ் மற்றும் ஆங்கில திரைப்படங்களை வெளியிடுவதிலும், தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறோம்.

அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளில் வாழும் ஆசியர்களை கவரும் பொருட்டு இந்தியத் திரைப்படங்களை அவர்கள் பார்வைக்கு வைக்கிறோம். வேறெந்த நிறுவனமும் இப்பணியை செய்யாததால் நாங்கள் செய்யவேண்டியிருக்கிறது. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியத் திரைப்படங்களை வினியோகம் செய்யமட்டுமே முன்வரும். நாங்கள் அப்படியில்லாமல் விநியோகம் மற்றும் திரையிடுதல் ஆகிய இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்துவதால், இந்தியத் திரைப்படங்கள் பெறவேண்டிய கவனஈர்ப்பினை சரியாக செய்கிறோம்.

திரையரங்குகளை டிஜிட்டல்மயமாக்கும் பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறோம். இதுவரை இருநூறு முதல் இருநூற்றி ஐம்பது திரையரங்குகள் வரை டிஜிட்டல்மயமாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த திரையரங்குகளை கணக்கிடும் போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான். டிஜிட்டல்மயமாக்கும் முறைகளிலேயே மிகவும் உயர்ந்த, தரமான, அதிக பொருள்செலவு ஏற்படுத்தக்கூடிய முறையையே நாங்கள் செய்துவருகிறோம். வங்கிகள் Core banking செய்வது வங்கிகளுக்கு எவ்வளவு அவசியமோ அதுபோலவே திரையரங்குகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதும் அவசியம். மிகச்சிறந்த திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தரவல்ல தொழில்நுட்பத் தீர்வு டிஜிட்டல் சினிமா. 2009-10ஆம் ஆண்டுகளில் எங்கள் வசம் இருக்கும் பெரும்பான்மை திரையரங்குகளை டிஜிட்டல்மயமாக்கி விடுவோம். ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளை தான் தென்னிந்தியாவில் கையகப்படுத்தும் திட்டம் எங்களுக்கு இருக்கிறது. அதன் பிறகு கையகப்படுத்திய திரையரங்குகளை நவீனமாக்கும்போது கண்டிப்பாக டிஜிட்டல்மயமாக்குவோம்.

மற்ற மல்டிபிளக்ஸ் குழுமங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசமே விலை தான். எங்களது நிறுவனம் திரையரங்கு அனுமதி டிக்கெட்டுகளை மிக குறைந்த விலைக்கு வழங்கிவருகிறது. திரையரங்கு அனுமதி கட்டணத்தை உயர்த்தி தான் திரையரங்குகளின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று நாங்கள் இதுவரை நினைக்கவில்லை. திரையரங்குகளின் தரத்தை உயர்த்தும் எங்களின் திட்டம் 2009ல் நடைமுறைப்படுத்தப்படும். நாங்கள் இன்னமும் குறைந்த லாபத்துக்கு பெரிய வணிகத்தை செய்யவே விரும்புகிறோம். ஆனால் அதற்காக F&B எனப்படும் எங்களது திரையரங்கு கேண்டீன்களில் லாபத்தையும், தரத்தையும் குறைத்துக் கொள்கிறோம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. F&B என்பது எங்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.

மக்களை ஏமாற்றமடைய வைக்காத அளவில் நூறு முதல் இருநூற்று ஐம்பது சதவிகிதம் வரையிலான லாபத்தை நாங்கள் F&Bயில் பெறமுடியும். ஒரு திரையரங்குக்கு சென்றால் காபி அல்லது பாப்கார்னை நீங்கள் பத்து ரூபாய்க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அது வெளியே ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும். எனவே திரையரங்கு கேண்டீன்களில் விலை அதிகம் என்று உணர்வீர்கள். அதையே எங்களது F&B உங்களுக்கு ரூ.7.50க்கு கொடுத்தால் மற்ற திரையரங்குகளை விட எங்களது திரையரங்கு கேண்டீன்களில் மலிவாக இருப்பதாக உணர்வீர்கள். நாங்கள் நிறைய உணவகங்களை எங்களது F&B மூலமாக உருவாக்க விரும்புகிறோம். நிச்சயமாக மற்ற தியேட்டர்களை விட எங்களது தியேட்டர்களில் இருக்கும் உணவகங்களில் விலை இருபது சதவிகிதமாவது குறைவாகவே இருக்கும்.

இந்த வருடம் தென்னிந்திய திரைப்படங்களுக்கு நல்ல வருடமா என்று கேட்டால், இல்லையென்றே சொல்வேன். படம் நன்றாக இருந்தாலோ அல்லது நன்றாக இல்லையோ, அது எங்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்த தீபாவளிக்கு பிரமிட் வசமிருக்கும் எல்லா திரையரங்குகளிலும் புதிய படம் எங்களால் வெளியிட முடிந்திருக்கிறது. காரணம் எல்லா திரைப்படங்களையும் நாங்களே வெளியிட்டிருப்பதால். திரைத்துறையில் நல்ல ஆரோக்கியமான போட்டியை எப்போதுமே நாங்கள் வரவேற்கிறோம்.