Friday, November 9, 2007

வேல் - திரைவிமர்சனம்


இது இரட்டைவேட சீஸன் போலிருக்கிறது. ஓம் சாந்தி ஓமில் ஷாருக்கான் இரட்டை வேடம், அழகிய தமிழ்மகனில் விஜய் இரட்டை வேடம். அதுபோலவே வேலும் ஒரு வேலல்ல, இரட்டை வேல்! பழைய எம்.ஜி.ஆர் படத்தை தூசுதட்டி மசாலா சேர்த்து மொறுமொறுப்பாக தந்திருக்கிறார் ஹரி. சுவையாகவே இருக்கிறது.

சரண்யா - சரண்ராய் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள். மூன்றுமாத குழந்தைகளாக இருக்கும்போது ட்ரெயின் பயணத்தில் ஒரு குழந்தை தொலைந்து விடுகிறது. இருகுழந்தைகளும் வேறு வேறு இடத்தில், வேறு வேறு சூழ்நிலையில் வளர்கிறார்கள். சென்னையில் பெற்றோரிடம் வளந்த குழந்தையான வாசுதேவன் துப்பறியும் நிபுணராக மாறுகிறார். திண்டுக்கல்லில் வளர்ந்தவர் சகலகலா வல்லவன் கமல் போல மாறுகிறார். அம்மா சரண்யாவோ தொலைந்துபோன தன் இன்னொரு மகன் நினைவாகவே எப்போதும் இருக்கிறார்.

சிட்டியில் இருக்கும் சூர்யா அசினை லவ்வுகிறார். வில்லேஜ் சூர்யா (அவரை வளர்த்த)குடும்பப்பகை காரணமாக கலாபவன் மணியை புரட்டி புரட்டி எடுக்கிறார். அம்மாவின் வருத்தத்தைப் போக்க சிட்டி சூர்யா தன் சகோதரனை தேடுகிறார். எதிர்பாராவிதமாக வில்லேஜ் சூர்யாவான வேலை சந்திக்கும் அசின் மூலமாக சகோதரனை கண்டுகொள்கிறார்.

பாசம் காரணமாக தான் வளர்ந்த குடும்பத்தை விட்டு வர வேல் தயங்குகிறார். ஆயினும் பெற்றோர் பாசமும் அவரை அலைக்கழிக்கிறது. இதனால் வழக்கம்போல இரு சூர்யாக்களும் ஆள்மாறாட்டம் செய்துக் கொள்கிறார்கள். வேலாக மாறிய வாசுதேவன் புஜபலத்தால் இல்லாமல் தன் மூளையை பயன்படுத்தி குடும்பப் பகைவர்களை வெற்றி கொள்ளுகிறார்.

தாமிரபரணி, கோயில் என்று ஹரியின் முந்தைய படங்களின் சாயல் வருவதை பலகாட்சிகளில் உணரமுடிகிறது. சூர்யாவின் 'வேல்' கெட்டப் அசத்தலாக இருக்கிறது. முறுக்கிய மீசையும், தினவெடுக்கும் தோள்களுமாக கலாபவன் மணியை மிரட்டுகிறார். வழக்கம்போல வடிவேலு வெடிவேலு!!

ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல் என்று சரியான கலவையாக கலக்கப்பட்ட கலக்கல் காக்டெயில் வேல்!

0 comments: