"சிலுக்கு" - பெயரை கேட்டாலே சிலிர்த்து கொள்வார்கள் நாற்பதை கடந்தவர்கள். 1979ல் வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான விஜயவாடா விஜயலஷ்மி என்ற சிலுக்கு சுமிதா பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று. ரஜினி, கமல் தமிழ் திரையுலகை ஆண்டு வந்த சகாப்தத்திலும் கூட சிலுக்குவின் பெயருக்கு தனி மவுசு இருந்தது.ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஒரு லட்சரூபாய் வரைக்கும் விலைபோனது என்பது உலக சினிமா சரித்திரத்தில் யாருக்குமே கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள். சிலுக்குவின் கண்ணசைவு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை திருடியது என்றால் மிகையில்லை.
90களின் ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகிகளே தாராளக்கவர்ச்சியை காட்ட தயாராக இருந்ததால் கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. அவ்வகையில் சிலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதை விட்டு விட்டு குணச்சித்திரப் பாத்திரங்களிலும், வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்தார். திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது. அவர் கடைசியாக இடம்பெற்று வெளிவந்த திரைப்படம் அர்ஜூன் நடித்த சுபாஷ். அப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் அர்ஜூனுடன் நடனமாடியிருந்தார். அப்பாடலின் கடைசியில் கூட சிலுக்கு தீக்கிரையாவது போல கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது பெரும் சோகம்.பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்போது சிலுக்கு கதாநாயகியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஒன்று இப்போது தூசுதட்டப்பட்டிருக்கிறது. திருப்பதி ராஜன் என்பவர் தயாரித்து இயக்கிய தங்கத்தாமரை என்ற திரைப்படம் அது. இப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் படத்தில் சில மாற்றங்களை அமைத்து, பாடல் காட்சிகளை இணைத்து பொங்கலுக்கு படத்தை வெளியிட திருப்பதிராஜன் முன்வந்துள்ளார். விநியோகஸ்தர்கள் மத்தியில் இத்திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகள் கழித்து சிலுக்குவை திரையில் காணப்போகிறோம் என்று சிலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் ஆர்வத்துடன் தங்கத்தாமரையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Wednesday, November 21, 2007
சிலுக்கு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து!
Posted by PYRAMID SAIMIRA at 11/21/2007 11:47:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
'ஸில்க்' ஸ்மிதா!, oh, that sexy angel....! that mesmirising eyes!
'ஜீவா' படத்த மறக்கமுடியுமா?