Saturday, November 17, 2007

குத்து விளக்கு ஏற்றப்போகும் முத்தழகு!


கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவை யார் துவக்கி வைப்பது என்பது பெரும் சர்ச்சையாக இருந்தது. வட இந்திய திரைப்பிரமுகரா? தென்னிந்திய திரைப்பிரமுகரா? என்பதில் துவங்கி தர்மேந்திராவா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா? என்பது வரை பிரச்சினை சூடாகிக் கொண்டே இருந்தது. கடைசியில் இருவரும் விழாவை துவக்கி வைக்க மறுத்துவிட ஷாருக்கான் விழாவை துவக்கி வைக்க இசைந்திருக்கிறார்.

வட இந்தியர் விழாவை துவக்கி வைப்பதால் விளக்கேற்றும் பொறுப்பு தென்னிந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஓசியன் சினிபேன்ஸ் அவார்ட்ஸின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற பருத்தி வீரன் முத்தழகுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் நம் முத்தழகு பிரியாமணியின் பெயரை இப்பொறுப்புக்கு பரிந்துரைத்தார்களாம்.

விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைக்கும் மகிழ்ச்சியை விட தன் அபிமான நடிகர் ஷாருக்கை அருகில் சந்திக்கப் போகும் மகிழ்ச்சியே ப்ரியாமணிக்கு அதிகமாக இருக்கிறதாம். காஞ்சிபுரம் புடவை கட்டி அழகிய தமிழ்மகளாக அவ்விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார் முத்தழகு.

அதே விழாவில் அம்முவாகிய நான், பெரியார் திரைப்படங்கள் தமிழ் சினிமா சார்பாக திரையிடப்படப் போகிறது. இந்த இரு திரைப்படங்களும் இங்கு மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திரைவிழாக்களிலும் இந்தியா சார்பில் திரையிடப்படும். அதுமட்டுமல்லாமல் இவ்விழாவில் இந்தியா 60 என்ற பிரிவில் திரையிடப்பட இந்திய திரையுலகின் பழம்பெரும் திரைப்படங்கள் மூன்று தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று தமிழில் 1947ல் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த "நாம் இருவர்".

தமிழ் சினிமாவின் பெருமை குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிவீசத் தொடங்கியிருக்கிறது!

1 comments:

  1. Anonymous said...

    இதுபோல தென்இந்தியாவிலும் திரைப்பட விழா நடத்தினால் என்ன?
    - ராஜேஷ்