Friday, November 9, 2007

ஓம் சாந்தி ஓம் - வெள்ளித் திரைக்குப் பின்னால்!

* ஷாருக், சல்மான், சைப் அலிகான், சஞ்சய் தத் நால்வரும் அருகருகே ஒரே பாட்டுக்கு நடனம் ஆடினால் விசில் அடிப்பீர்கள் தானே? இவர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் மின்னும் 31 முன்னணி நட்சத்திரங்களையும் ஒரே படத்தில் காண வழிசெய்திருக்கிறது ஓம் சாந்தி ஓம்.

* படத்தில் பின்னணியில் உழைத்த டெக்னிஷியன்கள் அனைவரையும் திரையில் காட்டியிருக்கும் முதல் திரைப்படம் ஓம் சாந்தி ஓம். தயாரிப்பாளர், இயக்குனரில் ஆரம்பித்து ஸ்பாட் பாய்ஸ் வரை படத்தின் இறுதியில் திரைக்கு வருகிறார்கள்.

* படத்தில் கட்டழகனாக கட்டுடல் காட்டி ஷாருக் காட்சியளிப்பதன் மர்மம் என்ன தெரியுமா? ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஒரு தற்காலிக உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி அவருக்கு ஷாட் இல்லாதபோதெல்லாம் உடற்பயிற்சி செய்து வந்தார்.

* படத்தில் 1970களில் நடப்பது போன்ற காட்சிகள் வருவதால் ஷாருக் தன்னுடைய சிகையலங்காரத்துக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். அமிதாப், வினோத் கண்ணா, சசிகபூர், ராஜேஷ் கண்ணா போன்றவர்களைப் போன்ற சிகையலங்காரங்களில் அசத்தியிருக்கிறார் ஷாருக்.

* படத்தில் அறிமுகமான கதாநாயகி தீபிகா படுகோனே 1970களில் வெளிவந்த பலபடங்களை திரும்ப திரும்ப பார்த்தாராம்.

* நான்கு வருடங்கள் கழித்து ஒரு நட்சத்திரம் இப்படம் மூலமாக மீண்டும் தன் முகத்தை சினிமா கேமிராவுக்கு காட்டியிருக்கிறார். அவர் கரிஷ்மா கபூர்.

* நடனக்காட்சி ஒன்றில் மிதுன்சக்கரவர்த்தி தலையை காட்டுகிறார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபோது மொத்த டீமும் அவரை மொய்த்து ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார்கள். அவரோடு படம் எடுத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார்கள். ரசிகர்களோடு மிதுன் இருப்பது போன்ற படங்களை எடுத்த போட்டோகிராபர் யார் தெரியுமா? ஷாருக் கான்.

* படத்தில் எந்த காட்சியிலும் தனக்கு டூப் போடவேண்டாமென்று ஷாருக்கான் இயக்குனரை கேட்டுக் கொண்டாராம். சூப்பர்மேனாக விண்ணில் பறக்கும் காட்சியிலும் அவரே விரும்பி நடித்திருக்கிறார்.

* சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஷாருக் டூயட் பாடுவதைப் போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்குடன் டூயட் பாடிய அதிர்ஷ்ட நாயகிகள் தியாமிர்சா, அமிஷா படேல்.

* படத்தில் சிறப்புத் தோற்றமாக நடிக்க ஒப்புக்கொண்டார் அபிஷேக் பச்சன். அவர் வரும் காட்சியில் காமெடியும் செய்திருக்கிறார். அமிதாப்பும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். இதன்மூலமாக ஷாருக்கானுக்கும், பச்சன் குடும்பத்துக்கும் பிரச்சினை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

* ஷாருக்கானின் வெற்றிகரமான பழைய கதாநாயகிகள் ஜூஹிஷாவ்லா, கஜோல், ஷில்பா ஷெட்டி என்று பலரும் அவருடன் தனித்தனியாக நடனம் ஆடும் காட்சிகள் படத்தில் உண்டு.

* படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே ஷாருக்கோடு மட்டும் நடித்திருக்கிறார் என்று நினைத்தால் நீங்கள் அப்பாவி. தர்மேந்திரா, ஜிதேந்திரா, ராஜேஷ்கன்னா போன்றவர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் காட்சிகள் படத்தில் உண்டு. இக்காட்சிகளுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது.

* அக்ஷய்குமார் படத்தின் ஒரு காமெடி சண்டைக்காட்சியில் நடித்து கொடுத்திருக்கிறார்.