Saturday, November 24, 2007

ஜன.26 அன்று கடவுளைப் பார்க்கலாம்?

விகடன் பத்திரிகைக்கும் சினிமாவுக்கும் நெடுங்கால தொடர்பு உண்டு. ஜெமினி பிக்சர்ஸ் இப்போது படங்களை தயாரிப்பதில்லை என்றாலும் அந்நிறுவனத்தில் பணியாற்றிய பலர் திரைவானில் மின்னி வருகின்றனர். இயக்குனர் வசந்த், சரண் ஆகியோரின் நீட்சியாக கடைசியாக இம்சை அரசனை இயக்கிய சிம்புதேவன் வரை விகடன் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களே.

இயக்குனர் சிம்புதேவனின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி அவர் மீதான பரவலான எதிர்பார்ப்பை திரையுலகில் ஏற்படுத்தியிருக்கிறது. 25 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஒரு சரித்திரப் படத்தை இயக்கியவர், தமிழின் முதல் முழுநீள சரித்திர நகைச்சுவைப்படமாக அதை உருவாக்கியவர், அப்படத்தை மாபெரும் வெற்றி பெறச்செய்தவர் என்ற அடிப்படையில் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இம்சை அரசனை தயாரித்த அதே ஷங்கரின் தயாரிப்பில் அதிரடியாக 'அறை எண் 305ல் கடவுள்' திரைப்படத்தை அறிவித்தார். விவேக் கதாநாயகனாக நடிக்கக் கூடும் என்று பலரும் ஆருடம் சொன்னவேளையில் 'லொள்ளு சபா' சந்தானம், 'கஞ்சா' கருப்பு இருவரையும் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார்.

படம் குறித்த சுவையான பின்னணி ஒன்றை திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள். முதலில் இத்திரைப்படத்துக்கு 'அறை எண் 304ல் கடவுள்' என்று தான் சிம்புதேவன் பெயர் வைத்தாராம். தன் அதிர்ஷ்ட எண் 8 வரவேண்டும் என்பதற்காக அறை எண்ணை 305 ஆக மாற்றியவர் தயாரிப்பாளர் ஷங்கர் என்கிறார்கள்.

அதுபோலவே இத்திரைப்படத்தில் கடவுளாக நடிக்கும் பிரகாஷ்ராஜின் சம்பளம் பற்றியும் பிரமிப்புடன் பேசப்படுகிறது. அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள். அது உண்மையென்றால் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற வில்லன் நடிகர் என்ற பெருமை பிரகாஷ்ராஜை சேரும்.

கிராபிக்ஸ் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. இன்னமும் ஒருவாரகால படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருப்பதாக தெரிகிறது. பொங்கலன்று அறை எண் 305க்கு கடவுள் வருவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடவுள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் அதிகம் கவனம் செலுத்துவதால் பத்து நாட்கள் தாமதமாக 2008 குடியரசுத் தினத்தன்று தரிசனம் தருவார் என்று சொல்கிறார்கள்.

0 comments: