Friday, November 9, 2007

அழகிய தமிழ்மகன் - திரைவிமர்சனம்


நீங்கள் இளைய தளபதி விஜய் ரசிகரா?

காரமாக, மசாலா போட்டு வறுத்த கோழிக்கறியை விரும்பி உண்பீர்களா?

நகைச்சுவை, சண்டைக்காட்சிகளை கண்ணிமைக்காமல் பார்ப்பீர்களா?

எத்தனை முழம் பூச்சுற்றினாலும் உங்கள் காது தாங்குமா?

அப்படியென்றால் ஓக்கே. அழகிய தமிழ்மகன் உங்களை ரொம்பவும் கவர்வார். முதன்முதலாக இளையதளபதி விஜய் இரட்டை வேடத்தில். விஜய் ஒரு வேடமென்றாலே தியேட்டர் அதிரும். இரட்டை வேடமென்றால் சொல்லவும் வேண்டுமா திரையரங்கின் மேற்கூரை கிழிகிறது.

பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கும் விஜய் ஷகீலாவின் வீட்டில் நண்பர்களோடு வாடகைக்கு குடியிருக்கிறார். அழகுப்புயல் ஸ்ரேயாவை காதலிக்கிறார். இருவீட்டிலும் ஆரம்பத்தில் பிரச்சினை. அதன்பிறகு இருவீட்டிலும் திருமணத்துக்கு சம்மதிக்கிறார்கள். நல்லாதானே போயிக்கிட்டிருக்கு கதை என்கிறீர்களா? பிரச்சினையே இப்போது தான் ஆரம்பிக்கிறது.

'அய்யர் தி கிரேட்' படத்தில் மம்முட்டிக்கு இருந்ததை போல ஒரு திடீர் சக்தி விஜய்க்கு வருகிறது. எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கனவு மூலமாக அறிகிறார். ஒரு மனோதத்துவ மருத்துவரும் (டாக்டர் ருத்ரன்) ESP சக்தி விஜய்க்கு இருப்பதை உறுதி செய்கிறார். அந்த சக்தி மூலமாக தானே ஸ்ரேயாவை கொல்லப்போகிறோம் என்பதை உணர்ந்த விஜய் உடனடியாக ஸ்ரேயாவை விட்டு விலகி மும்பைக்கு பறக்கிறார்.

இதற்கிடையே மும்பையில் தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட இன்னொரு விஜய்யை எதிர்பாராவிதமாக சந்திக்கிறார். ஸ்ரேயாவை கொல்லப் போவது தானல்ல மும்பை விஜய் என்பதை உணர்கிறார். மும்பை விஜய்யை தடுத்த நிறுத்த முயற்சிக்கும் முன்பாக விபத்தில் சிக்கிவிடுகிறார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மும்பை விஜய், சென்னை விஜய்யின் இடத்தை தான் தக்கவைத்துக் கொள்ள சென்னைக்கு வருகிறார். முடிவு வெள்ளித்திரையில்!

திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிய பலம். 'மதுரைக்கு போகாதேடி' பாடலுக்கு தியேட்டர் அதிருகிறது. 'பொன்மகள் வந்தாள்' ரீமிக்ஸ் பாடல் படமாக்கப்பட்ட விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணியிலும் மிரட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

திரைக்கதை நுட்பமாக புதுவடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஈ.எஸ்.பி. சக்தி கொண்ட விஜய்யைக் காட்டிலும், வில்லன் விஜய் எளிதாக ரசிகர்களின் இதயங்களை திருடுகிறார். படத்தின் முன்பாதியில் எடிட்டர் தன் கத்தரிக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருந்தால் அழகிய தமிழ்மகன் இன்னும் "நச்"சென்றிருப்பார். இளைய தளபதி ரசிகர்களுக்கு அட்டகாசமான ஆட்டம்பாமாக வெடித்திருக்கிறார் அழகியதமிழ்மகன்.

2 comments:

  1. said...

    பிரமிட் சாய்மிரா நிறுவனத்தாருக்கு,

    படம் பார்த்தாச்சு, விமர்சனம் எழுதியாச்சு

  2. said...

    உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது நண்பரே.