Friday, November 16, 2007

டாம் க்ரூஸை மிஞ்சுகிறார் ஷாருக்கான்!


முன்பெல்லாம் ஹாலிவுட் தரம், ஹாலிவுட் வசூலை கண்டு வாய்பிளந்து நிற்பது நம்மவர்களுக்கு வாடிக்கை. அந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இப்போது தயாரிக்கப்படும் இந்தியத் திரைப்படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறதோ இல்லையோ ஹாலிவுட் அளவுக்கு வசூலிக்கிறது. கடந்த ஜூன்மாதம் வெளியான தென்னிந்திய திரைப்படமான சிவாஜி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வசூலை குவித்து உலகின் கவனத்தை ஈர்த்தது.

இப்போது ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படத்துக்கான முறை. தீபாவளிக்கு வெளியான ஓம் சாந்தி ஓம் இந்தியாவில் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் அட்டகாசமாக வசூலித்து வருகிறது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் மட்டுமே 17,64,131 டாலர்களை குவித்து ஹாலிவுட் சினிமாகாரர்களை மூக்கின் மேல் விரல் வைக்குமளவுக்கு வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இதே நேரத்தில் வெளியாகியிருக்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸின் லயன்ஸ் பார் லேம்ப்ஸ் திரைப்படம் வசூலை குவிக்க திணறி வருகிறது. இந்தியா, அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவில் ஓம் சாந்தி ஓம் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிவருகிறது.

இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான ஷாருக் கானோ கொஞ்சமும் அலட்டலில்லாமல் ஓம் சாந்தி ஓம் குழுவினருடன் கடந்த குழந்தைகள் தினமன்று மும்பை கெயிட்டி சினிமாஸில் ஆதரவற்ற குழந்தைகளுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். வேறு என்ன படம்? ஓம் சாந்தி ஓமே தான்.

"இப்படம் இளைஞர்கள், மகளிர், முதியவர்கள், குழந்தைகள் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் திருப்தி படுத்தி எல்லோரையும் மகிழ்ச்சி அடைய வைத்திருப்பதால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்கிறார் ஷாருக்.

படத்தின் இயக்குனரான பராகான் வேறொரு மகிழ்ச்சியில் இருக்கிறார். கர்ப்பமாக இருக்கிறாராம். அவருடைய அடுத்த வெளியீடு குழந்தைகளாம். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள்! படம் இயக்குவதில் மட்டுமல்லாமல் எல்லா விஷயத்தில் அம்மணி பிரம்மாண்டம் தான்!

0 comments: