Wednesday, April 30, 2008

சென்னைப் பயணம் குறித்து ஜாக்கிசான்! - வதந்திகளுக்கு மறுப்பு!!


ஆசிய சிங்கம் ஜாக்கிசான் தன் பெயரிலான இணையதளம் ஒன்றினை தொடங்கி தன் ரசிகர்களோடு எழுத்து மூலமாக பேசிவருகிறார். அந்த இணையதளத்தில் தன்னுடைய சமீபத்திய சென்னை பயணம் குறித்தும் எழுதியிருக்கிறார்.

“ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தார் என்னுடைய படங்களை இந்தியாவில் இருபதாண்டுகளுக்கும் மேலாக வினியோகித்து வருகிறார்கள். இந்தியாவிலும் நான் பிரபலமாக இருப்பதற்கு அந்நிறுவனத்தார் ஒரு முக்கிய காரணம். சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் ஹாங்காங் வந்து அவர்கள் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்திருந்தார்கள். சீனாவில் ஒலிம்பிக் நடைபெற இருப்பதால் ஏப்ரல் மாதம் முழுவதும் எனக்கு சீனத்தலைநகரில் ஏராளமான நிகழ்ச்சிகள் இருந்தது. இருப்பினும் ஆஸ்கர் நிறுவனத்துக்காக இருபத்தி நாலு மணி நேரத்தை மனமகிழ்ச்சியோடு ஒதுக்கினேன்.

ஆஸ்கர் நிறுவனம் தயாரித்த தசாவதாரம் என்ற திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு நிகழ்ச்சி அது. இந்தியத் திரைப்படங்களில் இசைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. இசைக்கு மயங்காத இந்தியர்களே இல்லை எனலாம். நான் அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதை தங்கள் கவுரவமாக ஆஸ்கர் நிறுவனத்தார் நினைத்தார்கள். எனவே நானும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள சம்மதித்தேன்.

இருபத்தி நான்கு மணி நேர என்னுடைய சென்னைப் பயணம் மிக சாதாரணமாகவே இருக்கும் என்று நினைத்திருந்தேன். சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது தான் அந்நிகழ்ச்சியில் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை என்னால் உணரமுடிந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், என்னைப் பார்த்திராமலேயே என் மீது அன்புகொண்ட பல நண்பர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார்கள்.

தசாவதாரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாத்துறையின் பல பிரபலஸ்தர்களை என்னால் அவ்விழாவில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. என்னால் அவர்களின் முகங்களை நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறதே தவிர அவர்களது பெயர்களை நினைவுபடுத்தி சொல்லமுடியவில்லை, மன்னிக்கவும். பல்லாயிரம் பேர் என்னைப் பார்க்கவும், என்னிடம் பேசவும் அலைமோதினார்கள். உண்மையிலேயே இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேரமின்மையால் பலருடன் பேசவோ, சந்திக்கவோ இயலவில்லை. என் மீது அன்புகொண்டவர்கள் இந்தப் பிரச்சினையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தசாவதாரம் திரைப்படம் பல பரிமாணங்களிலும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அனைத்துமே அதிசயத்தக்க வகையில் இருக்கிறது. இந்திய சினிமா எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை என்னால் இப்போது உணரமுடிகிறது. இதற்கு முன்னால் பல இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். இந்திய நடிகர்களின் நடிப்பும், இசையமைப்பாளர்களின் இசையும், வண்ணமயமான நடனங்களும் என்னை கவர்ந்தவை. தசாவதாரம் இதுவரை நான் பார்த்த திரைப்படங்களையெல்லாம் விட மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையைப் பற்றி இப்போது சொல்லி படம் பார்க்க இருப்பவர்களுக்கு கிடைக்க இருக்கும் ஆச்சரியத்தை பறிக்க நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.


சுற்றுச்சூழல் குறித்த அக்கறைக்காக கட்டாயம் இத்திரைப்படத்தை காணவேண்டும். இனி சீன மற்றும் ஹாங்காங் இயக்குனர்கள் முன்பைவிட மிக அதிகமாக உழைக்கவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது என்பதை உணருகிறேன். ஏனென்றால் மிக விரைவில் நம்மை விட இந்திய திரைத்துறையினர் சர்வதேச திரைப் பார்வையாளர்களின் கவனத்தை கவரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

பயணம் முடிந்ததும் சீனாவுக்கு திரும்பிய பின் எனக்கு சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது. நான் இந்திய உணவை புறக்கணித்ததாகவும், இந்திய குடிநீரை வேண்டாமென்றதாகவும், இந்திய திரைநட்சத்திரங்களை சந்திக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்திருக்கிறது. முழுக்க முழுக்க முட்டாள்தனமான, உண்மை சற்றுமில்லாத பொய்ச்செய்திகள் இவை. இந்தியாவின் கலாச்சாரத்தையும், இந்திய சினிமாவையும் நேசிப்பவன் நான். நான் அங்கே சந்தித்த இந்திய சினிமாத்துறையினரின் பெயர்கள் எனக்கு தெரியாது என்றாலும் அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்புக்கு அளவேயில்லை. என் இந்தியப் பயணத்தின் போது இருவேளை மிக அருமையான இந்திய உணவையே நான் உட்கொண்டேன். இந்திய உணவுகளின் ருசி என் நாக்குக்கு மிகவும் பிடித்தமானது.

நான் எந்த நாட்டு குடிநீரை குடித்தேன் என்பதை நான் தங்கிய ஹோட்டல் நிர்வாகிகளிடமே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். நான் தங்கிய அறையை விட்டு வெளியே வர தயங்கினேன் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு. ஒரு அறைக்குள் முடங்கிக் கிடக்கவா இவ்வளவு தூரம் பயணம் செய்தேன். எனக்கு மிக இனிய அனுபவமாக அமைந்த ஒரு பயணம் குறித்த பொய்யான செய்திகளை பத்திரிகையாளர்கள் பரப்பி வருவது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. என்னை விருந்தினராக ஏற்று அன்போடு வரவேற்று உபசரித்து மகிழ்ந்த இந்திய மக்கள் இந்தச் செய்திகளை வாசித்து என்னைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்வார்களோ என்று அச்சப்படுகிறேன்.

என்னுடைய வெற்றிகரமான இந்தியப் பயணம் குறித்த தவறான தகவல்களை யாரும் நம்பிவிடக்கூடாது என்பதற்காகவே உடனடியாக உண்மை நிலை குறித்து இங்கே எழுதியிருக்கிறேன்”

இவ்வாறாக ஜாக்கிசான் தன் இணையத்தளத்தில் அதிரடியாக எழுதியிருக்கிறார்.

Tuesday, April 29, 2008

சாய்மீரா சினிமா - மின்னிதழை வாசிக்க மற்றும் தரவிறக்க...


கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மக்கள் நம்பிக்கையோடு முதலீடு செய்யும் பணத்தை முடிந்த மட்டும் பன்மடங்காக பெருக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் பெரிய ஹீரோ, பெரிய நிறுவனம், பெரிய பிராஜக்ட் என வெற்றி வாய்ப்புகள் அதிகமுள்ள பிரம்மாண்டங்களை மட்டுமே நம்பியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது உலகவிதி. ஆனால் இதற்கு விதிவிலக்கு....

இளமைக் காலங்கள், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், இதயக்கோயில், உயிரே உனக்காக என்று வெள்ளிவிழா மற்றும் வைரவிழா படங்களை தந்த நிறுவனம். தொடர்ந்து ஒரே நிறுவனம், ஒரே ஹீரோவை வைத்து ஏழு மாபெரும் வெற்றிப் படங்களை தந்தது வட இந்தியத் திரைப்பட உலகையும் வாய்பிளக்க வைத்த சாதனை. அந்த நிறுவனம் ஏன் படத்தயாரிப்பை நிறுத்திக் கொண்டது?

எந்த ஒரு வலிமையான மனிதனாக இருந்தாலும் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லும்போது நிச்சயமாக இரத்த அழுத்தம் ஏறும். எனக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பைபாஸ் செய்ய ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்ற போது இரத்த அழுத்தம் அப்படியே இருந்தது. அப்படிப்பட்ட எனக்கே இரத்த அழுத்தம் ஏறியதுண்டு. எப்போது தெரியுமா?

'அன்புள்ள எம்.ஜி.ஆர்' என்று படத்துக்கு பெயர் சூட்டி அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களிடம் கதை சொன்னோம். அவருக்கு கதை மிகவும் பிடித்து, ”நான் முதல்வராக இருந்தாலும் பரவாயில்லை. கண்டிப்பாக இப்படத்தில் நடிக்கிறேன்” என்றார். அன்புள்ள எம்.ஜி.ஆர், அன்புள்ள ரஜினிகாந்த் ஆன கதை!!

உங்களுக்கு லாட்டரியில் ஒரு லட்சரூபாய் பரிசாக விழுந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? இல்லை நீங்கள் காதலிக்கும் பெண் உங்கள் காதலை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? மெய்யான மகிழ்ச்சி எது?

சராசரி சினிமாவை மீறிய யதார்த்தம், வியாபார மொழியில். மேற்கத்திய மோகத்தின் ஆதிக்கத்தில் அல்லல்பட்டு கிடக்கும் நகர்வாழ் தமிழர்களுக்கு அவர்கள் கடந்துவந்த, முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு நல்ல அடையாளம்.

தெளிந்த நீரோடை போல நம் மண்ணின் இசையை சுவாசிக்கும் ஒரு இளைஞன். பரபரப்பான மேற்கத்திய இசையோடு வாழும் ஒரு பெண்.

ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் கடவுள் கொடுத்த கொடை காதல். ஆனால் மனித இனம் தவிர்த்து உலகின் எந்த உயிரினத்துக்கும் காதல் தோல்வி கிடையாது. காதல் தோல்வியை கொண்டாடுவோம்.

ஒரு படம் முடிந்தபின் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளப்பணம் கிடைத்துவிடும். மிஞ்சி நிற்பது தயாரிப்பாளரும், படப்பெட்டியும் தான்.

பட்டிதொட்டியெல்லாம் ஒருவருடத்துக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை புரிந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? கோயம்பேட்டுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்?

சின்னத்தம்பி அப்படி ஓடும்னு தெரிஞ்சிருந்தா அதுக்கப்புறம் படமே தயாரிச்சிருக்க மாட்டேன். நானே அந்தப் படத்தை வெளியிட்டு பெரிய பணக்காரனாக ஆயிருப்பேன். ஆனால் அந்தப் படத்தின் ஒரு ஏரியா கூட என்னிடம் இல்லை. என்னதான் நடந்தது?

அதிரடி சரவெடி - உங்கள் ஊர் தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படங்களை மாதம் முழுவதும் பார்த்து ரசிக்கலாம். வெறும் நூறு ரூபாய் செலவிலேயே. ஆம்... செலவு ஒரே நூறு, சினிமா தினமும் பாரு!! - இதென்ன கலாட்டா?

இதையெல்லாம் தெரிந்துகொள்ள சாய்மீரா சினிமா மின்னிதழை முழுமையாக ஆன்லைனிலே வாசிக்க இங்கே சொடுக்கவும்! அல்லது இதே லிங்கை ரைட் க்ளிக் செய்து மின்னிதழை PDF கோப்பாக டவுன்லோடு செய்தும் வாசிக்கலாம்..

Monday, April 28, 2008

பாக்யராஜின் மகன் நாயகனாக நடிக்கும் “சக்கரைக் கட்டி!”

பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகன், பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்குனர், இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்று பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது சக்கரைக்கட்டி. இயக்குனருக்கும், நடிகருக்கும் இதுதான் முதல் படம். ஷிபி, இஷிதா என்ற இரட்டை கதாநாயகிகள்.

கலைப்புலி தாணு காக்க காக்க, தொட்டி ஜெயா மற்றும் சச்சின் திரைப்படங்களை தயாரித்தபோது, அதன் இயக்குனர்களோடு பணியாற்றி அனுபவம் பெற்றவர் அவரது மகன் கலாபிரபு. கலாபிரபுவின் கதையை தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிக்க முன்வந்தும் கூட, இயக்குனரின் முதல் படம் என்பதால் ரிஸ்க்கை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று தாணுவே இப்படத்தை தயாரிக்கிறார்.

பணக்கார பெண் நடுத்தர வகுப்பை சேர்ந்த இளைஞனை காதலிக்கும் ஒருவரி கதை தான் என்றாலும் படமாக்கும் உத்தி மூலமாக வித்தியாசப்படுத்தியிருக்கிறார் கலாபிரபு என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் கலக்கலாக வந்திருக்கிறதாம். படம் மிக விரைவில் வெள்ளித்திரையை எட்ட இருக்கிறது.


Saturday, April 26, 2008

தசாவதாரம் இசை வெளியீடு படங்கள் மற்றும் படம் குறித்த கடைசிக்கட்ட தகவல்கள்!!

* கமல்ஹாசன், அசின் ஆகியோரோடு மல்லிகா ஷெராவத், ஜெயப்ரதா, ஜெயராம், நெப்போலியன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய நட்சத்திரங்கள் தசாவதாரத்தில் மின்னப் போகிறார்கள்.

* கே.எஸ். ரவிக்குமார் - இயக்கம், ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன் - தயாரிப்பு, ஹிமேஷ் ரேஷமைய்யா - இசை, கிரேஸி மோகன் - வசனம், ரவிவர்மன் - ஒளிப்பதிவு, அஸ்மித் குன்டர் - எடிட்டிங், மைக்கேல் வெஸ்ட்மோர் - ஒப்பனை, தியாகராஜன் - சண்டைக்காட்சி, வைரமுத்து - பாடல்கள், ப்ரையன் ஜெனிக்ஸ் - ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்.

* படத்தில் இடம்பெறும் முதல் மூன்று நிமிட காட்சிகளுக்கு மட்டுமே மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படமே எடுத்துவிடலாம்.

* அசின் முதன்முறையாக இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். பதினொன்றாம் நூற்றாண்டின் பிராமணப்பெண்ணாகவும், தற்கால நாகரிகப் பெண்ணாகவும் இரண்டு வேடங்கள்.

* படத்தில் வில்லனும் கமல் தானாம்.

* ஆயிரம் படகுகள் இடம்பெறும் பிரம்மாண்டமான போட்டிங் ரேஸ் காட்சி படத்தில் உண்டு. உலக அளவில் இதுபோன்ற ஒரு சேஸிங் காட்சி இதுவரை படமாக்கப்பட்டதில்லை.

* தசாவதாரம் திரைப்படத்துக்காக அச்சு அசலாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை சென்னை திரைப்பட நகரில் செட் அமைத்து உருவாக்கினார்கள்.

* சிதம்பரம் கோயிலை அச்சு அசலாக செட்டிங் மூலமாக படத்துக்காக உருவாக்கியிருக்கிறார்கள்.

* படத்தின் சுனாமி தாக்கும் ஒரு காட்சி மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

* பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் தோன்றுவது போல ஒரு காட்சி படத்தில் உண்டு. இதற்காக பிரெஞ்சு பாணியில் ஒரு கோட்டையும் பெரும் பொருட்செலவில் படத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

* படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் கீழே :


Friday, April 25, 2008

கொஞ்சம் ஹாலிவுட் - உலகின் கவர்ச்சியான அழகி!


எது எதற்கு தான் கருத்துக்கணிப்புகள் நடத்துவது என்ற விவஸ்தை மேற்கத்திய பத்திரிகைகளுக்கு இல்லாமல் போய் விட்டது. நல்ல வேளையாக ஆண்கள் பத்திரிகையான FHM "உலகின் கவர்ச்சியான அழகி" என்ற பரவாயில்லை ரக தலைப்பில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தில் நடித்த மேகன் டெனிஸ் ஃபாக்ஸ் 2008ஆம் ஆண்டின் கவர்ச்சி அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உலகளவில் முதல் நூறு இடங்களில் இருக்கும் கவர்ச்சி அழகிகளையும் அந்தப் பத்திரிகை பட்டியலிட்டிருக்கிறது.

உதட்டழகால் உலகையே கிறங்கடிக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கே பண்ணிரண்டாவது இடம் தான் கிடைத்திருக்கிறது என்றால் போட்டியில் கலந்துகொண்ட அழகிகளின் கவர்ச்சியை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். பாரிஸ் ஹில்டனின் நிலையோ இன்னும் பரிதாபம், எழுபத்து ஏழாவது இடம் தான் அவருக்கு. அதிரடி திருமணங்கள், திடீர் குழந்தை என சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு கடைசி இடமான நூறாவது இடம் மட்டுமே கிடைத்தது. நம்ம ஊர் நமீதாக்களும், நயன்தாராக்களும் இந்த போட்டியில் கலந்துகொள்ளாததாலேயே இவர்களுக்கெல்லாம் இடம் கிடைத்திருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஹாலிவுட் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து கூறியிருக்கிறார்.

முதலிடம் பெற்ற ஃபாக்ஸுக்கு இருபத்தொரு வயது தான் ஆகிறதாம். பொது இடங்களுக்கும், விழாக்களுக்கும் அபாயகரமான உடைகளை அணிந்துவந்து ஆண்களின் மனநிலையை பிறழச் செய்வது தான் அம்மணிக்கு ஹாபியாம். பச்சை குத்திக் கொள்வதில் (tattoos) அதிக ஆர்வம் கொண்ட ஃபாக்ஸ் உடலில் ஒன்பது இடங்களில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அவரது பாய் ஃபிரண்டான பிரையனின் பெயரை அவர் எங்கே பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னோமானால் தணிக்கைக்குழு இந்தப் பதிவுக்கு "A" சான்றிதழ் வழங்கிவிடக்கூடும்.

நயன்தாரா விலகினார்?


இந்தியன் ப்ரீமியர் லீக் 20-20 போட்டிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்ட நயன்தாரா தன் பொறுப்பிலிருந்து விலகப் போகிறார் என்று செய்திகள் வந்துக்கொண்டிருக்கிறது. உடல் நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடந்த போட்டியின் போது கூட நயன்தாரா வர இயலவில்லை.

பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாலும், உடல்நலக்குறைவாலும் அவரால் தொடர்ந்து விளம்பரத் தூதராக நீடிக்க முடியவில்லை என்கிறார்கள். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னொரு விளம்பரத் தூதரான இளைய தளபதி விஜய்யையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நயன்தாராவின் இழப்பை அந்த அணியின் கேப்டனான டோனியை வைத்தே ஈடுகட்டிவிடலாமா என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டம் தீட்டி வருகிறது.

Thursday, April 24, 2008

குசேலன்! - ஸ்பாட்லைட்


ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக லைட்டாக டிஃபன் சாப்பிட்டால் குஷியாக இருக்கும் தானே? ஷங்கரின் கனவுப்படமான ரோபோவுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார் மாறுபட்ட சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் படம் குசேலன். பசுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரிஜினல் சூப்பர் ஸ்டாராகவே தோன்றுகிறார். சிறு பாத்திரம் என்றாலும் அவரின் ஃபுல் மாஸையும் பயன்படுத்திவிட வேண்டும் என்பதில் இயக்குனர் பி.வாசு குறியாக இருக்கிறாராம்.


படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு கலக்கலான ஓபனிங் சாங் ஒன்றும் உண்டு. மும்பை மாடல்களுடன் அவர் ஆடி, பாடி அறிமுகமாகும் அந்தப் பாடல் தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்தப் பாடலில் பறக்கும் குதிரையில் பறந்தவாறே சூப்பர்ஸ்டார் பாடுவது போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் பாடல் உருவாக்கப் படுகிறது. இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் பொள்ளாச்சியில் அடுத்தக் கட்டமாக படமாக்கப்படும் என்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் மட்டுமன்றி செமத்தியான நட்சத்திரப் பட்டாளமும் படத்தில் உண்டு. பசுபதி, மீனா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, சந்தானம், லிவிங்ஸ்டன் என்று தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் தமிழ் பதிப்பில் நடிக்கிறார்கள். படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு வேறு சில தெலுங்கு நட்சத்திரங்கள் பயன்படுத்தப் படலாம் என்கிறார்கள்.


முன்னதாக ஐதராபாத்தில் குசேலன் படப்பிடிப்பில் திடீரென நயன்தாரா மயங்கி விழுந்திருக்கிறார். விஷாலுடன் சத்யம், அஜித்துடன் ஏகன் என்று ஓய்வின்றி நடித்துவருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் ஐதராபாத் வெயிலும் அதிகமாக இருந்ததால் சோர்வடைந்து அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். நயன்தாரா ஓய்வில் இருப்பதால் நேற்று சென்னையில் நடந்த 20 - 20 கிரிக்கெட் போட்டியை காண அவர் வர இயலவில்லை. 20 - 20 போட்டியில் கலந்துகொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தூதராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 23, 2008

சிம்ரனுடன் “நேருக்கு நேர்!” - வண்ணப் படங்கள்!!

ஜெனிபர் லோஃபஸ் மாதிரி ஜில்லேன்று இருக்கிறார் சிம்ரன். தமிழ் திரையுலகை தன் நளினமான நடனத்தாலும், சுனாமியாய் சுழன்றடித்த அழகாலும் கட்டிப்போட்டவர் இப்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயாடிவியில் ஒளி-ஒலிபரப்பாகும் சிம்ரன் திரை மூலமாக நம் இல்ல வரவேற்பறைக்கே வந்துவிடுகிறார்.


”மாதம் ஒரு கதை'என்கிற கான்செப்டே இந்தத் தொடருக்கு பெரிய வரவேற்பை தந்திருக்கிறது. எனக்கு ஏற்பட்ட சில ஆண்டு திரை இடைவெளி நல்லவேளையாக சிம்ரன் திரை மூலமாக நிரப்பப் பட்டிருக்கிறது” குரல் முழுக்க சந்தோஷம் சிம்ரனுக்கு.


“சிம்ரன் திரையில் முதலில் வந்த கதை வண்ணத்துப் பூச்சி. சுஜாதாவின் கதைன்னா சொல்லவும் வேணுமா? வண்ணமயமான வரவேற்பை எனக்கு பெற்றுத் தந்தது. அடுத்து வந்த 'அனுவும், நானும்' கதையில் மெல்லிய தாய்மையுணர்வை வெளிப்படுத்தும் பாத்திரம். என் வாழ்க்கையின் இப்போதையக் கட்டத்தோடு ஒத்துப் போகும் பாத்திரம் என்பதால் ரொம்பவும் ஒன்றிப்போய் நடித்தேன். அடுத்தது ”நேருக்கு நேர்”. தடாலடியான சிம்ரனை இதில் பார்க்கலாம்”

“அப்படியென்ன தடாலடி?”

“சீறும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா? சீற்றத்தின் போது நெருப்புத்துண்டு மாதிரி, மின்னல் மாதிரி பளீரிடும் அதன் கண்களை கவனித்திருக்கிறீர்களா? சீண்டிவிட்டால் எந்தப் பெண்ணும் சீறும் பாம்புதான். ஒரு அப்பாவித் தாயையும், அவரது மகளையும் கொடுமைப் படுத்திய வில்லன்களோடு நான் விளையாடும் விளையாட்டு தான் ”நேருக்கு நேர்”, சாதாரண விளையாட்டு அல்ல, மரண விளையாட்டு. சூப்பர் ஸ்டாரை திரையில் பார்த்ததுமே விசிலடிக்கத் தோன்றுமல்லவா? நேருக்கு நேரில் என்னைக் கண்டாலும் எல்லோரும் விசிலடிக்கப் போகிறீர்கள்!”


“அடடே.. முழுக்க முழுக்க ஹீரோயினிஸமா?”

“ம்ம்ம்ம்... கொடுமைக்காரர்களான அண்ணன் - தம்பி இருவரின் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடும் இரட்டை கதாபாத்திரம், என் நடிப்பின் இன்னொரு பரிமாணம். பழிவாங்கும் கதையின் போக்கில் இயல்பாக நடக்கும் சம்பவங்கள் என்று விறுவிறு சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் உண்டு!! மூக்கைச் சிந்தும் அழுகை, மஞ்சக்கயிறு செண்டிமெண்ட் மட்டும் மிஸ்ஸிங்” ஜாலியாக சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகிறார் சிலிம்ரன். ம்ம்ம்... இன்னமும் சிலிம்மாக தான் இருக்கிறார்!!


பிரமிட் சாய்மீரா தயாரிப்பில் சிம்ரன் திரையில் இடம்பெறும் மூன்றாவது தொடரான “நேருக்கு நேர்” வரும் திங்கட்கிழமை (28-04-08) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஜெயா டிவியில் இரவு எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. சுபாவெங்கட் கதைக்கு குமரேசன் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். கோபால் ஒளிப்பதிவு செய்ய அழகர் இயக்கியிருக்கிறார்.

தசாவதாரம்.. ரெடி... ஜூட்!!* பெரிதும் எதிர்பார்க்கப்படும் தசாவதாரம் படத்தின் இசை இன்னும் நான்கைந்து தினங்களில் நம் காதுகளை எட்டப்போகிறது.

* இப்படத்தின் இசைத்தகடு வெளியீட்டு விழாவுக்கு செலவிடப்படும் செலவில் இன்னொரு பெரிய படமே தயாரித்து விடலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

* இந்த விழாவுக்காகவே ஜாக்கிசான் முதன்முறையாக சென்னைக்கு வருகிறார். நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் கலைஞரும் கலந்துகொள்கிறார். நாடு முழுவதுமிருந்து திரைத்துறை முக்கியஸ்தர்கள் இவ்விழாவுக்கு படையெடுக்கிறார்கள்.

* படத்துக்காக எடுக்கப்பட்ட ட்ரைலரை சமீபத்தில் தமிழக முதல்வருக்கு கமல் போட்டு காட்டியிருக்கிறார். ட்ரைலரை பார்த்து பிரமித்த கலைஞர், கமல்ஹாசனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். “இந்த பத்துவேடத்தில் நடித்திருப்பதும் உண்மையிலேயே நீதானா?” என்று திரும்ப திரும்ப கமலை பார்த்து முதல்வர் கேட்டாராம்.

* பண்ணிரண்டாம் நூற்றாண்டின் வீரவைஷ்ணவனாக கமல் ஒரு வேடம் பூண்டிருக்கிறார். ”கல்லை மட்டும் பார்த்தால் கடவுளை தெரியாது. கடவுளை மட்டும் பார்த்தால் கல்லை தெரியாது” என்ற வாலியின் பாடலை ஹரிஹரன் குரலில் இந்த வேடம் பாடுகிறது.

* சீனர், அமெரிக்கர், சி.பி.ஐ. அதிகாரி, ஆப்கானிஸ்தான் தலைவர், வயதான பாட்டி, பழங்குடியினத் தலைவர், சர்தார்ஜி போன்ற இதரவேடங்களிலும் கமல்ஹாசன் வருகிறாராம்.

* பத்து வேடங்களில் நடிப்பது மட்டுமன்றி பத்து வேடங்களுக்கு பத்து வெவ்வேறு குரல்களையும் கமல்ஹாசனே தந்திருக்கிறாராம். குறிப்பாக ஜார்ஜ் புஷ் போன்ற ஒரு வேடத்துக்கு ஜார்ஜ்புஷ்ஷின் குரலையே அச்சு அசலாக கமல் மிமிக்ரி செய்திருப்பதாக சொல்கிறார்கள். இவ்வாறாக கமல் மிமிக்ரி செய்ய அவரது மகள் ஸ்ருதிஹாசன் பயிற்சி தந்ததாக தெரிகிறது.


Friday, April 18, 2008

ரசிகனுக்கு மரியாதை! - குருவி கலர்புல் கேலரி!!


அது 2004ஆம் ஆண்டு. இதே போல கோடை விடுமுறை நேரம், கில்லி படம் வெளியாகியிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்த்த விஜய்யின் ரசிகர் ஒருவர் இதே போன்ற ஒரு படத்தை இதே காம்பினேஷனில் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். விஜய்யை தொடர்பு கொண்டு தன் ஆசையை கூறுகிறார். சில வருடங்களுக்கு தன் கால்ஷீட் பிஸியாக இருப்பதால் வேறு ஒரு நடிகரை வைத்து படம் தயாரியுங்கள், சில காலம் கழித்து உங்கள் தயாரிப்பில் நடிக்கிறேன் என்று விஜய் சொல்கிறார்.

நான் படம் தயாரித்தால் உங்களை வைத்து தான் தயாரிப்பேன். உங்கள் கால்ஷீட் எனக்கு எப்போது கிடைக்கிறதோ அப்போது தயாரித்துக் கொள்கிறேன் என்கிறார் அந்த ரசிகர். இதோ நான்கு வருடங்கள் கழித்து அந்தப் படம் ரெடி!!! படத்தின் பெயர் “குருவி”. விஜய்யை வைத்து தான் முதன்முதலாக படம் தயாரிப்பேன் என்று சபதம் செய்தவர் உதயநிதி ஸ்டாலின். தன்னை ரசித்து தனக்காக மட்டுமே படம் தயாரிக்க வந்த தன்னுடைய ரசிகனுக்காக பரிசாக இரவு, பகல் பாராத உழைப்பை தந்திருக்கிறார் விஜய். தரணி - விஜய் - த்ரிஷா - வித்யாசாகர் காம்பினேஷன் ஒன்றே போதும், இது சூப்பர் டூப்பர் ஹிட் படமென வெளியீட்டுக்கு முன்பே சொல்லிவிடலாம்.

விஜய்யுடன், த்ரிஷா, சுமன், மாளவிகா, விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு, வித்யாசாகர் இசை. தரணி இயக்கும் இப்படத்தை ரெட் ஜயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் “குருவி” படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. யோகி பியுடன் இளைய தளபதி பாடியிருக்கும் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. படம் அடுத்த மாதம் வெளிவரலாம்.