Wednesday, April 30, 2008

சென்னைப் பயணம் குறித்து ஜாக்கிசான்! - வதந்திகளுக்கு மறுப்பு!!


ஆசிய சிங்கம் ஜாக்கிசான் தன் பெயரிலான இணையதளம் ஒன்றினை தொடங்கி தன் ரசிகர்களோடு எழுத்து மூலமாக பேசிவருகிறார். அந்த இணையதளத்தில் தன்னுடைய சமீபத்திய சென்னை பயணம் குறித்தும் எழுதியிருக்கிறார்.

“ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தார் என்னுடைய படங்களை இந்தியாவில் இருபதாண்டுகளுக்கும் மேலாக வினியோகித்து வருகிறார்கள். இந்தியாவிலும் நான் பிரபலமாக இருப்பதற்கு அந்நிறுவனத்தார் ஒரு முக்கிய காரணம். சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் ஹாங்காங் வந்து அவர்கள் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்திருந்தார்கள். சீனாவில் ஒலிம்பிக் நடைபெற இருப்பதால் ஏப்ரல் மாதம் முழுவதும் எனக்கு சீனத்தலைநகரில் ஏராளமான நிகழ்ச்சிகள் இருந்தது. இருப்பினும் ஆஸ்கர் நிறுவனத்துக்காக இருபத்தி நாலு மணி நேரத்தை மனமகிழ்ச்சியோடு ஒதுக்கினேன்.

ஆஸ்கர் நிறுவனம் தயாரித்த தசாவதாரம் என்ற திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு நிகழ்ச்சி அது. இந்தியத் திரைப்படங்களில் இசைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. இசைக்கு மயங்காத இந்தியர்களே இல்லை எனலாம். நான் அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதை தங்கள் கவுரவமாக ஆஸ்கர் நிறுவனத்தார் நினைத்தார்கள். எனவே நானும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள சம்மதித்தேன்.

இருபத்தி நான்கு மணி நேர என்னுடைய சென்னைப் பயணம் மிக சாதாரணமாகவே இருக்கும் என்று நினைத்திருந்தேன். சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது தான் அந்நிகழ்ச்சியில் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை என்னால் உணரமுடிந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், என்னைப் பார்த்திராமலேயே என் மீது அன்புகொண்ட பல நண்பர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார்கள்.

தசாவதாரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாத்துறையின் பல பிரபலஸ்தர்களை என்னால் அவ்விழாவில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. என்னால் அவர்களின் முகங்களை நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறதே தவிர அவர்களது பெயர்களை நினைவுபடுத்தி சொல்லமுடியவில்லை, மன்னிக்கவும். பல்லாயிரம் பேர் என்னைப் பார்க்கவும், என்னிடம் பேசவும் அலைமோதினார்கள். உண்மையிலேயே இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேரமின்மையால் பலருடன் பேசவோ, சந்திக்கவோ இயலவில்லை. என் மீது அன்புகொண்டவர்கள் இந்தப் பிரச்சினையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தசாவதாரம் திரைப்படம் பல பரிமாணங்களிலும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அனைத்துமே அதிசயத்தக்க வகையில் இருக்கிறது. இந்திய சினிமா எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை என்னால் இப்போது உணரமுடிகிறது. இதற்கு முன்னால் பல இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். இந்திய நடிகர்களின் நடிப்பும், இசையமைப்பாளர்களின் இசையும், வண்ணமயமான நடனங்களும் என்னை கவர்ந்தவை. தசாவதாரம் இதுவரை நான் பார்த்த திரைப்படங்களையெல்லாம் விட மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையைப் பற்றி இப்போது சொல்லி படம் பார்க்க இருப்பவர்களுக்கு கிடைக்க இருக்கும் ஆச்சரியத்தை பறிக்க நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.


சுற்றுச்சூழல் குறித்த அக்கறைக்காக கட்டாயம் இத்திரைப்படத்தை காணவேண்டும். இனி சீன மற்றும் ஹாங்காங் இயக்குனர்கள் முன்பைவிட மிக அதிகமாக உழைக்கவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது என்பதை உணருகிறேன். ஏனென்றால் மிக விரைவில் நம்மை விட இந்திய திரைத்துறையினர் சர்வதேச திரைப் பார்வையாளர்களின் கவனத்தை கவரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

பயணம் முடிந்ததும் சீனாவுக்கு திரும்பிய பின் எனக்கு சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது. நான் இந்திய உணவை புறக்கணித்ததாகவும், இந்திய குடிநீரை வேண்டாமென்றதாகவும், இந்திய திரைநட்சத்திரங்களை சந்திக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்திருக்கிறது. முழுக்க முழுக்க முட்டாள்தனமான, உண்மை சற்றுமில்லாத பொய்ச்செய்திகள் இவை. இந்தியாவின் கலாச்சாரத்தையும், இந்திய சினிமாவையும் நேசிப்பவன் நான். நான் அங்கே சந்தித்த இந்திய சினிமாத்துறையினரின் பெயர்கள் எனக்கு தெரியாது என்றாலும் அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்புக்கு அளவேயில்லை. என் இந்தியப் பயணத்தின் போது இருவேளை மிக அருமையான இந்திய உணவையே நான் உட்கொண்டேன். இந்திய உணவுகளின் ருசி என் நாக்குக்கு மிகவும் பிடித்தமானது.

நான் எந்த நாட்டு குடிநீரை குடித்தேன் என்பதை நான் தங்கிய ஹோட்டல் நிர்வாகிகளிடமே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். நான் தங்கிய அறையை விட்டு வெளியே வர தயங்கினேன் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு. ஒரு அறைக்குள் முடங்கிக் கிடக்கவா இவ்வளவு தூரம் பயணம் செய்தேன். எனக்கு மிக இனிய அனுபவமாக அமைந்த ஒரு பயணம் குறித்த பொய்யான செய்திகளை பத்திரிகையாளர்கள் பரப்பி வருவது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. என்னை விருந்தினராக ஏற்று அன்போடு வரவேற்று உபசரித்து மகிழ்ந்த இந்திய மக்கள் இந்தச் செய்திகளை வாசித்து என்னைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்வார்களோ என்று அச்சப்படுகிறேன்.

என்னுடைய வெற்றிகரமான இந்தியப் பயணம் குறித்த தவறான தகவல்களை யாரும் நம்பிவிடக்கூடாது என்பதற்காகவே உடனடியாக உண்மை நிலை குறித்து இங்கே எழுதியிருக்கிறேன்”

இவ்வாறாக ஜாக்கிசான் தன் இணையத்தளத்தில் அதிரடியாக எழுதியிருக்கிறார்.

1 comments:

  1. Anonymous said...

    நள்ள பதிவு. நன்றி.