இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடிகர்களாவது ஒன்றும் புதியதல்ல. மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் கூட அவரது படத்தில் நடித்த நடிகர் ஒருவர் படப்பிடிப்புக்கு வர தாமதமானதால் அவரே கதாநாயகனாக நடித்தார் என்று கூறுவார்கள். ஏ.பி.நாகராஜன் போன்ற இயக்குனர்களும் அவர்களே இயக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவதுண்டு.
பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் என்று ”பா” வரிசை இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் தாங்களே நடித்து வெற்றிக் கொடி நாட்டியதும் உண்டு. பாரதிராஜாவும் ஆரம்பத்தில் 'கல்லுக்குள் ஈரம்' பட்த்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்பு இயக்கத்திலே முழு கவனம் செலுத்திக் கொண்டிருந்தவர் சமீபத்தில் 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.
சேரன், எஸ்.ஜே.சூர்யா, சுந்தர் சி ஆகியோரும் கதாநாயகர்களாக நடித்து இப்போது இயக்கத்தையே மறந்துவிட்டார்களோ என்று எண்ணும் நிலை இருக்கிறது. ப்ரவின் காந்தும் அவர் இயக்கும் படங்களில் ஆரம்பத்தில் சிறுசிறுவேடங்களில் நடித்து ‘துள்ளல்' படம் மூலமாக கதாநாயகன் ஆனார். சமீபத்தில் பருத்திவீரன் தந்த அமீரும் திடீரென கதாநாயகனாகி விட்டார். இயக்குனர் பேரரசு அவர் இயக்கும் படங்களில் அதிரடி வேடங்களில் கலக்கி வருகிறார். அவரும் கூட கதாநாயகனாக எப்போது வேண்டுமானாலும் ஒரு கலக்கு கலக்கலாம் என்ற நிலை நிலவுகிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே வெற்றிப்படங்களின் இயக்குனர் மிஷ்கினும் கதாநாயகன் ஆகப்போகிறார் என்ற ஒரு செய்தி பரபரப்பாக பரவிவருகிறது. உணவுப்பழக்கத்தில் கடுமையான டயட்டை மிஷ்கின் மேற்கொண்டிருப்பதால் இந்த செய்தி பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மிஷ்கினின் படங்களில் நடித்த நடிகர், நடிகையர் அனைவருமே மிஷ்கின் மிக சிறப்பாக நடிப்பு சொல்லித் தருவதாகவும், அவர் சிறந்த நடிகராக பரிணமிக்க முடியும் என்று பேட்டிகளில் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.
சூர்யாவுக்காக மிஷ்கின் உருவாக்கிய 'நந்தலாலா' திரைப்படத்தில் தான் மிஷ்கின் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சித்திரம் பேசுதடி திரைப்படத்துக்கு பிறகு மிஷ்கின் உருவாக்கிய இந்த கதை சூர்யாவை மிகவும் கவர்ந்திருந்தாலும், ஏற்கனவே பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் தர இயலவில்லை. அதன் பின்னர் சில புதுமுகங்களை வைத்து படத்தை எடுக்கலாம் என்று மிஷ்கின் திட்டமிட்டிருந்தார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிகர்கள் அமையவில்லை. எனவே அவரே நடித்துவிடுவார் என்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் மிஷ்கின் தன் வாயால் இந்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அவர் நடிக்கப் போவது உறுதியாகாது.
Tuesday, April 1, 2008
மிஷ்கினும் கதாநாயகன் ஆகிறார்?
Posted by PYRAMID SAIMIRA at 4/01/2008 11:29:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment