Thursday, October 4, 2007

மீண்டும் ஆயிரத்தில் ஒருவன்!


எம்.ஜி.ஆர் நடித்த வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களின் பெயர்களை மீண்டும் உபயோகிப்பது தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. சரத்குமாரின் "நம் நாடு"விற்குப் பிறகு பருத்தி வீரன் கார்த்தி நடிக்க செல்வராகவன் இயக்கும் படத்துக்கு "ஆயிரத்தில் ஒருவன்" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

"மாலைநேரத்து மயக்கம்" என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவந்த படம் இது. திடீர் மாற்றம் பெயரில் மட்டுமல்ல. கதாநாயகியும் மாற்றப்பட்டிருக்கிறார். காதல் சந்தியா கதாநாயகியாக இப்படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக ரீமாசென் நடிக்கிறார்.

படத்தின் பெயர், கதாநாயகி மட்டுமல்லாமல் லொகேஷனும் திடீரென்று மாற்றப்பட்டிருக்கிறது. மலேசிய காடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தார் செல்வராகவன். அங்கே அனுமதி கிடைக்காததால் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை கேரளா காடுகளில் நடத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

இன்னும் என்னவெல்லாம் இந்த படத்தில் மாறுமோ? பொன்விழா கண்ட பருத்திவீரனுக்கு பிறகு அந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள கார்த்தி கடுமையாக இந்தப் படத்துக்கு உழைத்து வருகிறார். புதுப்பேட்டை தோல்விக்கு பிறகு மெகாஹிட் தரவேண்டும் என்ற குறிக்கோள் செல்வராகவனுக்கும் இருக்கிறது.

ராம், பருத்திவீரன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பெரும் பாராட்டை பெற்ற ராம்ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். முதன்முறையாக தன் தோழர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு இல்லாமல் களமிறங்குகிறார் செல்வராகவன். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.

0 comments: