Tuesday, June 10, 2008

இன்சூரன்ஸ் செய்யப்படும் திரைப்படங்கள்!

நாம் டூவீலருக்கும், காருக்கும், வீட்டுக்கும், ஏன் நமக்குமே இன்சூரன்ஸ் செய்வது போல ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்வார்கள். படத்தில் இடம்பெறும் கலைஞர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ அல்லது படப்பிடிப்பு அரங்குகள் தீப்பிடித்தாலோ, இயற்கை சீற்றத்தால் சேதம் அடைந்தாலோ தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். இதுபோன்ற சில பிரச்சினைகளால் தொடங்கப்பட்ட பல படங்கள் நின்றுப் போனதும் கூட உண்டு.

தயாரிப்பாளருக்கு ஏற்படும் இந்த இழப்பை ஈடுகட்டவே ஹாலிவுட்டில் படம் தொடங்கப்பட்டதுமே தயாரிப்பாளர் விரும்பும் தொகைக்கு தன் படத்தை இன்சூரன்ஸ் செய்வார். எனினும் மற்ற இன்சூரன்ஸ் போல இல்லாமல் திரைப்பட இன்சூரன்ஸுக்கு கட்ட வேண்டிய ப்ரீமியம் மிக அதிகம்.

இப்பாணி இப்போது கோலிவுட்டுக்கும் இடம்பெயர்ந்திருக்கிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து விக்ரம் நடித்த அந்நியன் படத்துக்கு முதன்முதலாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. ரூ.27 கோடிக்கு அப்படத்தை இன்சூரன்ஸ் செய்திருந்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இதைத்தொடர்ந்து இப்போது அவரே தயாரித்திருக்கும் தசாவதாரம் திரைப்படத்தை ரூ.43 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார். ரஜினிகாந்த் நடிக்கும் குசேலன் திரைப்படத்தை பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். குசேலனில் பணியாற்றும் நடிக, நடிகையர் உட்பட சுமார் 200 தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சேர்த்து ரூ. 70 கோடிக்கு பாலிசி எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதுவரை இப்படத்துக்கு ரூ. 8 லட்சம் ப்ரீமியமாக மட்டுமே கட்டப்பட்டிருக்கிறதாம்.

ரஜினி அடுத்து நடிக்கும் ரோபோ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இதுவரை இந்தியத் திரைப்படங்களுக்கு செய்திராத பெரும் பொருட்செலவில் இத்திரைப்படத்தை எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். இப்படமும் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் எனத் தெரிகிறது.

0 comments: