Monday, August 27, 2007

சென்ஸார்லே ஒரு சீன் கூட கட் பண்ணலை.. - இயக்குனர் பத்மாமகன் பெருமிதம்!

தமிழ் வலைப்பதிவுகளுக்காக முதன்முறையாக தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் மனம் திறக்கிறார்.

'அம்முவாகிய நான்' திரைப்படத்தின் இயக்குனர் பத்மாமகன் எளிமையாக இருக்கிறார். வெள்ளந்தியாக சிரிக்கிறார். படம் குறித்த திரையுலகினரின், பத்திரிகையாளரின் பாராட்டு மழையினில் நனைந்து கொண்டிருந்தவர் நமக்கும் சில மணித்துளிகள் ஒதுக்கினார். "படம் நல்லா வந்திருக்கு" என்றதுமே "நன்றிங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்!" என்று கலாய்க்கிறார். முந்தைய தோல்விகளை 'தோல்வி' என்று தைரியமாக ஒப்புக் கொள்கிறார். லேசான தெற்றுப்பல் தெரிய மூச்சுக்கு முன்னூறு தடவை மனம் விட்டு சிரிப்பது பத்மாமகனின் சிறப்பு.

கேள்வி : கமர்சியல் படங்களாலே தமிழ்த் திரையுலகமே அதிருக்கிட்டிருக்கும் போது 'அம்முவாகிய நான்' ஏன்?

பத்மாமகன் : 'அம்முவாகிய நான்' கமர்சியல் படம் இல்லைன்னு யார் சொன்னது? அதிருக்கட்டும் கமர்சியல்னா என்ன?

கேள்வி : கமர்சியல்னா பைட்டு, பாட்டு, ஸ்டார் வேல்யூ...

பத்மாமகன் : அதாவது இண்ட்ரெஸ்டிங் பாயிண்ட் ஏதோ ஒண்ணு இருந்தா அது கமர்சியல். 'செக்ஸ்' ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான விஷயம் இல்லையா? அதை ஹேண்டில் பண்ணி படம் எடுத்தா அதுவும் கமர்சியல் தானே? தமிழ் சினிமாவிலே செக்ஸை நம்பி படம் எடுத்தவங்க யாரும் கெட்டதில்லை. ஆனாலும் ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ண வேண்டிய விஷயம். கரணம் தப்பினால் மரணம் என்கிறமாதிரி கொஞ்சம் வேற மாதிரியா எடுத்தாலும் ஆபாசமாகிட கூடிய வாய்ப்பிருக்கு. ஒரு கழைக்கூத்து ஆடும் தொழிலாளியின் லாவகத்தோடு இதை கையாள வேண்டியிருக்கு.

கேள்வி : புரியலை. யாரெல்லாம் 'செக்ஸை' ஹேண்டில் பண்ணி சினிமாவுலே சக்ஸஸ் ஆயிருக்காங்க?

பத்மாமகன் : எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து, பாக்யராஜ்... ஏன் நேற்றைய எஸ்.ஜே. சூரியா வரைக்கும் பெரிய வெற்றியாளர்கள் பட்டியல் இருக்கு. இதயக்கனி பார்த்திருக்கீங்களா? இலைமறை காய்மறையாய் செக்ஸை அழகாக காட்டியிருப்பாங்க. பாக்யராஜ்... சொல்லவே தேவையில்லை. முருங்கைக்காயை யாராவது மறந்துடமுடியுமா?

கேள்வி : முதல் படம் செம மசாலாவா எடுத்தீங்க? அடுத்து ஏன் பரிட்சார்த்த முயற்சி?

பத்மாமகன் : முதலில் நான் எடுக்க விரும்பிய படமே இதுதான். தயாரிப்பாளரும் இந்த கதையை கேட்டு தான் எனக்கு வாய்ப்பளித்தார். ஆனாலும் நம்மை நம்பி கோடிகளை முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கணும்னு நெனைச்சி 'பல்லவன்' எடுத்தேன். ஒவ்வொரு இயக்குனருமே நல்ல படம் கொடுக்கணும்னு தான் நெனைக்கிறோம். 'உட்டாலங்கடி படம்' கொடுக்க எங்களுக்கு என்ன வேண்டுதலா?

பல்லவன் தப்பான நேரத்துலே ரிலீஸ் ஆயிடிச்சி. வண்ணத்திரையிலே கூட "உட்டாலங்கடி படம் எடுத்திருக்கார் பத்மாமகன்" அப்படின்னு எழுதினாங்க. வேர்ல்டு கப் நேரத்துலே ரிலீஸ் பண்ணோம். அந்தப் படத்தோட தோல்விக்கு இதுமாதிரி நிறைய Factors இருக்கு. இருந்தாலும் அதே தயாரிப்பாளர் மறுபடியும் என்னை வெச்சி 'ராகவா' படத்துக்கு பூஜை போட்டாங்க. தனுஷ் ஹீரோ. எங்களோட கெட்ட நேரம் என்னென்னவோ நடந்துடுச்சி. அரை கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளருக்கு நஷ்டம். இருந்தாலும் அதே தயாரிப்பாளர் என் மேல நம்பிக்கை வெச்சி இந்தப் படம் எடுக்க வாய்ப்பு கொடுத்திருக்காரு. முந்தைய தோல்விகளையெல்லாம் ஈடுகட்டற மாதிரி இந்தப் படத்துலே அசலும் முதலுமா வசூலிச்சிடுவோம் இல்லே...

கேள்வி : 'அம்முவாகிய நான்' எப்படி வந்துருக்கு?

பத்மாமகன் : சென்சாருக்கு போட்டு காமிக்கறதுக்கு முன்னாடி 'ஏ' சர்ட்டிபிகேட் தான் கிடைக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் என்னை கூப்பிட்டு "The Best Film"னு பாராட்டி 'யூ/ஏ' சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. ஒரு சீன் கூட கட் பண்ணலை. எல்லாரும் பார்க்க வேண்டிய படம் இதுன்னு சொன்னாங்க. இதுவே பெரிய வெற்றி தானே?

'பல்லவன்' படத்தோட ப்ரிவ்யூ போட்டு காமிச்சப்ப பல பத்திரிகை நண்பர்கள் என்கிட்டே சொல்லிக்காம, கொள்ளிக்காம ஓடிட்டாங்க. இப்போ நீங்களே பாருங்க படத்தைப் பார்த்துட்டு ஒவ்வொரு பத்திரிகை நண்பரும் நேர்ல வந்து பாராட்டிட்டு போறாங்க. படம் நல்லா வந்துருக்குன்னு நம்பறேன்.

கேள்வி : உங்கள் நாயகன் பார்த்திபனும் நல்ல கிரியேட்டர். படம் எடுக்கறப்போ அவர் எங்காவது குறுக்கிட்டாரா?

பத்மாமகன் : நான் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன். எம்.ஜி.ஆருக்கு அப்புறமா பார்த்திபனை ரொம்பவும் பிடிக்கும். இப்படத்தில் ஒரு நடிகராக மிக நன்றாக அவர் பணியாற்றியிருக்கார். எந்த இடத்திலும் அவர் எதுவும் சொல்லலை. அப்படின்னா நான் ஒழுங்கா ஒர்க் பண்ணியிருக்கேன்னு அர்த்தம்.

அவரது இயல்புக்கு மாறான கதாபாத்திரம் இது. பார்த்திபன்னாலே நெறைய பேசுவார். நக்கல் அடிப்பார். இந்தப் படத்துலே அவருக்கு வசனங்கள் ரொம்ப கம்மி. பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து வெச்சி பேசுவார். படம் முடிஞ்சதுமே "ஒரு இங்க்லீஷ் படத்துலே நடிச்சி முடிச்சமாதிரி இருக்கு"ன்னு சொல்லி கைகொடுத்தார்.

கேள்வி : நீங்களே ஹீரோ மாதிரி தானே இருக்கீங்க? நீங்க நடிக்க வேண்டியது தானே?

பத்மாமகன் : இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்யா உடம்பை ரணகளமாக்கிடுறீங்க...

வடிவேலு ஸ்டைலில் சொன்னவர், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.

(சந்திப்பு : கருப்பு குதிரை, மாடசாமி)

5 comments:

 1. said...

  வெற்றி பெற வாழ்த்துவோம்!!!

 2. Anonymous said...

  //'செக்ஸ்' ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான விஷயம் இல்லையா? //

  இல்லையா பின்னே? :-))))))))))

 3. Anonymous said...

  உங்கள் லோகோ படங்களை ரசிக்க விடாமல் தடுக்கிறது. கடைசி படம் சூப்பர்.

 4. said...

  Thanks A lot for sharing this!

  Wish the film to be a grand success!!

 5. said...

  படம் சூப்பரா இருக்கு
  உங்க பதிவுல உள்ளத சொன்னேன்.

  ஹி ஹி ஹி