Thursday, August 30, 2007

அம்முவாகிய நான் - திரைவிமர்சனம்

ஒரு வில்லங்கமான கதையை கையில் எடுத்துக் கொண்டு எப்படி அதை வித்தியாசமாக, அழகாக கொடுக்க முடியும் என்பதை பத்மா மகன் அம்முவாகிய மகன் மூலமாக விளக்கியுள்ளார்.


பல்லவன் என்ற படத்தை இயக்கியவர்தான் பத்மா மகன். முதல் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைத் தரவில்லை. இருந்தாலும் சோர்ந்து விடாத பத்மா மகன், தனது காலத்துக்காக காத்திருந்தார். இப்போது அம்முவாகிய நான் மூலம் தனது முத்திரையைப் பதித்துள்ளார் - அழுத்தமாக.

அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் என கே.பாலச்சந்தர் போன பாதையில்தான் பத்மா மகனும் போயுள்ளார். ஒரு கமர்ஷியல் செக்ஸ் ஒர்க்கரின் கதைதான் அம்முவாகிய நான்.

புதுச்சேரியில் கதை ஆரம்பிக்கிறது. கெளரிசங்கர் (பார்த்திபன்) ஒரு எழுத்தாளர். பெண்களுக்கு எதிரான அநீதிகளை தனது பேனாவால் சுட்டெரிப்பவர். விபச்சாரப் பெண்களின் கண்ணீர்க் கதையை எழுத்தில் வடிப்பதற்காக ராணி மடத்திற்கு (விபச்சார விடுதியின் பெயர்) வருகிறார் கெளரி சங்கர்.

அங்குதான் அம்முவை (பாரதி) சந்திக்கிறார் கெளரி சங்கர். ராணி மடத்தில் வளர்ந்த, வயசுக்கு வந்த பின்னர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அனாதைப் பெண்தான் அம்மு.

அம்முவைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரது அழகு கெளரி சங்கரை திணறடித்து விடுகிறது. அம்முவின் அழகும், வெகுளித்னமும் அவருக்குப் பிடித்துப் போய் விடுகிறது. கதைக்காக வந்தவரின் இதயத்தில் அம்மு மீது காதல் பிறக்கிறது. அம்முவை தனது வாழ்க்கைத் துணைவியாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால் அம்முவுக்கு அதில் இஷ்டம் இல்லை. இப்படியே இருந்து விடுகிறேன் என்கிறார். "தினசரி ஒரே முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது ரொம்ப போர். இங்கிருந்தால் புதுப் புது நபர்களுடன் பழக்கம் கிடைக்கும், அந்த இனிய அனுபவமே போதும்" என்று காரணமும் கூறுகிறார்.

ஆனால் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் கெளரி சங்கர், அம்மு மீது கொண்ட பரிவை ஆழமாக்குகிறார். இது அம்முவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விபச்சாரத்திலிருந்து சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு அம்முவை மெல்ல மெல்ல இட்டுச் செல்கிறார்.

இப்படி ஒரு பக்கம் அம்முவை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டே மறுபக்கம், அம்முவாகிய நான் என்ற நூலையும் எழுதி முடிக்கிறார். தேசிய விருதுக்கும் அனுப்பி வைக்கிறார்.

அங்கு ஒரு வில்லங்கம். விருதுக் குழுத் தலைவரான மகாதேவன், அம்முவை ருசிக்க நினைக்கிறார். அம்முவை அணுகுகிறார். நீ எனக்கு வேண்டும். அப்படி நீ சம்மதித்தால், கெளரி சங்கர் நூலுக்கே விருது என்கிறார்.

இதுகுறித்து கெளரி சங்கருக்குத் தெரிவிக்காமல் யோசித்துப் பார்க்கிறார். பின்னர் மகாதேவனின் அழைப்பை ஏற்கிறார். அதன்படி மகாதேவனிடமும் செல்கிறார். படுக்கை வரை செல்லும் அவருக்கு அதற்கு மேல் போக முடியவில்லை. காரணம், கெளரிசங்கர், நீ தான் என் மனைவி என்று கூறியதால்.

அடுத்து என்ன நடக்கிறது, அம்மு என்ன ஆகிறார், கெளரி சங்கருக்கு அவர் கிடைத்தாரா என்பதுதான் படத்தின் மீதக் கதை.

மிக அழகான, நேர்த்தியான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் பார்த்திபன். கொடுத்த ரோலை உள் வாங்கிக் கொண்டு அழகாக வெளிக் கொண்டு வரும் கலையில் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபன்தான்.

இப்படத்தில் (முதல் முறையாக?) பேச்சைக் குறைத்திருக்கிறார் பார்த்திபன். பாடி லாங்குவேஜிலும், நடிப்பிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்த்திபனின் 20 ஆண்டு கால நடிப்பு வாழ்க்கையில் நிச்சயம் இப்படம் ஒரு முத்திரைப் படம் எனலாம்.

பல இடங்களில் வசனத்தைக் குறைத்து, காட்சிகளையே பேச வைத்துள்ளார் இயக்குநர். இது படத்திற்கு மேலும் உயிர்ப்பைக் கொடுத்துள்ளது.

புதுமுகமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பாரதி. மிக மிக சென்சிட்டிவான இந்த கேரக்டரை வெகு லாவகமாக செய்திருக்கிறார். ரசிக்க வைத்திருக்கிறார் - உடலை மட்டுமல்ல, நடிப்பையும்.

அபிஷேக், மகாதேவன், சாதனா, ராகசுதா ஆகியோரும் தங்களது கேரக்டர்களை திருப்தியாக செய்துள்ளனர்.

ஒரு விபச்சார வீட்டை இவ்வளவு அழகாக, ஆபாசமின்றி, ரசனையாக காட்டியிருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லலாம். அதற்காக எம்.எஸ்.பிரபுவின் கேமராக் கண்களுக்கு நன்றி சொல்லலாம். விபச்சாரத்தில் இருப்பவர்களும் கெளரவமானவர்களே என்ற ரீதியில் காட்சிகளில் கண்ணியம் காட்டியுள்ளனர்.

சபேஷ் - முரளியின் இசை படத்திற்கு உறுத்தலாக இல்லாமல், பலமாக உள்ளது.

உலகின் மிகப் பழமையான தொழிலை வைத்து அழகிய கவிதை படைக்க முயற்சித்துள்ளார் பத்மாமகன். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

(நன்றி : தட்ஸ்தமிழ்)