சாமானியன் சரித்திரமாக முடியுமா? என்ற கேள்விக்கு விடை ப்ரூஸ்லீ. ப்ரூஸ்லீ மறைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அவரது நினைவுகள் உலகெங்கும் வியாபித்திருக்கும் கோடிக்கணக்கான சண்டை ரசிகர்களின் நினைவலைகளில் அலைபுரண்டு ஓடுகிறது. இத்தனைக்கும் ப்ரூஸ்லீ கதாநாயகனாக நடித்து மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. அவரது தந்தையும் ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தே நிறைய படங்களில் தலைகாட்டியிருக்கிறார். அவரது பதினெட்டு வயதுக்குள்ளாகவே இருபது படங்களில் நடித்திருந்தார்.
ப்ரூஸ்லீயின் இன்னொரு பெயர் வேகம் எனலாம். சினிமாவில் ஒரு நொடிக்கு 24 ப்ரேம்கள் (24 அசையா படங்கள்) பயன்படுத்தப்படும். ப்ரூஸ்லீயின் சண்டை போடும் வேகத்துக்காக அவர் நடிக்கும் ஆக்சன் காட்சிகளில் நொடிக்கு 34 ப்ரேம்கள் பயன்படுத்தப்பட்டதென்றால் அறிவியலை மிஞ்சிய அவரது வேகத்தை நீங்கள் கணிக்கலாம்.
1940ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரின் சைனாடவுனில் பிறந்த ப்ரூஸ்லீ மூன்று வயதிருக்கும்போதே ஹாங்காங்குக்கு இடம்பெயர்ந்தார். அவரது இயற்பெயர் லீ ஜூன்பேன். அவரது பெயரை உச்சரிக்க முடியாத அமெரிக்க நர்ஸ் ஒருவர் ப்ரூஸ் என்று செல்லமாக அழைத்ததால் அதுவே அவரது இயற்பெயராக நிலைத்துவிட்டது.
சிறுவயதிலேயே தற்காப்புக் கலைகளில் கற்றுத் தேர்ந்த ப்ரூஸ்லீ அநீதியை எங்கு கண்டாலும் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவராக, ஒரு நிஜ ஹீரோவாகவே வளர்ந்தார். 1959ல் ஹாங்காங்கின் பிரபல கேங்க்ஸ்டர் ஒருவரின் மகனை நடு ரோட்டில் போட்டு பின்னி பெடலெடுத்ததால் ஹாங்காங்கின் நிழலுகம் ப்ரூஸ்லீயின் உயிரையெடுக்க வேட்டை நடத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு மீண்டும் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு உண்டானது. அமெரிக்கா சென்றவர் சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் நகரங்களில் தனது கல்வியினை தொடர்ந்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் படித்தார். இடையிடையே தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். நடித்தார் என்று சொல்வதை விட வில்லன்களை அடித்தார் என்பதே சரியானது.
தொலைக்காட்சித் தொடர்களிலும், சினிமாவிலும் ப்ரூஸ்லீ நடித்தபோது எதிரே சண்டையிடுபவரை உண்மையாகவே தாக்குவாராம். பலபேருக்கு பலமான அடிபட்டதும் உண்டு. அசுரத்தனமாக உடற்பயிற்சி செய்வது ப்ரூஸ்லீயின் பொழுதுபோக்கு. அதிவேகத்தில் ஐந்து அல்லது ஆறுமைல் தூரங்களை ஓடி அனாயசமாக கடப்பார். சுண்டுவிரல் மற்றும் கட்டைவிரலை மட்டும் தரையில் ஊன்றி மற்றவிரல்களை மடித்துவைத்து தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களின் பலத்தை கூட ப்ரூஸ்லீ பலப்படுத்தி இருந்தார்.
பல வருட கல்விக்கும், நடிப்பிற்கும் பின்னர் அமெரிக்காவிலிருந்து தன் தாய்நாடான ஹாங்காங்குக்கு 1970 வாக்கில் திரும்பினார். கோல்டன் ஹார்வெஸ்ட் என்ற புகழ்பெற்ற திரைப்பட நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். கோல்டன் ஹார்வெஸ்ட் தயாரிப்பில் ப்ரூஸ்லீ நடித்து வெளிவந்த 'பிக்பாஸ்' பரவலான வரவேற்பை மக்களிடையே பெற்றது. ஏற்கனவே திரைத்துறை மூலமாக இல்லாமலும் பாக்ஸிங் சேம்பியனாக ஹாங்காங் முழுக்க ப்ரூஸ்லீ அறியப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1972ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிஸ்ட் ஆப் ப்யூரி' ப்ரூஸ்லீயின் புகழை உலகமெல்லாம் ஒலித்தது. தன்னுடைய குருநாதரை கொன்றவர்களை சீடன் பழிவாங்கும் அரதப்பழசான கதை என்றாலும் முப்பதுக்கும் மேற்பட்ட சண்டை யுக்திகளை பயன்படுத்தி படத்தின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களுக்கு திகிலை ஏற்படுத்தும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. இதே ஆண்டு ப்ரூஸ்லீயே எழுதி இயக்கி நடித்த ‘வே டூ தி ட்ராகன்' திரைப்படம் வெளியானது. உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் கராத்தே நடிகரான சக் நாரிஸ்ஸுடன் ப்ரூஸ்லீ மோதும் க்ளைமேக்ஸ் காட்சி ரோமில் படமாக்கப்பட்டிருந்தது. இப்படம் தந்த வெற்றி ப்ரூஸ்லீக்கு படம் தயாரிக்கும் எண்ணத்தை விளைவித்தது எனலாம்.
அமெரிக்க திரைப்படம் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ‘எண்டர் தி ட்ராகன்' திரைப்படத்தை ப்ரூஸ்லீ உருவாக்கினார். படத்தின் ஒவ்வொரு ப்ரேமையும் பார்த்து பார்த்து செதுக்கினார். பிரம்மாண்டமான கண்ணாடி அறையில் இரும்புக்கை வில்லனுடன் ப்ரூஸ்லீ மோதும் காட்சி ரத்தத்தை உறையச் செய்யும் வகையில் அதிரடியாக படமாக்கப்பட்டது. பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற அதிரடி நடிகராக மலர்ந்த ஜாக்கிசானும் இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் தோன்றினார்.
படம் வெளிவர மூன்றுவாரம் இருந்த நிலையில் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபதாம் தேதி மர்மமான முறையில் தனது 33வது வயதில் மரணமடைந்தார். தலைவலிக்காக தூக்கமாத்திரை போட்டவர் கோமா நிலைக்கு சென்று ஹாங்காங்கின் குயின் எலிசபெத் மருத்துவமனையில் மரணமடைந்ததாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்த உண்மை ப்ரூஸ்லீயோடே புதைக்கப்பட்டது.
ப்ரூஸ்லீயின் மரணத்துக்குப் பின்னர் வெளியாகிய 'எண்டர் தி ட்ராகன்' திரைப்படம் பிரும்மாண்டமான வெற்றியை பெற்றது. இனிமேலும் ப்ரூஸ்லீயை காணமுடியுமா என்று பார்த்தவர்களே பலமுறை திரும்ப திரும்ப பார்த்தார்கள். அமெரிக்காவில் மட்டுமே அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் 850,000 டாலர்கள் வசூலானது. மொத்தத்தில் இருநூறு மில்லியன் டாலர்களை உலகளவில் வசூலித்தது.
அவரது மகனான பிராண்டன் லீயும் தந்தையைப் போலவே திரையுலகில் நடிகராக பரிணமித்தார். வளர்ந்து வந்த நேரத்தில் 'தி க்ரோ' என்ற படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட துப்பாக்கி விபத்தில் (துப்பாக்கியில் டம்மிக்கு பதிலாக ஒரிஜினல் தோட்டாக்களை யாரோ வைத்ததாகவும் சொல்கிறார்கள்) 28 வயதிலேயே மரணமடைந்து விட்டார். ப்ரூஸ் லீ குடும்பத்தின் சோகம் தொடர்கதை ஆனது.
தான் கற்ற கலையை நேசித்து அதற்கு தகுந்த மரியாதை அளித்த மாபெரும் கலைஞனான ப்ரூஸ்லீக்கு பின்னர் அவரது இடம் இன்னமும் காலியாகவே இருக்கிறது. அவரது மகனாலும் அவரது இடத்தை நிரப்ப இயலவில்லை. குங்பூ கலையில் புதிய நுணுக்கங்களை புகுத்தியவர் என்பதால் அவரது பாணி குங்பூ ‘ப்ரூஸ் லீ குங்பூ' என்று அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. முப்பது ஆண்டுகளிலேயே உலகப்புகழ் பெற்ற அவர் இன்னமும் சில ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்திருப்பாரேயானால் திரையுலகிலும், தற்காப்பு கலையிலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியிருப்பார் என்பது நிச்சயம்.
Tuesday, February 5, 2008
ப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்!!
Posted by PYRAMID SAIMIRA at 2/05/2008 11:26:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
Excellent Article! Thanks
சூப்பர்மா ! இதே போல உலக சினிமா பற்றிய விஷயங்களை உங்களது வலைப்பதிவில் எதிர்பார்கிறோம்.
ப்ரூஸ் லீ பற்றிய பல கதைகள் உண்மையல்ல.
அவரைவிட வேகமாக சண்டைபோடக்கூடியவர்கள் அவர் காலத்திலும் உண்டு.
ஜெட் லீ ப்ரூஸ் லீயை விட வேகமாகச் சண்டை போடக்கூடியவர்.
ஆனால், அவருக்காக 34 ப்ரேம்கள் போன்ற கதைகள் ஏற்படவில்லை.
லீ பெரிதாக எந்த காம்படிஷன்களிலும் கலந்து கொள்ளவில்லை என்று எங்கள் மாஸ்டர் கூறுவார்.. ஒரு முறை அவருக்கு ட்ரெடிஷனல் மார்சியல் ஆர்ட்ஸ் மாஸ்டர்கள் சேர்ந்து ஒரு சவாலுக்கு அழைத்தார்களாம்.. அப்போது எதிராளி லீ-யின் முன் 'பௌ' செய்த நேரமாக பார்த்து அடித்து வீழ்த்தினாராம்.. பின்னர் கேட்ட போது எப்போது தயார் நிலையில் இருப்பதே ஒரு வீரனுக்கு அழகு என்று விளக்கம் கொடுத்ததாகவும் சொல்வார்கள்..
ஒரு வீடியோவில் நான் பார்த்தது - லீ தனது ஆட்காட்டி விரலாலேயே ஒருவனை அடித்து வீழ்த்தியிருந்தார் அதில்..
எனக்குத் தெரிந்து லீ பற்றி சொல்லப்படும் பல தகவல்கள் உணமையும் பொய்யும் கலந்தது.. அவர் இப்போது வரலாறு அல்ல - ஒரு 'மித்' அவ்வளவே!! ஆயினும் தற்காப்பு கலைகள் பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் லீ-யின் திரைத் தோற்றத்திற்குப் பின் தான் பரவலாக ஏற்பட்டது - அந்த வகையில் அவர் என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர் தான்
-R.K