Saturday, February 23, 2008

சென்னையில் மகளிர் திரைப்பட விழா!

இந்தோ - கொரியன் கலாச்சார மற்றும் தகவல் நிறுவனம், தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் (NFDC), NFAI, இந்திய திரைப்பட விழா இயக்ககம் மற்றும் சத்யம் சினிமாஸ் ஆகியவை இணைந்து மகளிர் திரைப்பட விழா ஒன்றினை நடத்த திட்டமிட்டிருக்கின்றன.

தொடக்க விழா மார்ச் 1 அன்று சென்னை சத்யம் சினிமாஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. பிரபல திரைப்பட நடிகை நந்திதா தாஸ் துவக்கி வைக்கிறார். இந்தியா, கொரியா, நார்வே, ஈரான் ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட 84 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இவற்றில் 83 படங்கள் மகளிரால் இயக்கப்பட்டவை. 'மேகதேக தாரா' என்ற ஒரு திரைப்படம் மட்டும் வங்காள மொழி ஆண் இயக்குனரான ரித்விக் கடாக் என்பரால் இயக்கப்பட்டது.

இந்த 84 திரைப்படங்களில் சுஹாசினி மணிரத்தினம் இயக்கிய இந்திரா, சாரதா ராமநாதன் இயக்கிய ‘சிருங்காரம்', ஜானகி விஸ்வநாதன் இயக்கிய ‘கனவு மெய்ப்பட வேண்டும்' ஆகிய தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களை காண விரும்புபவர்கள் பிப்ரவரி 27 முதல் சத்யம் சினிமா வளாகத்தில் விற்கப்படும் அனுமதிச்சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். சத்யம் காம்ப்ளக்ஸ் மற்றும் பிலிம்சேம்பர் தியேட்டரில் இப்படங்கள் திரையிடப்படும்.

0 comments: