Thursday, February 21, 2008

அமீர்கானுக்கு மொட்டை!


வட இந்தியாவின் கமல்ஹாசன் என்று மும்பை மீடியாக்களால் புகழப்படும் அமீர்கான் வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் தயாரித்து நடித்த லகான் ஆஸ்கர் விருதுவரை சென்றதால் இனி வித்தியாச முயற்சிகளை மட்டுமே மேற்கொள்வேன் என்று அறிவித்திருந்தார்.

கடைசியாக அமீர் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளிவந்த 'தாரே ஜமீன் பர்' சர்வதேச அளவில் அமீருக்கு நல்ல பெயரை தந்திருக்கிறது. ஹிந்தி சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்தும் கூட ஒரு சிறுவனுக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இருந்தும், இமேஜ் பற்றி கவலைப்படாமல் 'கதை தான் முக்கியம்' என்று கூறி நடித்திருந்தார். எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ, அதே கதாபாத்திரமாக வாழ்வது என்பதை தன் கொள்கையாக வைத்திருக்கிறார் அமீர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்த “மொமெண்டோ” திரைப்படத்தை தழுவி தமிழில் கஜினியை எடுத்தார் இயக்குனர் முருகதாஸ். வசூல்ரீதியாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற கஜினி சூர்யாவுக்கு தமிழில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படத்தை பார்த்து பெரிதும் கவரப்பட்ட அமீர், அப்படத்தை ஹிந்தியில் தயாரித்து தானே நடித்து வருகிறார்.

தமிழில் இயக்கிய முருகதாஸே ஹிந்திப்படத்தையும் இயக்கிவருகிறார். கதாநாயகியாகவும் அதே அசின். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதாநாயகன் மொட்டைத்தலை கெட்டப்புடன் வரவேண்டி இருந்தது. இதற்காக சூர்யா தமிழில் மொட்டையெல்லாம் போடவில்லை. ஒப்பனை மூலமாக சமாளித்தார்.

ஆனால் கதாபாத்திரத்தோடு ஒன்றிவிடவேண்டும் என்று நினைக்கும் அமீர்கானோ கட்டாயம் மொட்டைப் போட்டே நடிப்பேன் என்று அறிவித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்த ஷெட்யூலில் அமீர்கான் மொட்டைத்தலையுடன் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு அமீர் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

0 comments: