Monday, February 25, 2008

ஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்!!


பலமொழிகளில் படங்கள் இயக்கும் இயக்குனர்களில் எந்த மொழிக்கு போனாலும் சொல்லிக் கொள்கிற வெற்றி பெற்றவர்கள் மிகக்குறைவே. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் தான் செல்லும் மொழிகளிலெல்லாம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அவர் இயக்கும் படங்கள் அனைத்துமே தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே பல கோடிகளுக்கு விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கை.

கேப்டன் விஜயகாந்த் படங்களிலேயே வித்தியாசமானதாகவும், வசூலில் சக்கை போடு போட்டதும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ”ரமணா”. அதுபோலவே தெலுங்கில் சிரஞ்சீவியை முருகதாஸ் இயக்கிய “ஸ்டாலின்” படைத்த சாதனை எந்த தெலுங்குப்படமும் எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறது. “ஸ்டாலின்” படத்தின் முதல் மூன்று நாள் வசூல் இன்றுவரை பெரிய சாதனை.

சூர்யாவுக்காக தமிழில் முருகதாஸ் இயக்கிய “கஜினி” பெரும் விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்றுத் தீர்ந்தது மட்டுமன்றி, வெளியான பின்பு ரசிகர்களின் பேராதரவோடு எல்லாத் தரப்புக்கும் நல்ல லாபத்தை தந்த படம். அதே படம் இந்தியில் ஆமிர்கான் தயாரிப்பில், அவரே நடிக்க முருகதாஸால் இயக்கப்பட்டு வருகிறது.

இன்னமும் படப்பிடிப்பு முடியாத நிலையில் இந்தி “கஜினி” 90 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தர்களிடம் விற்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்திய சினிமாவிலேயே இது ஒரு மகத்தான சாதனை. சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஷாருக்கின் “ஓம் சாந்தி ஓம்” திரைப்படம் 73 கோடிக்கு விற்றதே பெரியசாதனையாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் “கஜினி” 90 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படங்களுக்கு இருக்கும் இதுபோன்ற மிகப்பெரிய வணிக சாத்தியம், எதிர்காலத்தில் அவர் அமிதாப், ரஜினி போன்றவர்களை இயக்க ஏதுவாக இருக்கும் என்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் மிக அருமையான மிமிக்ரி கலைஞர் என்பது பலருக்கு தெரியாது. கிருபானந்த வாரியாரின் குரலை அச்சு அசலாக மிமிக்ரி செய்வாராம். கல்லூரிக் காலத்தில் மேடைகளில் தோன்றி மிமிக்ரி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். ரமணா படத்தில் இடம்பெறும் கல்லூரி மாணவர்களின் கதாபாத்திரங்களுக்கு தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் பெயரை சூட்டி தனது கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: