Tuesday, February 12, 2008

ஜோதா அக்பர் - சில தகவல்கள்!


காதல் என்றாலே அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட். ஆதாரமில்லாத கற்பனை காதல்களை சிலாகித்து பேசும் நாம் வரலாற்றில் நடந்த உண்மை காதலை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அப்படி உலகுக்கு தெரியாமல் மறைத்துவைக்கப்பட்ட காதல் மாமன்னர் அக்பர் - ஜோதாபாய் காதல்.

இந்தியில் முகல்-இ-ஆஸம் திரைப்படத்துக்கு பிறகு மிக விரிவாக முகலாயர்களை பற்றி பேசப்போகும் திரைப்படம் ஜோதா அக்பர். பிரம்மாண்டமான பொருட்செலவில் மிக விரைவில் வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தில் அக்பராக நடிப்பர் ஹிருத்திக் ரோஷன். அக்பரின் மனைவி ஜோதாபாய் வேடத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய். லகான் திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பேசப்பட்ட இயக்குனர் அசுதோஷ் கோவாரிகர் இப்படத்தை இயக்குகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முகலாய ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ள சில நுணுக்கமான அரசியல் முடிவுகளை எடுக்கிறார் மாமன்னர் அக்பர். வீரத்தால் வெல்லமுடியாத இராஜபுத்திரர்களை பாசத்தால் வெல்ல முடிவெடுப்பதும் அதில் ஒன்று. ராஜபுத்திர மன்னரான ராஜா பர்மலின் மகளான ஜோதாபாயை மணமுடித்து ராஜபுத்திரர்களுக்கு மருமகனாவதின் மூலமாக அவர்களின் எதிர்ப்பை நீர்த்துப் போக செய்கிறார்.

அக்பர் - ஜோதாபாய் திருமணம் முடிந்தபின்னர் முகலாய அரசவையில் இந்துக்களின், இராஜபுத்திரர்களின் கரம் ஓங்குகிறது. அக்பரின் முக்கிய அமைச்சராக ஜோதாபாயின் உறவினர் மான்சிங் நியமிக்கப்படுகிறார். ஜோதாபாயின் அந்தரங்க அரண்மனை முழுக்க பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்படுகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த முகலாயர்களின் அரண்மனையில் கிருஷ்ணஜெயந்தி, தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அரசவைக்கு வரும் மாமன்னர் அக்பர் நெற்றில் குங்குமத்தோடு வருகிறார்.

இந்த வண்ணமயமான வரலாற்றுப் பின்னணியில் மாமன்னர் அக்பருக்கும், பேரரசி ஜோதாபாய்க்கும் இடையே இருந்த அழுத்தமான காதலை கருப்பொருளாக்கி 'ஜோதா அக்பர்' திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு : 'ஜோதாபாய்' என்ற பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைச்செருகல் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு. அவரது இயற்பெயர் ஹீராகன்வாரி. திருமணத்துக்குப் பிறகு மரியம்-உஸ்-ஜமானி என்று மாற்றிக் கொண்டார்.

0 comments: