பொழுதுபோக்குத் துறையில் உலக அளவில் மிக வேகமாக வளர்ந்துவரும் இந்திய நிறுவனம் பிரமிட் சாய்மீரா. பிரமிட் சாய்மீரா குழும நிறுவனங்களின் ஒரு அங்கமான பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் பல்வேறு உலக மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து வருகிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பிலும் கால்பதித்து, வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் சிம்ரனை சின்னத்திரைக்கு அழைத்து வருகிறது பிரமிட் சாய்மீரா. நிகழ்ச்சியின் பெயர் “சிம்ரன் திரை”. சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரமிட் சாய்மீரா வழங்கப்போகும் ‘ஸ்பெஷல் ட்ரீட்' இது.
இதுபற்றி பிரமிட் சாய்மீரா குழுமத்தின் நிர்வாக இயக்குனரான திரு பி.எஸ்.சாமிநாதன் கூறியதாவது : “தொலைக்காட்சிகளில் அரதப்பழசான நிகழ்ச்சி வடிவங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இன்று இருக்கிறது. இல்லையேல் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் பார்வையாளரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். ஏற்கனவே பெண்களை வில்லிகளாக சித்தரித்து, எந்தப் புதுமையும் இல்லாமல் கதைகளை மட்டும் வளர்த்துக் கொண்டே செல்லும் போக்கு மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த வழக்கமான போக்கினை மாற்றும் தொடராக எங்கள் தொடர் அமையும். நல்ல கதைகளை புதுமையான சிந்தனையில், தரமான தொழில் நேர்த்தியில் வழங்கப் போகிறோம். இதன் மூலமாக இன்னமும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகிறோம். தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே இனி தொலைக்காட்சிகளில் இடம்பிடிக்க எங்களது ‘சிம்ரன் திரை' முன்னோடி நிகழ்ச்சியாக விளங்கும்”
பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் லிமிடெட்டின் இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான திரு. கே.எஸ்.சீனிவாசன் கூறியதாவது: “சிம்ரனோடு பணிபுரிந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிம்ரன் கதாநாயகியாக வரவேண்டுமென்று மக்களே எஸ்.எம்.எஸ். மூலமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சிலகாலம் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிம்ரன் ஒதுங்கியிருந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை சினிமாத்துறையினராலும், ரசிகர்களாலும் நன்கு உணரமுடிந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், இப்போது எங்களோடு இந்த தொடரில் பணியாற்றிட சிம்ரன் ஒப்புக்கொண்டது பெருமகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்த தொடர் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, ரசிக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்”
தொடர்பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனத்தின் ‘கிரியேட்டிவ் ஹெட்' திருமதி. சுபா வெங்கட், “மாதந்தோறும் ஒரு புதிய கதையை இந்நிகழ்ச்சியில் காணமுடியும். மொத்தம் பண்ணிரெண்டு வித்தியாசமான கதைகள் ஓராண்டில் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை ஜெயா டிவியில் மார்ச் மூன்றாம் தேதி முதல் தினமும் இரவு 8.30 மணியிலிருந்து 9.00 மணி வரை காணலாம். சிம்ரன் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் இன்றைய நவீனப்பெண்களின் வெவ்வேறு பரிமாணங்களை பிரதிபலிப்பதாக அமையும். சிம்ரன் திரையின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இயக்குநரால், வெவ்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்படும். சினிமாவுக்குரிய பிரம்மாண்டத்தை சின்னத்திரையிலேயே இத்தொடர் மூலமாக ரசிகர்களால் உணரமுடியும். ஒவ்வொரு மொழியிலும் தினமும் இரண்டுமணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் இலக்கை பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.”
பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘வண்ணத்துப்பூச்சி' கதை முதல் மாத தொடராக எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை இயக்குபவர் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா. ஏ.ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.குமரேசன் திரைக்கதை அமைத்திருக்கிறார். பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனத்தின் ‘கிரியேட்டிவ் ஹெட்' சுபா வெங்கட் வசனம் எழுதியிருக்கிறார்.
திரையுலகிலும், சின்னத்திரையிலும் பிரபலமான கதாசிரியர்கள், இயக்குனர்கள், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை சிம்ரன் திரைக்கு பயன்படுத்த பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த வித்தியாசத் தொடருக்கான இரண்டாவது கதை ஸ்ரீப்ரியாவால் எழுதப்படுகிறது. இயக்கப் போகிறவர் வெள்ளித்திரைக்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன்.
ரமேஷ் வினாயகம் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழில் சின்மயி குரலில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்தொடரின் டைட்டில் பாடல் பெரிதும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடலுக்கு நடன இயக்குனர் தினேஷ் நடனம் அமைத்திருக்கிறார். இதுவரை மெகாசீரியல் டைட்டில் மரபுகளை உடைத்து, நிகழ்ச்சியை காணும் ஒவ்வொரு பார்வையாளரையும் வசீகரிக்கும் வகையில் டைட்டில் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான பிரத்யேக விளம்பரங்கள் ஏற்கனவே ஜெயா டிவியில் ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருவதால் நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் ஆவலாக இருக்கின்றனர்.
சிம்ரன் திரை சிலீர் ஸ்டில்களை இங்கே காணலாம்!
Thursday, February 28, 2008
சின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை!
Posted by PYRAMID SAIMIRA at 2/28/2008 04:07:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment