Friday, February 8, 2008

தியேட்டர் ரவுண்டப் - காஞ்சிபுரம்

வரலாற்று புராதனப் பிரசித்தி பெற்ற கோயில் நகரம், பட்டுக்கு பெயர் போன ஊர், இந்த ஊருக்கு வந்தால் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நகரம் காஞ்சிபுரம். காஞ்சிபுரத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்கள் தவிர்த்து தீம்பார்க், பீச் போன்ற மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பொழுதுபோக்குக்கு ஒரே வழி சினிமா. நகரம் என்று சொன்னாலும் கூட நகரத்துக்கான அடையாளங்கள் காஞ்சிபுரத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே முடிந்துவிடுகிறது.

அதைத் தாண்டி பார்த்தோமானால் முழுக்க முழுக்க அக்மார்க் கிராமங்கள். சொந்த ஊர் கீழ்க்கதிர்பூர் என்றாலும் கூட உங்க ஊரென்ன? என்று கேட்டால் ‘நான் காஞ்சிவரத்துக்காரன்!' என்று நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லுகிறார்கள். காஞ்சியை சுற்றியிருக்கும் நூற்றுக்கணக்கான கிராமத்தவர்களும் காஞ்சி தான் தங்கள் மண் என்கிறார்கள். காஞ்சியின் மக்கள் தொகை குறைவென்றாலும் கூட floating population என்று சொல்லக்கூடிய நகருக்கு வந்து செல்லும் மக்கள் அதிகம்.

காஞ்சிபுரத்தின் பேருந்து நிலையம் எப்போதும் கசகசவென்று நெரிசலாகவே இரவு பத்து மணி வரை இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் மாலைக்காட்சி அல்லது இரவுக்காட்சி மட்டுமே தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறார்கள். வாரவிடுமுறை நாட்களில் சிறப்பு காலைக்காட்சியை காண கூட்டமாக வருகிறார்கள், சனி-ஞாயிறு மட்டும் தினமும் ஐந்து காட்சிகள். பெண்கள் தியேட்டருக்கு வந்து சினிமா பார்ப்பதில்லை. ஆண் துணை இருந்தால் மட்டுமே அரிதாக தியேட்டர்களுக்கு வருகிறார்கள்.

சென்னையில் பகல் காட்சி 11.30, 12.15 அல்லது 1 மணிக்கு தொடங்கும். மாறாக காஞ்சிபுரத்தில் காலை 10.30 மணிக்கே எல்லா தியேட்டர்களிலும் காலை காட்சி தொடங்குகிறது. தமிழில் ரிலீசாகும் எல்லாப் படங்களுமே கண்டிப்பாக காஞ்சிபுரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. நேரடி ஆங்கிலப்படங்களுக்கு வரவேற்பு குறைவு. ஆனால் அவற்றை தமிழில் டப்பிங் செய்து திரையிட்டால் கூட்டம் வருகிறது. சென்னை நகரைப் போன்று திரையரங்கு கட்டணங்கள் அதிகமாக இருக்காது, ”கட்டணம் ரூ.10” “கட்டணம் ரூ.15” என்று படத்தின் போஸ்டரிலேயே கட்டணவிபரத்தை ஒட்டுகிறார்கள்.

சென்னையைப் போல ஐம்பது நாள், நூறு நாளெல்லாம் திரைப்படங்கள் இங்கே ஓடுவது அபூர்வம். சந்திரமுகி போல சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் படங்கள் மட்டுமே அவ்வளவு நாளுக்கு தாக்குப் பிடிக்கிறது. ஆயினும் நான்கு வாரங்களுக்கு சிரமமில்லாமல் படங்கள் ஓடுகிறது. க்யூப் சிஸ்டம் என்று அழைக்கப்படும் டிஜிட்டல் ஒளிபரப்பு மிகத் தெளிவாக இருப்பதால் சினிமா ரசிகர்கள் காஞ்சியில் இப்பொதெல்லாம் க்யூப் சிஸ்டத்தில் திரையிடப்படும் திரையரங்குகளாக பார்த்து படம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கிராமத்து சினிமா ரசிகனாக இருந்தாலும் டி.டி.எஸ். வசதி அரங்கில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பின்பே தியேட்டருக்கு வருகிறான். காஞ்சி நகரின் சில திரையரங்குகளை சுற்றிவருவோமா?


கார்த்திகேயன்

பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையிலும், நகராட்சி அலுவலகத்துக்கு எதிரிலும் அமைந்திருப்பதால் இத்திரையரங்குக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம். பெரிய திரைப்படங்கள் ரிலீசாகும் தியேட்டர். இப்போது 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திரமுகி இங்கு நூறுநாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்திருக்கிறது. காஞ்சி நகரவாசிகளை விட நகருக்கு வந்து போகும் மற்ற மக்களே இத்திரையரங்குக்கு அதிகமாக வருகிறார்கள். டி.டி.எஸ்., க்யூப் ஸ்க்ரீனிங் போன்ற நவீன வசதிகள் உண்டு.


பாபு காம்ப்ளக்ஸ்

பேருந்து நிலையத்திலிருந்து கொஞ்சம் தூரம் என்றாலும் எப்போதும் புதுப்படங்களே ஓடிக்கொண்டிருப்பதால் காஞ்சி மக்களின் செல்லப்பிள்ளை இந்த காம்ப்ளக்ஸ். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவது ஒரு புதுப்படத்தை இந்த காம்ப்ளக்ஸில் காணலாம். மூன்று தியேட்டர்கள் இருப்பதால் ‘ஹவுஸ்புல்' பிரச்சினை இல்லாமல் கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் இங்கே பார்க்கமுடியும் என்பதால் எப்போதும் கூட்டம் அதிகம். காஞ்சி நகரவாசிகளும், சுற்றியிருக்கும் கிராமவாசிகளும் அதிகமாக இத்திரையரங்குக்கு வருகிறார்கள். பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்துப் போகும் தூரமென்பதால் வெளியூர்காரர்கள் அதிகம் வருவதில்லை.டி.டி.எஸ்., க்யூப் ஸ்க்ரீனிங் போன்ற நவீன வசதிகள் உண்டு.


அருணா காம்ப்ளக்ஸ்

காஞ்சியின் காய்கறி சந்தையான ராஜாஜி சந்தைக்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் மிகப்பெரிய தியேட்டர் காம்ப்ளக்ஸ். அருணா, பால அருணா, சிவ அருணா என்று மூன்று தியேட்டர்கள். நல்ல விசாலமான இடத்தில் செட்டிநாடு பங்களாக்கள் போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கிறது. பாபு காம்ப்ளக்ஸைப் போலவே இங்கேயும் எப்போதும் புதுப்படங்களைப் பார்க்கலாம். மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இத்தியேட்டருக்கு இரவுக்காட்சிக்கு கண்டிப்பாக வந்துவிடுவார்கள். பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தொலைவிலேயே இருக்கிறது. டி.டி.எஸ்., க்யூப் ஸ்க்ரீனிங் போன்ற நவீன வசதிகள் உண்டு.


பாலசுப்பிரமணியா காம்ப்ளக்ஸ்

அருணா காம்ப்ளக்ஸுக்கு அடுத்த தெருவிலேயே, மார்க்கெட்டை ஒட்டி அமைந்திருக்கும் காம்ப்ளக்ஸ். சில காலம் முன்பு வரை ஆங்கிலப் படங்களே அதிகமாக வெளியிடப்பட்டு வந்ததால் இந்த தியேட்டருக்கு தாய்க்குலங்கள் வருவது அரிது. இப்போது சமீபகாலமாக ஒன்பது ரூபாய் நோட்டு, வேல் போன்ற படங்கள் ஷிப்டிங் முறையில் போடப்படுவதால் பெண்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. பாலசுப்ரமணியன், பாலசுப்ரமணியன் டீலக்ஸ் என்று இரண்டு திரையரங்குகள். இரண்டிலுமே டி.டி.எஸ். வசதி இருக்கிறது. க்யூப் சிஸ்டம் மிக விரைவில் ஏற்படுத்தப்பட போகிறது.

நகரின் இந்த பிரபலமான திரையரங்குகள் அனைத்துமே பிரமிட் சாய்மீரா குழுமத்தினரால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: