Thursday, February 14, 2008

காதலர் தினம்!


இந்தியாவில் இணையம் அவ்வளவாக பிரபலமடையாத 1999 காலக்கட்டத்தில் இணையத்தில் ஏற்படும் நட்பு காதலாக மாறுவதைப் போன்ற வித்தியாசமான கதையமைப்போடு வெளிவந்த திரைப்படம் காதலர் தினம். குணால் கதாநாயகனாக நடிக்க சோனாலி பிந்த்ரே கதாநாயகியாக நடித்திருந்தார். நாசர், மணிவண்ணன், கவுண்டமணி, சின்னிஜெயந்த் ஆகியோரும் நடித்திருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிர் இயக்கினார்.

ஏப்ரல் 1999ல் வெளிவந்த இத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன பாடல்கள் முக்கியக் காரணம். “ரோஜா, ரோஜா” பாடல் என்றைக்குமே காதலர்கள் மத்தியில் எவர்க்ரீன் ஹிட் ஆன பாடல். என்னவிலை அழகே, தாண்டியா ஆட்டம், காதலெனும் தேர்வெழுதி என்று எல்லாப் பாடல்களுமே பரவலாக கேட்கப்பட்ட, பாராட்டப்பட்ட பாடல்கள். 'தாஜ்மகாலுக்கு முன்பாக ரோஜாத் தோட்டம்' என்ற அதீதமான அழகான கற்பனை இயக்குனர் கதிருக்கு கிராபிக்ஸ் துணையாலும், கலை இயக்குனர்களின் உழைப்பாலும் சாத்தியமானது. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் நினைவுகூறப்படும் திரைப்படமாக ‘காதலர் தினம்' இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி வருடத்தில் வெளிவந்த படம் என்பதால், மில்லெனியத்தை (இருபத்தொன்றாம் நூற்றாண்டை) வரவேற்கும் விதமாக ஒரு பாடல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழில் முன்னணியில் இருந்த நடிகை ரம்பா இந்தப் பாடல் காட்சியில் மட்டும் சிறப்பு நடனம் ஆடியிருந்தார். முகம் பார்க்காத இணைய காதல், அக்காதலை தன் வாழ்க்கைக்கு வழிகாட்டியவருக்காக தியாகம் என்று பலவித திருப்பங்களோடு அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

தமிழில் பெரும் வெற்றி பெற்றதால் இத்திரைப்படம் இந்தியிலும் ”தில் தில் ஹேய் மெய்ன்” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மணிவண்ணனுக்கு பதிலாக அனுபம் கெரை நடிக்க வைத்து மீண்டும் படமாக்கினார்கள். இதுபோலவே கவுண்டமணிக்கு பதிலாக ஜானிலீவர் என்பவரை நடிக்கவைத்து நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் படமாக்கினார்கள். இந்தியில் 2000ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது. ஆயினும் எதிர்பார்த்த வெற்றியை இந்தியில் இத்திரைப்படம் பெறத் தவறியது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்த குணால் கடந்த 7ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார் என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு சோகம்.

2 comments:

  1. said...

    //இப்படத்தில் கதாநாயகனாக நடித்த குணால் கடந்த 7ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார் என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு சோகம்//

    But, the good news is heroin Sonali is still alive....

    BTW, I heared Pyramid Saimeera is doing some short films in Tamil...is it so?
    b4 that, how could i confirm u r the real pyramid saimeera?

  2. said...

    //b4 that, how could i confirm u r the real pyramid saimeera?'//

    Check our website www.pstl.in, there you can find a link to our all regional language blogs.