Tuesday, February 26, 2008

அமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது!!


ஹாலிவுட்டுக்கு எப்படி ஆஸ்கர் விருதோ அதுபோல பாலிவுட், டோலிவுட், கோலிவுட்டுக்கெல்லாம் பிலிம்பேர் விருது. இந்தியாவின் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்ததாக பிலிம்பேர் விருதுக்கு கவுரவம் அதிகம்.

சென்ற வருட இந்திப் படங்களுக்கான பிலிம்பேர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கான் நடித்த “சக் தே இந்தியா” சிறந்தபடமாகவும், அப்படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும் ”சக் தே இந்தியா” தட்டிச் சென்றிருக்கிறது.

அமீர்கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்” திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய விருதுகளை அள்ளியிருக்கிறது. இப்படம் சர்வதேச அளவில் பேசப்பட்டிருப்பதால் சர்வதேச விருதுகள் சிலவற்றையும் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

”ஜாப் வே மெட்” திரைப்படத்தில் நடித்ததற்காக கரீனாகபூருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டிருக்கிறது. சாவரியா படத்தில் அறிமுகமான ரன்பீர் கபூர், ”ஓம் சாந்தி ஓம்” படத்தில் அறிமுகமான தீபிகா படுகோனே சிறந்த அறிமுகங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

”சீனி கம்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது தபுவுக்கு வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்த முறை ரிஷிகபூர் கைப்பற்றியிருக்கிறார். “குரு” திரைப்படத்துக்கு இசையமைத்தற்காக சென்ற ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

0 comments: