Wednesday, March 26, 2008

1980க்கு போகலாமா?

கடந்து போன பாதைக்கு திரும்ப செல்லமுடியும். கடந்த காலத்துக்கு போக முடியுமா? லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர், இரட்டை ஜடையோடு தாவணி, பெல்பாட்டம் பேண்ட், ஒரு தலை ராகம் சினிமா, அட்லாஸ் சைக்கிள், ஹார்ன் கட்டி ஒளிபரப்பபடும் திருவிளையாடல் பட வசனங்கள், எக்ஸ்போ சலூன் - ஸ்டெப் கட்டிங் இந்த விஷயங்களெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்டது. நாற்பதை கடந்தவர்களுக்கு இனம்புரியாத ஏக்கத்தையும், இருபதுகளில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு குறுகுறுப்பையும், பழசை அறியக்கூடிய ஆவலையும் தரக்கூடியது.

சாலையில் பயணிக்க வாகனத்தை பயன்படுத்துவது போல, காலத்தில் பயணிக்க கால இயந்திரம் இருந்தால் மட்டுமே இவற்றை நேரில் கண்டுகளிக்க இயலும். கால இயந்திரம் எதற்கு? சினிமாவே போதுமே!

1980களின் முற்பகுதியில் நடப்பது போன்ற கதையமைப்போடு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் சுப்பிரமணியபுரம். மதுரைக்கு அருகிலிருக்கும் பகுதியான சுப்பிரமணியபுரத்தை சுற்றி கதை நடப்பது போல இருப்பதால் இந்த டைட்டில். நண்பர்களுக்குள்ளான மோதலும், கூடலும், காதலும், சாதலும், பிரிதலும், இன்னும் நிறைய ‘லும்'ஐ திரையில் காட்டுவது தான் இயக்குனரின் நோக்கமாம். 1980களில் நடக்கும் கதை என்பதால் உடைகளில் மட்டுமல்லாமல் லொக்கேஷனிலும், ஆர்ட் டைரக்சனிலும் ரொம்பவும் கவனம் செலுத்தி செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை-600028 படத்தில் நடித்த ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு படங்களில் நடித்த ஸ்வாதி கதாநாயகி. கஞ்சாகருப்பு, சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். பாலா, அமீர் ஆகியோரிடம் பணிபுரிந்த சசிகுமார் தயாரித்து, இயக்கி, நடித்துமிருக்கிறார். இசை : ஜேம்ஸ் வசந்தன்


























0 comments: