Saturday, March 8, 2008

மகளிர்தின வாழ்த்துக்கள்!


”உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், ஒரு பெண். அன்பு, ஆதரவு, பகிர்தல் இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!

சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்கள்!!

0 comments: