Saturday, March 29, 2008

ரஜினியோடு எப்போது நடிக்கப் போகிறேன்? - கமல் பேட்டி!


கடந்த இரு ஆண்டுகளாக பத்திரிகையாளர்களிடமிருந்து விரும்பி வனவாசம் பெற்றிருந்த உலகநாயகன் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். ‘தசாவதாரம்' படம் கில்லி மாதிரி வந்திருப்பதாக சொல்லி மகிழ்பவர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியும் தந்திருக்கிறார். உலகநாயகனின் கருணைப்பார்வை எப்போது தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திரும்புமோ தெரியவில்லை. அளந்து அளந்து பேசும் வாடிக்கை கொண்ட கமல் இந்தப் பேட்டியிலும் தசாவதாரம் படம் குறித்த பெரியதான எந்த ரகசியத்தையும் வெளியிடாமல், எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயங்களையே பேசியிருக்கிறார்.

“நவராத்திரி திரைப்படத்தில் நடிகர்திலகம் ஒன்பது விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஒரே ஒரு எண்ணை மட்டும் கூட்டி பத்து வேடங்களில் தசாவதாரம் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். திரை உழைப்பாளிகளின் இரண்டு ஆண்டு கடின உழைப்பு இத்திரைப்படம். தமிழ் திரையுலகில் மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது தான். தயாரிப்பாளரும் இருமடங்கு செலவு அதிகமாக செய்திருக்கிறார். படம் ஆரம்பித்த நாளில் இருந்தே தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை தவிர வேறெதையும் நான் கண்டதில்லை.

இப்படம் வாசகனுக்கு காட்டக்கூடிய ஒரு பரிணாமம் இந்தியத் திரைப்படங்களில்.. ஏன் உலகத் திரைப்படங்களில் கூட இதுவரை வந்ததில்லை. பண்ணிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றை கூட எந்தவித குழப்பமும் இல்லாமல், எளிதில் ரசிகன் அணுகக்கூடிய அணுகுமுறையில் படமாக்கியிருக்கிறோம். படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு ஜாக்கிசான் வருகிறார் என்றாலே பார்த்துக் கொள்ளுங்கள், எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து வருகிறோம் என்பதை.

என்னுடைய நண்பர் ரஜினியோடு நான் நடிக்கப் போகிறேன் என்ற அதிரடி வதந்தி அவ்வப்போது எழுந்து எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இருவரும் சேர்ந்து நடிப்பது என்பது செலவுரீதியாக சாத்தியமில்லாதது. மிகப்பிரம்மாண்டமான ஒரு இந்திப் படத்தின் மொத்த பட்ஜெட்டுமே எங்கள் இருவரின் சம்பளத்துக்கு நிகரானதாக இருக்கிறது.

அதற்காக இது நடக்கவே நடக்காது என்று சொல்வதற்கில்லை. எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியப்படும். எங்கள் இருவரையும் இணைத்து மணிரத்னம் இயக்கப்போவதாக ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் இல்லை, ஸ்க்ரிப்ட்டும் அமையவில்லை. ஒருவர் நடிக்க இன்னொருவர் தயாரிப்பதாக தான் பேசினோம்.

நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் அதன்பிறகு தமிழில் படமெடுக்க மிச்சம் என்னமிருக்கும்? தொழிலை பொறுத்தவரைக்கும் இன்றைக்கும் நானும், ரஜினியும் போட்டியாளர்கள் தான். ஆயினும் எங்களது திறமையை, உழைப்பை இருவருமே எவரெஸ்ட் அளவுக்கு மதிக்கிறோம்”

இவ்வாறாக அதிரடியாக பேட்டியளித்திருக்கிறார் உலகநாயகன்.

0 comments: