Monday, March 3, 2008

சந்திரமுகி மீண்டும் சாதனை!


சிவாஜிக்கு முந்தைய சூப்பர் ஸ்டாரின் ‘சந்திரமுகி' 700 நாட்கள் ஓடி தமிழில் சாதனை புரிந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆனது. பெரிய நடிகராக இருந்தபோதிலும் படத்தில் முழுமையான கதாநாயகன் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லாத வகையில் சிறிய கேரக்டரிலேயே ரஜினி வித்தியாசமாக நடித்திருந்தார். ஜோதிகாவின் முழுத்திறமையையும் வெளிக்காட்டிய படம் சந்திரமுகி.

மணிசித்திரத்தாழ் என்ற மலையாள திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் கேரளாவிலும் சந்திரமுகி சக்கை போடு போட்டது. மணிசித்திரத்தாழ் திரைப்படம் கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிக்க 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியாகி ஒரு வருடம் ஓடியது. ஆப்த மித்ராவை பார்த்த பின்னரே சூப்பர் ஸ்டார் சந்திரமுகியில் நடிக்க முடிவு செய்தார்.


இந்நிலையில் கடந்த ஆண்டு ப்ரியதர்ஷன் சந்திரமுகியை இந்தியில் ”போல் புல்லையா” என்ற பெயரில் ரீமேக் செய்தார். அது சரியாகப் போகவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகியே இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்தவாரம் வட இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு கிடைத்த வரவேற்பையொட்டி 150க்கும் மேற்பட்ட ப்ரிண்டுகள் போடப்பட்டு வெளியாகியிருக்கிறது. டப்பிங் படங்களுக்கு பொதுவாக இவ்வளவு ப்ரிண்டுகள் போடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

0 comments: