கிட்டத்தட்ட தனது முப்பது ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை எட்டவிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அடுத்ததாக வரவிருக்கும் அரசாங்கம் அவர் நடித்து வெளிவரும் 150வது திரைப்படம். தமிழில் மட்டுமே நடித்து இந்த சாதனையை செய்யப்போகும் முதல் நடிகர் கேப்டனாக மட்டுமே இருக்கமுடியும்.
நூறாவது திரைப்படத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றவர்களில் முதலிடத்தில் இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். அவர் நடித்த நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் வெளியாகி கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு அவரது நூற்றி ஐம்பதாவது திரைப்படமாக அரசாங்கம் வெளிவருகிறது.
கேப்டனின் படங்களில் அடிதடிக்கும், அதிரடிக்கும் முக்கியத்துவம் தரும் வகையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கும். அவ்வாறில்லாமல் இப்படத்தில் காதல், மசாலா, கவர்ச்சி என்று இதர அம்சங்களையும் கலந்து கட்டி அடித்திருக்கிறாராம் கேப்டன். ஒரு அரசியல் கட்சித் தலைவராக அவர் உயர்ந்தபின் வரும் திரைப்படம் என்பதால் பஞ்ச் டயலாக், கட்சி கொள்கை சார்பான வசனங்கள் இப்படத்தில் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தானாம். ஒரு காட்சியில் கூட கட்சிக் கொடியையோ, கட்சி சார்பான வசனங்களையோ பேசாமல் நடித்திருக்கிறாராம் கேப்டன்.
எல்.கே.சுதீஷ் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார். நவ்நீத், செரில் ப்ரிண்டோ என்ற இரட்டை கதாநாயகிகள் கவர்ச்சியிலும், காதலிலும் கலக்கியிருக்கிறார்களாம். சண்டைக்காட்சிகளில் ஹாலிவுட் கலைஞர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் கேப்டன் காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் பயிற்சியாளர் வேடம் ஏற்றிருக்கிறார். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
மார்ச் 28 அன்று படத்தின் இசைத்தட்டு வெளியீடு நடைபெறவிருக்கிறது. முதல் நாளிலேயே ஒரு லட்சம் இசைத்தட்டினை விற்று சாதனை புரியவிருக்கிறது அரசாங்கம். அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்தும் கூட நூற்றுக்கணக்கான இசைத்தட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். கேப்டன் ரசிகர்களை குஷிப்படுத்த படம் அனேகமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெள்ளித்திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, March 27, 2008
அதிரடியாக வருகிறது கேப்டனின் அரசாங்கம்!
Posted by PYRAMID SAIMIRA at 3/27/2008 12:09:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment