Thursday, March 6, 2008

”ஃ” - திரை விமர்சனம்


பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஸ்பீட்' என்ற பெயரில் வந்த ஆங்கிலப் படத்தை மறந்திருக்க மாட்டீர்கள். அதே படத்தை தழுவி கொஞ்சம் தமிழ்மண் வாசனையோடு வந்திருக்கும் படம் “ஃ”. படத்தின் தலைப்பே படம் வித்தியாசமானது என்பதை சொல்லிவிடுகிறது.

காதலர்களை பிரிக்க காதலியின் அண்ணன் சதி செய்கிறார் என்ற 1950களில் சொல்லப்பட்ட கதை தான் என்றாலும், திரைக்கதை மற்றும் இயக்கத்தில் மாறுபட்டு நிற்கிறார் படத்தின் இயக்குனர் மாமணி. தீவிரவாதியான காதலியின் அண்ணன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார். தங்கையை காதலிப்பவனை கொல்லவேண்டும், அதே நேரத்தில் சென்னை மாநகரத்தையும் தகர்க்கவேண்டும்.

நாயகனின் காலில் ஒரு ரேடியம் ஷூவை கட்டிவிடுகிறார் வில்லன். நாயகன் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். ஓடுவதை நிறுத்தினால் குண்டு வெடித்து சென்னை மாநகரமே சிதறிவிடும். முடிவு என்ன என்பது தான் க்ளைமேக்ஸ்.

படம் தொடங்கியதுமே மிக மெதுவாக நகர்வதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. நாயகன் ஓடத்தொடங்கியதுமே கூடவே நாமும் ஓடுவதைப் போல உணர்வு. படமும் புலிப்பாய்ச்சல் எடுக்கிறது. ஒரு மனிதனால் இவ்வளவு நேரம் ஓடிக்கொண்டே இருக்க முடியுமா? காதில் பூச்சுற்றுகிறார்களா? என்று கேட்டோமானால் அதற்கும் மருத்துவ ரீதியிலான காரணங்களை சொல்லி லாஜிக் காட்டுகிறார்கள்.

காவல்துறை, மருத்துவத்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் என்று குழு குழுவாக நாயகனை காப்பாற்ற போராடுவதும், அவர்களை வில்லன் தன் புத்திசாலித்தனத்தால் தொடர்ந்து முறியடிப்பதும் சுவாரஸ்யம்.

தமிழில் எடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப்படம் "ஃ”. அவசியம் ”ஓட”வேண்டிய திரைப்படம்.

1 comments:

  1. said...

    அப்போ நம்பி டிக்கட் வாங்கலாம் என்று சொல்கிறீர்கள்!