Thursday, December 27, 2007

2007 - வசூலில் கலக்கிய தமிழ் திரைப்படங்கள்!

கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2007ஆம் ஆண்டு தமிழ் திரையுலகுக்கு எதிர்காலத்தில் நினைத்து பரவசப்படக்கூடிய அளவுக்கு வசந்தகாலமாகவே அமைந்திருக்கிறது. இவ்வாண்டு தான் தமிழ்ப்படங்களின் வசூல் சர்வதேச அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்கள் தரும் ஏமாற்றத்தைக் காட்டிலும், கொஞ்சமும் எதிர்பாராத திரைப்படங்கள் வெற்றி பெறும்போது கிடைக்கும் இன்ப அதிர்ச்சியின் அளவு அதிகமானது. வசூல்ரீதியாக மட்டுமல்லாமல் தரம், உள்ளடக்கம், தொழில்நுட்பம் போன்றவற்றிலும் இவ்வாண்டு தமிழ் திரைப்படங்கள் பலபடி முன்னேறியிருக்கிறது. பெரியார், பள்ளிக்கூடம், அம்முவாகிய நான், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற சமூக அக்கறை பேசிய திரைப்படங்கள் சர்வதேச களத்துக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் சென்றிருப்பது கண்கூடு.

வசூல்ரீதியாக அதிரடி வெற்றி பெற்ற சில படங்களை பார்ப்போமா?


போக்கிரி

தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் வசூலில் கிழி, கிழியென்று கிழித்தப் படம். விஜய்-அசின் வெற்றிக்கூட்டணியை சூப்பர்ஹிட் பாடல்களோடு பிரபுதேவா இயக்க பொங்கலுக்கு பற்றிக்கொண்டு எரிந்தது தமிழ்நாடு. விஜய் முதன்முதலாக போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதிரடி சண்டைக்காட்சிகள், சூப்பர் பாஸ்ட் நடனக்காட்சிகள், பிரகாஷ்ராஜின் வித்தியாச வில்லத்தனம் என்று படம் முழுக்கவே வெற்றிப்படத்துக்குரிய அம்சங்கள் ஏராளம்.

மொழி

யாருமே சுலபமாக சிந்திக்கத் தயங்கும் கதைக்களம். சிறப்பான நடிக-நடிகையர் தேர்வு. படம் முழுக்க மெலிதாக கூடவரும் நகைச்சுவை. மக்களின் மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எடுக்கப்பட்ட மொழி வெற்றி பெற்றதில் என்ன ஆச்சரியம்? உராங்-உடான் இப்படம் பார்த்திருந்தாலும் ஒரு காட்சியிலாவது மனம் விட்டு சிரித்திருக்கும். ப்ரகாஷ்ராஜ் + இயக்குனர் ராதாமோகன் + வசனகர்த்தா விஜி + இசையமைப்பாளர் வித்யாசாகர் என்று அசைக்கமுடியாத வெற்றிக் கூட்டணி ஒன்று தமிழ் திரையுலகில் உருவாகியிருக்கிறது. வாய்பேச முடியாதவராக இப்படத்தில் நடித்த ஜோதிகா திருமணத்துக்குப் பின்னும் நடிக்கமாட்டாரா என்று பலரை ஏங்கவைத்தார்.

உன்னாலே உன்னாலே

அமரர் ஜீவா இயக்கி வெளிவந்த கடைசிப்படம். காதலை எப்படி காட்டினாலும் எப்போதும் புதியதாகவே இருக்கும். இப்படத்தில் காட்டப்பட்ட முக்கோணக் காதல் ஒன்றும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் படமாக்கப்பட்ட இடங்கள், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் போன்றவை இப்படத்தை வெற்றிப்படமாக்கியது. புதுமுகம் வினய்க்கும், கதாநாயகி சதாவுக்கும் இப்படம் ப்ரேக் கொடுத்தது என்று சொன்னால் மிகையில்லை.

பருத்திவீரன்

தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை கண்முன் நிறுத்திய படம். திரையில் நடித்தவர்களை பாத்திரங்களாக காணாமல் ரத்தமும், சதையும் கொண்ட மனிதர்களாய் பார்க்கவைத்த உணர்ச்சிப்பூர்வமான இயக்கம். பராசக்தி சிவாஜிக்கு பின்னர் முதல் படத்திலேயே கலக்கலாக ஸ்கோர் செய்த கார்த்தி. ப்ரியாமணி என்ற பெயரை ப்ரியாமணியே மறந்திருப்பார். தமிழ்நாடே 'முத்தழகு, முத்தழகு' என்று கிறங்கிப்போனது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிழக்குச்சீமையிலே, யுவன்ஷங்கர் ராஜாவுக்கு பருத்திவீரன். தமிழர்களுக்கான சர்வதேச படத்தை இயக்கி உலகை தமிழ் சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் அமீர்.


சிவாஜி

சொல்லவும் வேண்டுமா என்ன? சூப்பர் ஸ்டார் + ஷங்கர் + ஏவி.எம். படம் வெளிவருவதற்கு முன்பே அனைவரின் எதிர்பார்ப்புகளையும் எகிறவைத்தது. பலகோடி ரூபாய் செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட அரங்குகளில் படமாக்கப்பட்ட பாடல்காட்சிகள் பல ஆண்டுக்காலம் நம் நினைவில் நிற்கும். சூப்பர் ஸ்டாரை வெள்ளைக்காரராக திரையில் கண்டு ரசிகர்கள் அடித்த விசில் சத்தம் நம் காதுகளில் இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. 2007ன் பெரிய படம் என்று சிவாஜியை கூறுவது தவறு. இதுவரை வந்த தமிழ்படங்களிலேயே பிரம்மாண்டமான படம் என்று சொல்வது தான் சரி. அயல்நாடுகளில் அதிரடியாய் திரையிடப்பட்டு அனைவரையும் மிரட்டிய படம். மலேசியாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் இந்தியத் திரைப்படம். சிவாஜியின் அருமை, பெருமைகளை சொல்லிக்கொண்டே போக ஒரு நாள் போதாது.

சென்னை 600028

அறிமுகமற்ற புதிய இளைஞர்கள், புதிய சிந்தனைகளோடு களமிறங்கி சிக்ஸர்களாக அடித்து ஆடியிருக்கிறார்கள். படம் முழுக்க இருந்த எனர்ஜி வெற்றியின் உச்சிக்கு படத்தில் பங்கேற்றவர்களை அழைத்துச் சென்றிருக்கிறது. இதுபோன்ற தம்மாத்தூண்டு கருவை ஒரு முழுநீள சுவாரஸ்யமான படமாக இயக்குவது இயக்குனர்களுக்கு நிச்சயம் சவால் தான். சவாலை ஏற்று சென்னை-28ஐ வெற்றிப்படமாக்கி காட்டிய இயக்குனர் வெங்கட்பிரபு பாராட்டுக்குரியவர். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெகுவாக பேசப்பட்டது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்தாலே அந்தப் படம் வெற்றிப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மலைக்கோட்டை

சரிவிகிதத்தில் கலந்துதரப்பட்ட மசாலா டானிக். டானிக் இனிப்பாக இருந்ததால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. சில காலமாக விஷால் நடிக்கும் படம் என்றாலே குறைந்தபட்ச வசூல் நிச்சயமாகிவிட்டது. ரஜினி, விஜயை தொடர்ந்து விஷாலும் வசூல்ராஜாவாக உருவெடுத்து வருகிறார். பருத்திவீரனில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியாமணி அதற்கு அடுத்த படமான மலைக்கோட்டையில் அதிரடி கவர்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்கள் இரண்டையும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொல்லாதவன்

இப்படித்தான் இந்தப் படம் இருக்கும் என்று எந்த எதிர்ப்பார்ப்பையும் வெளியீட்டுக்கு முன்னால் இப்படம் ரசிகர்களுக்கு தரவில்லை. அதுவே இப்படத்தின் வெற்றிக்கு அச்சாணி என்றும் சொல்லலாம். அறிமுக இயக்குனராக இருந்தபோதிலும், வெற்றிமாறன் திரைக்கதையில் புகுத்தியிருந்த நவீன கதை சொல்லும் பாணி பலருக்கும் பிடித்திருந்தது. கதாபாத்திரத்துக்கு அச்சு அசலாக பொருந்தி தனுஷ் அசத்தினார். ஒளிப்பதிவு, இசை என்று எல்லாத் துறைகளும் கைகொடுக்க பெயருக்கு ஏற்றாற்போல 'வெற்றி'மாறன் ஆகிவிட்டார் இயக்குனர்.

வேல்

இயக்குனர் ஹரி படம் என்றாலே குடும்ப செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை எல்லாம் கலந்திருக்கும். இப்படமும் விதிவிலக்கல்ல. சூர்யாவின் இரட்டை வேடம், அசின், வடிவேலு என்று வெற்றிப்படத்துக்குரிய நட்சத்திர அம்சமும், தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் ஜாலியான குடும்ப படம் என்ற தகுதியும் இருந்ததால் வசூலில் ராஜநடை போட்டார் வேல். இரண்டு கதாநாயகர்களுக்கு இரண்டு கதாநாயகிகள் என்றில்லாமல் ஒரே ஒரு சூர்யாவுக்கு மட்டுமே இணை இருந்தது என்பது மற்ற இரட்டைவேட படங்களிலிருந்து இதை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

பில்லா

இளைய தளபதிக்கு போக்கிரி எப்படி சூப்பர் ஹிட்டோ அதுபோல ‘தல'க்கு பில்லா. ஸ்டைலான படமாக்கம், ஏற்கனவே படத்துக்கு எகிறியிருந்த எதிர்ப்பார்ப்பு, எப்போதும் கைகொடுக்கும் அண்டர்வேர்ல்டு டான் கதை, ப்ரெஷ்ஷான அஜித், கவர்ச்சிப் புயல்கள் நயன்தாரா, நமீதா, விஷ்ணுவர்த்தனின் அதிரடி இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவில் கலக்கல் இசை, மலேசியாவின் அழகை அள்ளி எடுத்த நீரவ்ஷாவின் கேமிரா என்று ஹாலிவுட்டுக்கான பிரம்மாண்டத்தோடு ஆண்டின் கடைசியில் தமிழர்களை மிரட்டி பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.

7 comments:

  1. said...

    வெயில் மற்றும் ஜீவாவின் சில படங்களை விட்டுவிட்டீர்களே

  2. Anonymous said...

    Where is ATM..superhit in US

  3. said...

    இதில் எத்தனை படங்கள் தங்களால் விநியோகிக்கப்பட்டது என்பதை டிஸ்க்ளோஸ் செய்யலாமே...

    வசூல்ரீதியாக அதிரடி வெற்றி பெற்ற சில படங்களை பார்ப்போமா?

    மலைக்கோட்டை எல்லாம் இடம் பெற்றிருக்கிறதா?

    எவ்வளவு லாபம் அல்லது வரவு ஈட்டியது போன்ற விவரங்களைத் தந்தால் நம்பகத்தன்மை இருக்கும். இல்லாவிட்டால், தனி மனிதர் இடும் பட்டியலுக்கும் வர்த்தக ரீதியாக இயங்கும் பதிவிற்கும் வித்தியாசம் இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

  4. said...

    //இதில் எத்தனை படங்கள் தங்களால் விநியோகிக்கப்பட்டது என்பதை டிஸ்க்ளோஸ் செய்யலாமே...//

    மொழி, சிவாஜி, பொல்லாதவன், வேல், பில்லா படங்கள் எங்களது நிறுவனத்தால் முழுவதுமாக அல்லது சில ஏரியாக்களில் வினியோகிக்கப்பட்டது.

    நாங்கள் வினியோகித்தாலும் சரி, வினியோகிக்காவிட்டாலும் சரி, தமிழ்நாட்டில் வெளியிடப்படும் திரைப்படங்கள் அனைத்துமே 60 சதவிகிதம் எங்களது தியேட்டர்களில் தான் வெளியாகிறது.

    //எவ்வளவு லாபம் அல்லது வரவு ஈட்டியது போன்ற விவரங்களைத் தந்தால் நம்பகத்தன்மை இருக்கும்.//

    DCR REPORT என்று சொல்லக்கூடிய Daily Collection Report அடிப்படையில் விவரங்கள் தருகிறோம். தனித்தனியாக ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவு வசூல் ஆனது என்று தருவது தேவையில்லாதது. இவற்றில் பல படங்கள் இன்னமும் வசூலை குவித்து வரும் நிலையில் முழுமையான பட்டியலை தர இயலாது.

  5. said...

    //இயக்குனர் ராதாபாரதி //

    அது ராதாமோகன் :-)

  6. Anonymous said...

    Sivaji - Grand opening OK. But grand collection??????????????????? (!!!!!!!!!!!!)

  7. said...

    பதிலுக்கு நன்றிகள்.