Wednesday, December 5, 2007

'எவனோ ஒருவன்!' - மாதவன் பேட்டி!


தன்னுடைய சொந்த பட நிறுவனமான லூக்காஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தொடக்கவிழாவில் இனி படம் தயாரிக்க மாட்டேன் என்று மாதவன் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாதவன் தயாரித்து, வசனமெழுதி, நடித்த 'எவனோ ஒருவன்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் தன் படநிறுவனமான லூக்காஸ் பிலிம்ஸை சென்னையில் தொடங்கிவைத்து மாதவன் இவ்வாறாக கூறினார்.

முன்னதாக 'எவனோ ஒருவன்' திரைப்படத்திலிருந்து சில காட்சிகளும், படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு பாடல்காட்சியும் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தின் இயக்குனர் நிஷிகாந்த், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சீமான், பிரமிட் சாய்மீரா நிறுவனத் தலைவர் பிரமிட் நடராஜன், பிரமிட் சாய்மீரா நிறுவன இயக்குனர் பி.எஸ்.சாமிநாதன் போன்றோர் இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அனைவரையும் வரவேற்று பேசிய மாதவன், "ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மிக சுலபமாக திரை நட்சத்திரம் ஆகிவிட்டேன். நட்சத்திரம் ஆவதைக் காட்டிலும் நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது.

மராத்தி மொழியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இது. இப்படத்தை தமிழில் எடுக்கும்போது கதாநாயகனாக நடித்த நான் படத்தின் கதையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு நானே தயாரிக்க விரும்பினேன். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட படநிறுவனமே லூகாஸ் பிலிம்ஸ். லூகாஸ் என்பது ஒரு கிரேக்க கடவுள். நடிகனாக நடித்துவிட்டு போகும்போது எந்த வலியுமில்லை. ஆனால் ஒரு தயாரிப்பாளர் நிலையில் தான் திரையுலகின் கஷ்ட நஷ்டங்களை என்னால் உணரமுடிந்தது.

நல்லவேளையாக பிரமிட் சாய்மீரா நிறுவனம் இருந்ததால் தப்பித்தேன். பிரமிட் சாய்மீராவின் இயக்குனர் சாமிநாதன் எனக்கு ஒரு உதாரண மனிதர். இப்படத்துக்கு நானே வசனம் எழுதியிருக்கிறேன். நடைமுறை வாழ்க்கையில் பேசும் சொற்களையே படத்தின் வசனத்துக்காக பாவித்திருப்பதால் வசனமெழுதுவதில் சிரமம் அதிகமில்லை. இயக்குனர் சீமான் வசனமெழுத ஊக்குவித்து உதவினார். 42 நாட்களில் முடிக்கவேண்டிய படப்பிடிப்பினை 27 நாட்களிலேயே மிக அருமையாக படம்பிடித்து தந்திருக்கிறார் இயக்குனர் நிஷிகாந்த். இத்தனைக்கும் நிஷிகாந்துக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது. இப்படம் மராத்தி மொழியில் வெளியானபோது தேசியவிருது மற்றும் 33 சர்வதேச விருதுகளை பெற்றது.

இந்தப் படத்தை பாருங்கள். நன்றாக இருந்தால் நன்றாக இருந்தது என்று எழுதுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நன்றாக இல்லை என்றே எழுதுங்கள். படம் ஏன் நன்றாக இல்லையென்றாவது மக்கள் வந்து பார்ப்பார்கள். ஆனால் தயவுசெய்து எதையாவது எழுதுங்கள். எழுதாமல் விட்டுவிட்டால் மக்களைப் போய் நல்லபடங்கள் சேராது" என்றார்.

அடுத்ததாக பேசிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் இயக்குனர் பி.எஸ். சாமிநாதன், "ஒரு நடிகன் தான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் சிறப்பை உணர்ந்து தானே அப்படத்தை தயாரிக்க முன்வந்திருப்பது தமிழ் திரையுலகின் ஒரு அற்புதமான நிகழ்வு. மாதவனின் பொறுப்புணர்ச்சி எனக்கு நெகிழ்ச்சியை தருகிறது. அவரது நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள அவர் போராட வேண்டியதேயில்லை. அவரது பொறுப்புணர்ச்சி காரணமாக எப்போதும் அவர்வசமே இருக்கும்

இப்படத்தை பார்த்தேன். தரமான படம். தரமான படங்கள் வெற்றி பெறுமா? பெறாதா? என்றெல்லாம் சந்தேகம் கொள்ளவே தேவையில்லை. நல்ல படமாக இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார்.

இயக்குனர் சீமான் பேசும்போது, "இப்படம் எடுக்க நினைக்கும் போது இயக்குனர் நிஷிகாந்த் நான் மாதவனை வைத்து தம்பி இயக்கியபோது படப்பிடிப்பில் எடுத்த சில வண்ணப்படங்களை பார்த்திருக்கிறார். பார்த்தவுடனேயே என்னைக் காட்டி, இவர்தான் நம் படத்தில் நடிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். திறமையான பல நடிகர்கள் இருக்க நம்மை ஏன் இவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தெரியாமல் குழம்பினேன். இப்படத்தின் மூலப்படமான மராத்திப் படத்தை காணும்போது தான் புரிந்தது. அந்தப்படத்திலும் என்னைப் போன்றே கருப்பாக, காட்டான் ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசியவர் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் பிரமிட் நடராஜன். இவர் பேசும்போது, "ஒரு நடிகர் தான் படத்தில் நடித்தோமா, சம்பளம் வாங்கினோமா, அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்தோமா என்றிருக்காமல் தான் நடித்த படத்தின் வணிகம் மற்றும் விளம்பரங்களில் பங்கேற்க வேண்டும். ரஜினி, கமல் போன்ற நடிகர்களெல்லாம் தாங்கள் இடம்பெறும் திரைப்படத்தில் நடிப்பு மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு பொறுப்பை விநியோகம், வணிகம் போன்று எடுத்துக் கொள்கிறார்கள். அதைப் போன்றே மாதவனும் தான் நடிக்கும் படத்தின் பொறுப்பை தன் தலையில் சுமக்க முன்வந்திருக்கிறார். இந்தப் படத்துக்காக மாதவன் செலவழித்த நாட்களில் அவர் இன்னும் இரண்டு படங்கள் நடித்திருக்கலாம். எங்கள் நிர்வாக இயக்குனர் சொன்னபடி மாதவனின் பொறுப்புணர்ச்சி அவரது அந்தஸ்தை தக்கவைக்கும். நல்ல படம் எடுக்க நினைத்தவர்கள் கண்டிப்பாக வெற்றி அடைவார்கள். தமிழர்களின் ரசனை மீது நம்பிக்கை வைத்து தமிழே தெரியாத இயக்குனர் ஒருவர் தரமான படத்தை தமிழில் வழங்கவேண்டும் என்று முன்வந்திருப்பது நமக்கு கிடைத்த கவுரவம்" என்றார்.

இயக்குனர் நிஷிகாந்த், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போன்றோர் பேசிய பின்னர் 'எவனோ ஒருவன்' ஒருவன் திரைப்படத்தின் அலுவலகப்பூர்வமான இணையத்தளம் இயக்கிவைக்கப்பட்டது.

கடைசியாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் மாதவன் பதிலளித்தார்.


கேள்வி : ஸ்ருதி கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வருவதே?

மாதவன் : அத்திட்டம் பேச்சுவார்த்தை நிலையில் தான் இருக்கிறது. இன்னமும் உறுதியாகவில்லை.


கேள்வி : ரஜினி, கமல் போன்றவர்கள் இந்திக்கு சென்று காலூன்றமுடியாமல் மீண்டும் தமிழுக்கே வந்து வலுவடைந்தார்கள். நீங்களும் அடிக்கடி இந்திப்படங்களில் நடிக்க படையெடுத்து சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றிருந்தால் இங்கிருக்கும் உங்கள் இடம் பறிபோய்விடாதா?

மாதவன் : இன்றைய காலக்கட்டத்துக்கு இரண்டு கால் பத்தாது. அதனால் தான் நிறைய கால்களை அங்கங்கே ஊன்றி வைத்திருக்கிறேன்.


கேள்வி : எவனோ ஒருவனின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், வசனகர்த்தாவாகவும் களமிறங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எப்போது படம் இயக்குவீர்கள்?

மாதவன் : இந்தப் படம் எனக்கு கொடுத்த அனுபவமே போதுமானது (சிரிப்பு). இனிமேல் படம் இயக்குவதோ, தயாரிப்பதோ என்ற எண்ணத்தில் இல்லை. ஒழுங்காக நடித்தால் அதுவே போதும் என்றிருக்கிறேன்.


கேள்வி : அப்போது உங்கள் லூக்காஸ் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமும், கடைசிப் படமும் இதுதானா?

மாதவன் : ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொன்னேன். அப்படியே எடுத்துக்கறீங்களே? நல்ல படம் தயாரிக்கும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் லூக்காஸ் பிலிம்ஸ் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும். தயாரிப்பு மட்டுமன்றி விநியோகம் போன்ற மற்ற வணிகங்களை செய்யவும் லூக்காஸ் பிலிம்ஸ் தயாராக இருக்கும்.


கேள்வி : எவனோ ஒருவன் படத்தின் மூலமாக நேர்மையானவன் இந்தியாவில் வாழமுடியாது என்ற செய்தியை சொல்ல வருகிறீர்களா? இப்படத்தை வெளிநாடுகளில் திரையிட்டிருக்கிறீர்கள். அங்கு வாழ்பவர்கள் இந்தியாவைப் பற்றி கேவலமாக நினைக்க மாட்டார்களா?

மாதவன் : நேர்மையாக, சராசரியாக வாழ்வதில் ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் சிக்கல்களையே நேர்மையாக சொல்லியிருக்கிறோம். இதில் ஒளிவு, மறைவு எதுவும் கிடையாது.


கேள்வி : நான் கேட்ட கேள்வி வேறு, நீங்கள் சொன்ன பதில் வேறு?

மாதவன் : நீங்கள் ஆமாவா? என்று கேட்டீர்கள். நான் ஆமாம் என்று சொல்லியிருக்கிறேன்.


இவ்வாறாக ருசிகரமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து முடிந்தது. டிசம்பர் 7ஆம் தேதி 'எவனோ ஒருவன்' வெளியிடப்படுகிறது. உலகெங்கும் இத்திரைப்படத்தை பிரமிட் சாய்மீரா குழுமம் வெளியிடுகிறது.

0 comments: