Wednesday, December 5, 2007

"ஒன்பது ரூபாய் நோட்டு!"" - 100 தியேட்டர்களில் முதன்முறையாக 'மக்கள் காட்சி'!


கலையின் இன்றியமையாத வடிவங்களில் ஒன்றாக திரைப்படம் இன்று மாறியிருக்கிறது. திரைப்படம் என்பது பொழுதுபோக்குக்கு மட்டுமானது அல்ல. மக்களின் வாழ்க்கையை, மண்ணின் மணத்தை, உள்ளத்தில் புதைந்துப்போன உணர்ச்சிகளின் எழுச்சியை படம்பிடித்துக் காட்டுவது. இந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் திரைப்படம் 'ஒன்பது ரூபாய் நோட்டு'

இயக்குனர் தங்கர்பச்சான் எழுதிய நாவல் ஒன்று அவராலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. பெரியார் திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்துகாட்டிய சத்யராஜ் இத்திரைப்படத்தில் மாதவன் படையாச்சியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அர்ச்சனா, நாசர், ரோகிணி போன்ற நட்சத்திரங்களின் நடிப்பில் பரத்வாஜ் இசையில் உருவான இத்திரைப்படம் சென்றவாரம் திரையரங்குகளில் வெளியானது.

பெரிய நடிகர்களின் படங்கள் போன்ற பெரிய ஓபனிங் இதுபோன்ற திரைப்படங்களுக்கு கிடைப்பதில்லை. ஊடகங்களின் விமர்சனமும், மக்களின் வாய்மொழி விளம்பரங்களும் இதுபோன்ற திரைப்படங்களுக்கு உதவாவிட்டால் வணிகரீதியான வெற்றிவாய்ப்பை இதுபோன்ற படங்கள் இழப்பது வழக்கம். நல்ல படம் என்றாலே வணிகரீதியாக ஓடாது என்ற ஒரு எண்ணமும் மக்களுக்கு இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பிலோ, வினியோகத்திலோ, வணிகத்திலோ பிரமிட் சாய்மீராவுக்கு எந்த பங்கும் கிடையாது. இருப்பினும் இத்திரைப்படத்தை பார்த்த பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பி.எஸ்.சுவாமிநாதன் 'நல்ல படம் நிச்சயம் மக்களை அடையவேண்டும்' என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார்.

வரும் ஞாயிறு 9-12-2007 அன்று காலை 11.30 மணிக்காட்சி பிரமிட் சாய்மீராவின் 100 தியேட்டர்களில் 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரையிடப்படும். யாரும் திரையரங்குக்கு கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டியதில்லை. படம் பார்த்து முடித்தவர்கள் படம் பிடித்திருந்தால், இதுபோன்ற திரைப்படங்கள் இனியும் தமிழில் வரவேண்டும் என்பதற்காக திரையரங்கின் வெளியே வைத்திருக்கும் பெட்டியில் தங்களால் ஆன தொகையை செலுத்திவிட்டு செல்லலாம். படம் பிடிக்கவில்லையென்று கூறுபவர்கள் எந்த தொகையையும் செலுத்த தேவையில்லை. அப்பெட்டியில் போடப்படும் பணமும் கூட பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கு சேராது. அருமையான அத்திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளருக்கே போய் சேரும். வணிக, சுயநல நோக்கம் எதுவுமின்றி திரையுலக நன்மைக்காக இத்திட்டத்தை நிறைவேற்ற பிரமிட் சாய்மீரா நிறுவனம் முன்வந்திருக்கிறது.

நம் மண்ணின், மக்களின் வாழ்க்கையை படம் பிடிக்கும் திரைப்படங்கள், ரசனைக்குரிய நல்ல திரைப்படங்கள் இனியும் தமிழில் அதிகமாக வரவேண்டும் என்பதே பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் நோக்கம். பிரமிட் சாய்மீரா தயாரிக்காத, விநியோகிக்காத திரைப்படமாக அந்தப் படம் இருந்தாலும், அப்படத்துக்கான தன் ஆதரவுக்கரத்தை பிரமிட் சாய்மீரா தந்தே தீரும்.

வரும் ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்காட்சி ஒன்பது ரூபாய் படத்தை 'மக்கள் காட்சியாக' பார்க்க விரும்புபவர்கள் 044-46464646 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்கள் பெயர், தாங்கள் வசிக்கும் நகரம்/ஊர் பெயரை சொன்னால், நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலிருக்கும் பிரமிட் சாய்மீரா திரையரங்கில் உங்களுக்கான இருக்கை உறுதிசெய்யப்படும். படம் பிடித்திருந்தால் மட்டுமே விரும்பிய கட்டணத்தை நீங்களாகவே செலுத்தலாம். கட்டணம் செலுத்தவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

இந்த காட்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. படத்தின் கதாநாயகன் சத்யராஜ், கதாநாயகி அர்ச்சனா, நாசர், ரோஹிணி மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் கலந்துகொண்டனர். பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் பிரமிட் நடராஜன், நிர்வாக இயக்குனர் சாமிநாதன், இயக்குனர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். திரையுலகில் முதன்முறையாக இதுபோன்ற முயற்சியை பிரமிட் சாய்மீரா நிறுவனம் எடுத்திருப்பதாக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் பேசினர். தங்கள் படத்தை எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்கு கொண்டு செல்லும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

13 comments:

  1. யாத்ரீகன் said...

    நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள்

  2. Anonymous said...

    பிரமிட் சாய்மீரா நிர்வாக இயக்குநரின் இந்த புதிய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்.

    முயற்சித்திருவினையாக்கட்டும்.

    தங்கர் பச்சானும் சற்றே நாகாத்து இன்னும் பல நல்ல புதினங்களை திரையோவியமாக்கி சிறப்பளிக்கட்டும்.

    அன்புடன்
    முத்து

  3. புரட்சி தமிழன் said...

    ஒன்பது ரூபா நோட்டை நாமும் செல்லவைப்போமே

  4. ஒப்பாரி said...

    வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்.

  5. SP.VR. SUBBIAH said...

    திரு. பி.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் உயரிய நோக்கத்திற்கும் நல்ல மனதிற்கும் பாராட்டுக்கள்

  6. வெ. ஜெயகணபதி said...

    முதலில் சாய்மீரா நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...!

    தகவலுக்கு நன்றி.. தாங்கள் கொடுத்த எண்ணுக்கு தொடர்புகொண்டேன். 11.30 மணி காட்சிக்கான அனைத்து சென்னை திரையரங்குகளும் தெரிவித்தார்கள்.. ஆனால் இருக்கை பற்றி அவர்கள் உறுதிசெய்யவில்லை. இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று தெரிவித்தார்கள்.

  7. Balloon MaMa said...

    படம் நல்ல படமா இல்லையா என்பதை நான் பேசப்போவது இல்லை. கூட்டுக் கொள்ளையாய் நடந்து வரும் சினிமா (தமிழக/இந்திய) உலகில் கோடிகளைக் குவிக்கும் நடிகனும் சரி, தயாரிப்பு,விநியோகம்...இன்னபிற விசயங்களில் தொடர்பு கொண்ட சினிமாக்காரர்கள் யாரும் படம் பார்ப்பவன் குறித்து சிந்தித்தது கிடையாது. அப்படிச் செய்து இருந்தால் கக்கூஸ் பராமரிக்காத தியேட்டரில் எனது படம் வராது என்று என்றோ சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்து இருப்பார்கள். நிறைய இருக்கு பேச...

    ***

    தான் நல்ல படம் என்று நம்பிய ஒன்றை , அனைத்து தரப்பு மக்களுக்கும் அது செல்லவேண்டும் என்று நினைத்துச் செயல்படும் உங்களின் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள்.

    //படம் பிடித்திருந்தால் மட்டுமே விரும்பிய கட்டணத்தை நீங்களாகவே செலுத்தலாம். கட்டணம் செலுத்தவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.//

    காசு போடுவார்களா என்று தெரியாது. ஆனால், பூனைக்கு யார் மணிகட்டுவது? நீங்கள் கட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

    ***

    மாதத்தில் ஒரு நாள் , இது வியாபார நோக்கில் இல்லாத நல்ல படங்களை அல்லது குறும்படங்களை உங்களின் அனைத்து அரங்குகளிலும் இப்படித் திரையிடலாம். அது போல் பிறமொழிப் (உம்:ஈரானிய ) படங்களை தமிழ் டப்பிங்குடன் இப்படித் திரையிடலாம்.

    ***

    தயவு செய்து திரையிடும்போது அதிக பட்ச விளம்பரங்களைச் சேர்த்துவிட வேண்டாம்
    **

    பலமுறை உங்களின் இந்த பிளாக்கை கண்டு வெறுப்படைந்து உள்ளேன். ( கட்டழகி நமீதா போன்ற பதிவுகள், ... பல காரணக்களுக்காக..) ஆனால் , இந்த நல்ல செயலைப் பாரட்டியே ஆக வேண்டும்.

  8. சிவபாலன் said...

    Hats Off!

  9. Mani - மணிமொழியன் said...

    Nalla muyarchi.

  10. nagoreismail said...

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

  11. manjoorraja said...

    உங்களது நிறுவனத்தின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    நண்பர் கல்வெட்டு சொல்வது போல உலக தரம் வாய்ந்த சிறந்த படங்களையும் இவ்வாறு நீங்கள் தொடர்ந்து வெளியிட முயற்சிக்கலாம். இதன் மூலம் தமிழ் மக்களின் ரசனையில் ஓரளவுக்கு மாற்றம் வரக்கூடும்.

  12. Anonymous said...

    Bold and positive action.

    Well done..

  13. Anonymous said...

    such a different thinking made by Mr. Thankarbachan.

    and all the charaters done their job well.

    expecting films like this