Friday, December 28, 2007

”ஹோச முங்காரு”


”ஹோச முங்காரு” - சீனமொழியிலோ, அல்லது வேறு மொழியிலோ உங்களை திட்டுவதாக நினைத்து விடாதீர்கள். ”ஹோச முங்காரு” என்றால் படுகர் இனமொழியில் ”புதுவசந்தம்” என்று அர்த்தமாம். கோவை, திருப்பூர், பெங்களூர் பகுதிகளில் படுக இனத்துமக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். “ஹோச முங்காரு” என்ற பெயரில் படுகர் மொழியில் ஒரு திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சில காலமாக படுகமொழியில் ஆவணப்படங்கள் நிறைய வந்துகொண்டிருக்கிறது. படுக இனமக்களின் பிரச்சினைகளை பேசும் விதமான முயற்சிகள் திரையில் எடுக்கப்பட்டு வருகிறது. கார்த்திக் கதாநாயகனாக நடித்த ‘சோலைக்குயில்' திரைப்படம் படுகர் இனமக்களை படம் பிடித்து காட்டியது. படுகர் இனம் குறித்து தமிழில் தயாராகும் படம் ஒன்றினை குறித்த நமது பழைய பதிவு இங்கே.

படுகர்களின் மொழி கிட்டத்தட்ட கன்னடம் போலிருக்கும். தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் இத்திரைப்படத்தை ஒரேநாளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ”கற்க கசடற” திரைப்படத்தில் வில்லனாக நடித்த அமெரிக்கவாழ் இந்தியரான ஜாக்ராசே கதாநாயகனாக நடிக்கிறார்.
பார்த்திபன், சாமி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிவேலன் இப்படத்தை இயக்குகிறார். வெற்றிவேலனும் படுகர் இனத்தைச் சார்ந்தவரே.