Thursday, December 20, 2007

பேரு பெத்த பேரு!!

தமிழ் திரையுலகில் பெயர் வாங்குவது என்பது பெரிய விஷயம். இப்பதிவு அந்த பெயர் பற்றியல்ல, ஒவ்வொருவரையும் அழைக்கும் பெயர் பற்றியது. 'பக்கோடா' காதர், 'ஓமக்குச்சி' நரசிம்மன், 'படாபட்' ஜெயலஷ்மி என்று தமிழ் சினிமா கலைஞர்களின் பெயர்கள் அமைந்த விதம் நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அதுபோன்ற சில காரணப்பெயர்களின் காரணங்களை பார்ப்போமா?

'மவுனம்' ரவி - மவுனம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியவர். அதனால் இவரோடு மவுனம் ஒட்டிக் கொண்டது. பிரமிட் சாய்மீரா குழுமத்தின் அதிகாரப்பூர்வமான திரைப்பத்திரிகைத் தொடர்பாளர்களில் இவரும் ஒருவர்.

'வெண்ணிற ஆடை' மூர்த்தி - இவர் நடித்த முதல் திரைப்படம் என்பதால் வெண்ணிற ஆடை இவர் பெயரின் மீது போர்த்தப்பட்டு விட்டது.

'மேஜர்' சுந்தரராஜன் - மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக நடித்ததால் ராணுவத்தில் பணிபுரியாமலேயே மேஜர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது இந்திய இராணுவத்துக்கு தெரியுமா என்று தெரியாது.

'குமரி' முத்து - சொந்தப் பெயர் முத்து. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அதனால் குமரி முத்து.

'மலேசியா' வாசுதேவன் - மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆனதால்.

'பக்கோடா' காதர் - மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் எப்போதும் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

'என்னத்த' கன்னையா - நான் படத்தில் எப்போதும் "என்னத்தைச் செஞ்சி" என்று எப்போதும் சலித்துக் கொள்ளுவார். இன்றளவும் அவர் இந்த "என்னத்தை" விடவில்லை.

'சூப்பர்' சுப்பராயன் - ஒரு கெத்துக்காக தான் சூப்பரை சேர்த்துக் கொண்டாராம்.

'கனல்' கண்ணன் - இதுவும் ஒரு கெத்துக்கு தான்.

'விக்ரம்' தர்மா - முதலில் பணிபுரிந்த படம்.

'ராம்போ' ராஜ்குமார் - அதிரடி சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்ற ஆங்கில திரைப்பட வரிசையான "ராம்போ" இவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ராம்போவாகி விட்டார்.

'காத்தாடி' ராமமூர்த்தி - இவரது உருவத்துக்காக அந்தப் பட்ட பெயர் வழங்கப்படவில்லை. இவர் நடித்த நாடகம் ஒன்றில் பிரபலமான இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் அது.

'நிழல்கள்' ரவி - முதல் படத்தின் பெயர்

'தக்காளி' சீனிவாசன் - கொஞ்சம் புஷ்டியாக இருந்ததால் இவரது கல்லூரி நண்பர்கள் 'தக்காளி' என்று கிண்டல் செய்வார்களாம். 'இவர்கள் வருங்காலத் தூண்கள்' என்ற திரைப்படத்தில் இவரது கேரக்டரின் பெயரும் 'தக்காளி'.

'ஏ.வி.எம்.' ராஜன் - ஏ.வி.எம். என்பது இவரது இனிஷியல் அல்ல. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'நானும் ஒரு பெண்' படத்தில் அறிமுகமானதால் நன்றி விசுவாசத்துக்காக ஏ.வி.எம்.மை இணைத்துக் கொண்டார்.

'குண்டு' கல்யாணம் - காரணம் வேணுமா?

'ஓமக்குச்சி' நரசிம்மன் - காரணம் வேணுமா?

'மீசை முருகேஷ்' - காரணம் வேணுமா?

'ஆரூர் தாஸ்' - யேசுதாஸ் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். மாவட்ட பாசம் காரணமாக 'ஆரூர் தாஸ்' ஆனார்.

'டெல்லி கணேஷ்' - டெல்லியில் இராணுவத்தில் வேலை பார்த்தவர். பேசாம இவருக்கு 'மேஜர்' பட்டம் கொடுத்திருக்கலாம்.

'யார்' கண்ணன் - சக்தி கண்ணன் 'யார்' படத்தை இயக்கியதால் 'சக்தி' போய் 'யார்' ஆனார்.

'ஒருவிரல்' கிருஷ்ணாராவ் - இவருக்கு பத்து விரல்களும் உண்டு. இவர் நடித்த முதல் படத்தின் பெயர் தான் 'ஒரு விரல்'

'கருப்பு' சுப்பையா - ஏற்கனவே திரையுலகில் ஒரு சுப்பையா கொஞ்சம் வெள்ளையாக இருந்ததால் இவர் 'கருப்பு' சுப்பையாவாகி விட்டார்.

'பயில்வான்' ரங்கநாதன் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இவரை இப்படித்தான் அழைப்பாராம். ஆளும் பயில்வான் தான்.


'பூர்ணம்' விஸ்வநாதன் - அவரோட இயற்பெயரே இது தாங்க.

கடைசியாக எல்லோருக்கும் தெரிந்தது தான். 'சிவாஜி' கணேசன். 'சத்ரபதி' என்ற நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியாக நடித்தார். அந்நாடகத்தையும், அதில் நடித்தவரையும் கண்டு வியந்த தந்தை பெரியார் வி.சி.கணேசனை 'சிவாஜி' கணேசனாக்கினார்.

7 comments:

  1. Anonymous said...

    'kuththu' ramya miss pannittingale? :-))))))

  2. Anonymous said...

    சிலுக்கு சுமிதா பெயர்க்காரணம் வரைக.

  3. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    படாபட் ஜெயலக்சுமி

  4. PYRAMID SAIMIRA said...

    //'kuththu' ramya miss pannittingale? :-))))))//

    குத்து படத்தில் அறிமுகமானதால் குத்து ரம்யா. தற்போது தன் பெயரை திவ்யா என்று மாற்றி கொண்டிருக்கிறார்.


    //சிலுக்கு சுமிதா பெயர்க்காரணம் வரைக.//

    முதல் படமான வண்டிச்சக்கரத்தில் அவர் பெயர் 'சிலுக்கு'

    //படாபட் ஜெயலக்சுமி//

    ஒரு படத்தில் வசனம் பேசும் போது அடிக்கடி அவர் பயன்படுத்தும் Catch word "படாபட்". அப்படியே அவர் பெயருடன் இணைந்து கொண்டது.

  5. Tech Shankar said...

    can u please explain about

    Typist Gopu..

  6. NIC said...

    நிச்சயம் இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு புத்துணர்வளிக்கும்..புதுமையான முயற்சி.. வாழ்த்துக்கள் சாய்மீரா..Actor NIcholas..

  7. Anonymous said...

    நிச்சயம் இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு புத்துணர்வளிக்கும்..புதுமையான முயற்சி.. வாழ்த்துக்கள் சாய்மீரா.. Actor.NICHOLAS